’பூவே உனக்காக’ சங்கீதாவின் இரண்டாவது இன்னிங்ஸ்!
காவல் துறை சார்ந்து, அதன் குற்ற விசாரணை சார்ந்து, அதிலுள்ள நுணுக்கமான விவரிப்புகள் சார்ந்து அமைகிற திரைப்படங்கள் சமீபகாலமாகக் கொண்டாடப்படுகின்றன. அந்த வரிசையில் இன்னொன்றாகச் சேர்ந்திருக்கிறது விஷ்ணு வினயன் இயக்கியுள்ள ‘ஆனந்த் ஸ்ரீபாலா’.
அபிலாஷ் பிள்ளை கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு ரஞ்ஜின் ராஜ் இசையமைத்திருக்கிறார். ரோமாஞ்சம், பிரணய விலாசம் படங்களின் வழியே கடந்தாண்டு ரசிகர்களை ஈர்த்த அர்ஜுன் அசோகன் இதில் நாயகனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
பின்தொடரும் தாய்!
ஆனந்த் எனும் பெயர் நாயகனுடையது. அவனது தாயின் பெயர் தான் ஸ்ரீபாலா. ஆதலால், இந்த டைட்டிலே படத்தின் உள்ளடக்கத்தைத் தெள்ளென விளக்கிவிடும்.
பன்னிரண்டு வயதில் தாய் ஸ்ரீபாலாவின் கொலையை நேரில் கண்டவர் ஆனந்த். கொலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முந்தைய நாள், அதில் தொடர்புடையவர்களால் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
அதனைக் கண்ட காரணத்தால், மனநலப் பிரச்சனைக்கு உள்ளாகிறார் ஆனந்த்.
தாயின் நினைவு வரும்போதோ, அவர் தொடர்பாக யாரேனும் பேசும்போதோ, மெல்லத் தன் கட்டுப்பாட்டை இழப்பார். பிறகு, கண் முன்னே தெரியும் தாயின் (சங்கீதா) உருவத்தோடு அவர் உரையாடத் தொடங்குவார். ‘இது ஒரு மனப்பிரமை’ என்று மனநல மருத்துவம் சொன்னாலும், தாயின் அருகாமையை ஆனந்த் விரும்புகிறார்.
ஒருகட்டத்தில், அது அவரது ‘போலீஸ் கனவை’யே குலைத்துப் போடுகிறது.
தாயின் பெயர் கொண்ட காரணத்தாலேயே, ஸ்ரீபாலாவை (அபர்ணா தாஸ்) விரும்புகிறார் ஆனந்த். அவர், ஒரு தனியார் தொலைக்காட்சியில் குற்ற விசாரணை தொடர்பான நிகழ்ச்சியில் பணியாற்றுகிறார். டிஆர்பியை எகிறவைக்கும் பொருட்டு, ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை என்று காவல் துறையினரால் மூடப்பட்ட மெரின் ஜாய் (மாளவிகா மனோஜ்) வழக்கினைக் கையிலெடுக்கிறது ஸ்ரீபாலா டீம்.
அந்தப் பெண்ணின் பெற்றோர், தங்களது மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிப் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், மெரின் ஜாய் வீட்டுக்குச் செல்லும் ஸ்ரீபாலாவோடு இணைகிறார் ஆனந்த். தனது தாயின் வழியில், குற்ற வழக்கின் பின்னணியையும் விடுபட்ட ஆதாரங்களையும் அறிவதில், அதன் வழியே குற்றம் நிகழ்ந்த விதத்தை யூகிப்பதில் அவர் கெட்டி. அப்படித்தான் மெரின் ஜாய் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் எஃப்.ஐ.ஆர். இரண்டையும் சோதித்துப் பார்க்கிறார். அதிலுள்ள முரண்களை அடிக்கோடிட்டுப் பேசி, ’நடந்தது ஒரு கொலை’ என்று விளக்குகிறார்.
’அதனைச் செய்தது யார் என்பதைக் காவல் துறையினர் கண்டறிய வேண்டும்’ என்பது அந்நிகழ்ச்சியின் வேண்டுகோளாக இருக்கிறது. அது, காவல் துறையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக, அந்த வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிடுகிறது நீதிமன்றம்.
அதன் விளைவாக, அசிஸ்டெண்ட் கமிஷனர் சங்கர் தாஸ் (சைஜு குரூப்) தலைமையில் ஒரு சிறப்பு படை அமைக்கப்படுகிறது.
காவல் துறை அதிகாரிக்கான எழுத்து தேர்வு, உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சியான நிலையில், மருத்துவத் தகுதியை நிரூபிக்க மருத்துவமனை செல்கிறார் ஆனந்த். மெரின் ஜாய் வழக்கு விசாரணை தொடர்பாக அங்கு வரும் சங்கர் தாஸிடம், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த் பற்றி தகவல் சொல்லப்படுகிறது. வேண்டுமென்றே, சங்கர் தாஸ் அவரைத் தேடிச் சென்று சந்திக்கிறார்.
