10 லட்சம் பாலோயர்களை கொண்ட ட்விட்டர் கணக்குகளுக்கு புளூ டிக் வசதி மீண்டும் கிடைத்த நிலையில், 4.84 கோடி பின்தொடர்பாளர்களை கொண்ட நடிகர் அமிதாப் பச்சன் சந்தா செலுத்தியதற்காக சமூக வலைத்தளத்தில் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தைக் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். அதன்பின், தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, ட்விட்டரில் புளூ டிக்கை பெறுவதற்கு, இந்திய பயனாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.
ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று ட்விட்டர் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளின் புளூ டிக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.
முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக் கான் உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டன. இயக்குநர்கள் சங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் புளூ டிக்கும் நீக்கப்பட்டன.
சந்தா கட்டியவர்களின் கணக்குகளின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை. தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கணக்குகளில் புளூ டிக்குகள் நீக்கப்படாமல் இருந்தன. நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை.
இந்த நிலையில், டுவிட்டரில் கட்டணம் செலுத்தி சந்தாதாரர் ஆகாத சிலருக்கு விதிவிலக்குகளை எலான் மஸ்க் அளித்திருப்பது போன்று சில விசயங்கள் நடந்துள்ளன. இதன்படி, 10 லட்சத்திற்கும் கூடுதலான பாலோயர்களை கொண்ட பயனாளர்களுக்கு புளூ டிக் திரும்பக் கிடைத்து உள்ளது எனக் கூறப்படுகிறது.
ஆனால் அவர்களது கணக்குகள், புளூ டிக்குக்கு பணம் செலுத்தியதற்கான நடைமுறை சரிபார்க்கப்பட்டு விட்டது என்று காட்டப்படுகிறது. இந்தி நடிகர், நடிகைகளான ஷாருக் கான், ஆலியா பட், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, எம்.எஸ். தோனி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கோடீசுவரர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரும் இழந்த புளூ டிக்கை மீண்டும் பெற்று உள்ளனர். ஆனால், அவர்கள் பணம் செலுத்தி விட்டனரா? என்று தெளிவாகத் தெரிய வரவில்லை.
இதேபோன்று, மறைந்த பிரபலங்களான முன்னாள் மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத், இர்பான் மற்றும் ரிஷி கபூர், பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், கூடைப்பந்து வீரர் கோப் பிரையண்ட், கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உள்ளிட்ட பலரது கணக்கிற்கும் புளூ டிக் கிடைத்து உள்ளது மக்களால் அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதில், குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில், 65 லட்சம் பாலோயர்களை கொண்ட ட்விட்டரின் இணை நிறுவனரான ஜாக் டோர்சிக்கு இன்னும் புளூ டிக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், டுவிட்டரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயனாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
இந்த சூழலில், பணம் கட்டிய பயனாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அவர்களில் நடிகர் அமிதாப் பச்சனும் ஒருவர். ஏனெனில், டுவிட்டரில் பயனாளராக நீடிக்க அவர் பணம் செலுத்தி உள்ளார். அப்படி இருந்தும் அவரது புளூ டிக் பிறரை போன்று முதலில் நீக்கப்பட்டது.
இதனால், நீலநிற தாமரையை திருப்பி தர வேண்டும் என டுவிட்டரிலேயே கோரி, கைகூப்பி வணங்கும் எமோஜி ஒன்றையும் வெளியிட்டார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அவருக்கு புளூ டிக் மீண்டும் தரப்பட்டது.
இதற்கு எலான் மஸ்கிற்கு அவர், து சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த் என்ற இந்தி பாடலை சற்று மாற்றி, து சீஸ் படி ஹை மஸ்க் மஸ்க்… து சீஸ் படி ஹை மஸ்க் என பதிவிட்டு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிலையில், 10 லட்சம் பாலோயர்களுக்கு மீண்டும் புளூ டிக் என்ற தகவலை அறிந்ததும், அதிர்ச்சி அடைந்த அவர், அந்த வேதனையை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். கேம் (விளையாட்டு) முடிந்து விட்டது. பணமும் போய் விட்டது என அதில் தெரிவித்து உள்ளார்.
அந்த பதிவில், நீங்கள் தற்போது ஒரு மில்லியன் பாலோயர்களை கொண்ட நபர்களுக்கு புளூ டிக் இலவசம் என்கிறீர்கள். எனக்கு 4.84 கோடி பாலோயர்கள் உள்ளனர். தற்போது நான் என்ன செய்ய? என்று அமிதாப்பச்சன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு நெட்டிசன்களில் ஒருவர், சார் உங்களது கூகுள் பே எண்ணை எனக்கு அனுப்புங்கள். உங்களது பணம் திருப்பி கிடைக்க நான் வழி செய்கிறேன் எனத் தெரிவித்து உள்ளார். இதனால் என்ன பெரிய வித்தியாசம் உங்களுக்கு வந்து விடப் போகிறது. இவ்வளவு பெரிய பணத்திற்கு நீங்கள் ஒரு கோப்பை டீ (தேநீர்) வாங்கி குடித்து இருக்கலாம் என மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.
இராமானுஜம்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் தகராறு இல்லை: அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி