“பிரபாசுக்கு 1000 கோடி ரூபாய் வசூல் என்பது வழக்கமானதாக இருக்கலாம். ஆனால், எனக்கு இது பெரிய விஷயம்” என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898 கி.பி. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஜூன் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் வெளியான இந்தியப் படங்களில் ரூ.1000 கோடி மொத்த வசூல் செய்த முதல்படமாகும் கல்கி 2898 கி.பி.
இப்படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் பிரபாஸ் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என வீடியோ பதிவு ஒன்றின் மூலம் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கல்கி 2898 கிபி முதல்பாகத்தில் பிரதான கதாபாத்திரமாக நடித்துள்ள இந்திய சினிமாவின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன் கல்கி படம் என்னைப் பொறுத்தவரை எனக்கு மற்றுமொரு படமல்ல. நமது கலாசாரம் மற்றும் புராணக்கதைகள் குறித்த கல்வியாக இதனை கருதுகிறேன் என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.
‘கல்கி 2898 கி.பி’ படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும், படத்தின் வெற்றி குறித்தும் அமிதாப்பச்சன் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “கல்கி 2898 கி.பி திரைப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் பரவலாக அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
பார்வையாளர்களின் அன்பும், பாசமும் ஒருபுறம், மறுபுறம் படம் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான வசூலையும் பெற்றுள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், படக்குழுவின் உழைப்பும் தான் இதற்கு காரணம்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் நாக் அஸ்வினுக்கு தொலைநோக்கு பார்வை இருந்தது. படத்தில் சக கலைஞர்களான கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட கலைஞர்களுடன் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றவர் மேலும் கூறுகையில்,
“பல ஆண்டுகள் உழைப்பு இன்று வெற்றியாக பலனளித்துள்ளது. பிரபாசுக்கு 1000 கோடி ரூபாய் வசூல் என்பது வழக்கமானதாக இருக்கலாம். காரணம் அவரது படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை ஏற்கனவே கடந்துள்ளது. ஆனால், எனக்கு இது பெரிய விஷயம். இது போன்ற மாபெரும் படத்தில் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மகிழ்வைத் தருகிறது.
நான் இந்தப் படத்தை 4 முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போது எனக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது எனக்கு மற்றுமொரு படமல்ல. நமது கலாசாரம் மற்றும் புராணக்கதைகள் குறித்த கல்வியாக இதனை கருதுகிறேன். இந்த கதையை நம்பகமான அழகான படமாக மாற்றி, மக்களிடையை கொண்டு சேர்த்திருக்கிறார் நாக் அஸ்வின்” என தெரிவித்துள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
6.52 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: தமிழக அரசு பெருமிதம்!
தஞ்சாவூர்: 300 ஆண்டுகளாக மொஹரம் பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்கள்!