அப்போது, தாயின் உருவத்தை ஆனந்த் காண்பதாக உணர்வதை அறிகிறார் சங்கர் தாஸ். அந்தக் கணத்தில், ஆனந்தின் ‘போலீஸ் கனவு’ புஸ்வாணமாகிறது.
சங்கர் தாஸ் எனும் போலீஸ் அதிகாரியின் மனதில் விஸ்வரூபமெடுக்கும் ஈகோ, ஆனந்தைச் சின்னாபின்னமாக்கத் துடிக்கிறது. அந்தச் சூழலை எதிர்கொள்ள இயலாமல் உடைந்து போகிறார் ஆனந்த்.
அப்போது, ஆனந்தின் கண் முன்னே வருகிறார் அவரது தாய் ஸ்ரீபாலா. ‘நடந்தது தற்கொலை என்று சிறப்பு படை நிரூபிக்கும் முன்னரே, அது ஒரு கொலை என்று நீ நிரூபித்துக் காட்டு’ என்கிறார். அதனைக் கேட்ட மறுநொடியே, சங்கர் தாஸுக்கு போன் செய்கிறார் ஆனந்த். ’இரண்டு வார காலத்தில் நீங்கள் மேலிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்னர், இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்துக் காட்டுகிறேன்’ என்று சவால் விடுகிறார்.
சவாலில் ஆனந்த் வென்றாரா என்பதைச் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
ஒரு கொலை வழக்கு, அதில் துப்பு துலக்கத் துடிக்கும் ஒரு தனி நபர் என்பதெல்லாம் ஏற்கனவே நாம் பலமுறை பார்த்த கதை தான். ஆனால், அப்படித் துப்பறிய முயற்சிக்கும் ஒரு நபருக்குத் தன் தாயின் உருவம் நேரில் தெரிவது போன்ற மனப்பிரமை இருப்பதாகச் சொல்வதுவே இக்கதையிலுள்ள வித்தியாசம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பியும் கூட.
’லஹோ ரஹோ முன்னாபாய்’ படத்தில் நாயகனின் கண்களுக்கு மகாத்மா காந்தி தெரிவார். ‘ஜட்ஜ்மெண்டல் ஹை க்யா’ படத்தில் நாயகியின் கண் முன்னே பல மாயப் பாத்திரங்கள் தென்படும். அவ்வளவு ஏன், ‘சூது கவ்வும்’ படத்தில் மாயக் காதலி உடன் உரையாடிக் கொண்டே இருக்கும் விஜய் சேதுபதி நடித்த நாயக பாத்திரம்.
கிட்டத்தட்ட அதே பாணியில், இதில் நாயகனின் தாயான ஸ்ரீபாலா பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் இருப்பு, ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ கதையில் ஒட்டுமொத்தமாகத் திரைக்கதை ட்ரீட்மெண்டையே மாற்றியமைத்திருக்கிறது.
மீண்டும் சங்கீதா!
அர்ஜுன் அசோகன் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களின் வழியே, மெல்ல ஒரு முக்கியமான நடிகராக மலையாளத் திரையுலகில் உருவெடுத்து வரும் அவருக்கு இப்படம் இன்னொரு மைல்கல். அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அளவாகத் திரையில் நடித்திருக்கிறார்.
‘டாடா’ நாயகி அபர்ணா தாஸ், இதில் நாயகியாக வருகிறார். முன்பாதியில் ஆர்ப்பாட்டமான இளம்பெண்ணாகத் தோன்றி நம்மை ஈர்க்கிறார். அவ்வளவே!
இந்தப் படத்தில் நாம் எதிர்கொள்ளும் ஆச்சர்யம், ‘பூவே உனக்காக’ சங்கீதாவின் பாத்திரம். ஸ்ரீபாலாவாக அவரே நடித்திருக்கிறார். கம்பீரம், மிடுக்கு, புத்திசாலித்தனம் மிகுந்த ஒரு பெண்ணாகத் தோன்றும் இடங்களும் சரி; நாயகனுக்கு உத்வேகமூட்டும் விதமாகப் பேசும் இடங்களும் சரி; அவருக்கு ‘இது ஒரு சரியான கம்பேக்’ என்று உணர்த்துகின்றன. இது அவரது ’இரண்டாவது இன்னிங்ஸ்’ ஆக அமையலாம்.
ஆவணக் காப்பக அதிகாரியாக வரும் சித்திக், சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரராக வரும் அஜு வர்கீஸ், ஈகோ அதிகமுள்ள உயரதிகாரியாக நடித்த சைஜு குரூப், நாயகனின் ஹேக்கர் நண்பனாக வரும் தியான் சீனிவாசன், காவல்துறை தலைவராக வரும் ‘நெடுஞ்சாலை’ ஷிவதா என்று பலரும் நம் கவனம் ஈர்க்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து இந்திரன்ஸ், அஜீஸ் நெடுமங்காடு, நந்து, முத்துமணி, வினீத் தட்டில் டேவிட் உட்படப் பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். அவர்களுக்கான முக்கியத்துவம் தரும் காட்சிகள் இதிலுண்டு என்றபோதும், மொத்தப்படமும் நாயக பாத்திரத்தையே சுற்றி வருகிறது.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு நாராயணன், கலை இயக்குனர் சாபு ராம், படத்தொகுப்பாளர் கிரண் தாஸ் உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு, இயக்குனர் விஷ்ணு வினயனின் பார்வைக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ரஞ்ஜின் ராஜ் பின்னணி இசையில் காட்டிய கவனத்தைப் பாடல்களில் செலுத்தவில்லை.
எழுத்தாக்கம் செய்திருக்கும் அபிலாஷ் பிள்ளை, ஒட்டுமொத்தக் கவனத்தையும் நாயக பாத்திரத்தின் மீதே செலுத்தியிருக்கிறார்.
’அட’ போட வைக்கிறதா?
ஸ்ரீபாலா என்பது நாயகனின் தாய் என்பதைச் சொல்வதில் தொடங்குகிறது கதையின் முதல் முடிச்சு. பிறகு, அவரது கண்களுக்குத் தாயின் உருவம் பிரமையாகத் தென்படுவது, குற்ற வழக்கிலுள்ள தடைகள் குறித்து இருவரும் உரையாடுவதாக நாயகனுக்குத் தோன்றுவது, அதன் வழியே முக்கியமானதொரு தடயம் கண்டறியப்படுவது போன்றவை நிச்சயமாக ‘அட’ போட வைக்கும் தருணங்கள். ஆனால், அவை திரையில் அடிக்கோடிட்டு உணர வைக்கும் வகையில் வெளிப்படவில்லை.
‘போகிற போக்கில் அதனைச் சொல்லிச் செல்லலாம்’ என்பது இயக்குனரின் பார்வையாக இருக்கலாம். ரசிகர்களைப் பொறுத்தவரை, அப்படிப் பல தருணங்கள் திரைக்கதையில் பலவீனமாகத் தெரிகின்றன.
அதே நேரத்தில், இடைவேளை காட்சி மிகச்சரியாக ரசிகர்களின் மனநிலையைத் தாங்கி நிற்கிறது. அதிலுள்ள புத்திசாலித்தனம் முன்பாதியில் இன்னும் அதிகமாக வெளிப்பட்டிருக்கலாம்.
இந்தக் கதையில் மெரின் ஜாய் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதுதான் பூதாகரமான கேள்வி. அதில் சம்பந்தப்பட்டவர்களைப் புதியவர்கள் என்று உணரச் செய்யாத வகையில் திரைக்கதை அமைத்த வகையில் அபிலாஷ் நம்மை ஈர்க்கிறார்.
இயக்குனர் விஷ்ணு வினயனின் கவனம் முழுமையாக நடிப்புக்கலைஞர்களின் ‘பெர்பார்மன்ஸ்’ மீதே இருந்திருக்கிறது. அதனால், பார்வையாளர்களால் எளிதில் திரையோடு ஒன்ற முடிகிறது என்பது ப்ளஸ்ஸான விஷயம் தான்.
இப்படம் முழுக்கச் சங்கீதாவின் பாத்திரம் ஒரே சேலையணிந்து காட்சியளிக்கிறது, ஓரிரு காட்சிகள் தவிர்த்து. அந்தக் காட்சிகளில் மட்டும் ஏன் வேறு சேலைக்கு அவர் மாற வேண்டும்? அதற்கான ‘ஜஸ்டிபிகேஷன்’ திரைக்கதையில் இல்லை.
இந்தப் படத்தில் விசாரணை காட்சிகள் ‘ட்ரெண்ட் செட்டர்’ ஆக அமையவில்லை. அதேநேரத்தில் அவை மிக மோசமானதாகவும் இல்லை. அந்த ஒரு காரணத்தால், ‘ஆனந்த் ஸ்ரீபாலா’ அனைத்து தரப்பினரும் விரும்பும் படமாக மாறியிருக்கிறது.
லாஜிக் மீறல்கள் பக்கம் பார்வையைத் திருப்பாமல், நாம் இதுவரை பார்த்ததில் இருந்து வேறுபட்ட படமொன்றைப் பார்க்க வேண்டுமென்பவர்களைத் திருப்திப்படுத்தும் இப்படம்.
சங்கீதா, அபர்ணா தாஸ், மாளவிகா மனோஜ் ஆகியோர் ஏற்ற பெண் பாத்திரங்களைத் தாங்கிப் பிடித்திருக்கும் இதன் திரைக்கதை நாயகனான அர்ஜுன் அசோகனின் ‘ஹீரோயிசத்தை’ கொண்டாடுகிறது என்பது ரசிக்கத்தக்க முரண்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
Carrom WorldCup : மூன்று தங்கம் வென்ற தமிழ்நாட்டு சிறுமி… ஸ்டாலின் பாராட்டு!
234 தொகுதிகளுக்கும் பயணம்: ஒரு வருட திட்டத்துடன் சென்னை திரும்பும் அண்ணாமலை