மாமன்னன் படம் ஜாதி மத மோதல்களை ஊக்குவிக்கிறது என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் நேற்று (ஜூன் 29) வெளியானது.
வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோரின் பலமான கூட்டணியில் வெளிவந்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் படம் வெளியீட்டிற்கு முன்பு மாமன்னன் திரைப்படம் தென் மாவட்டங்களில் ஜாதி மோதலை ஊக்குவிக்கிறது என்றும், படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் நெல்லையில் நேற்று காலையில் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு முன்பு போராட்டம் நடத்திய பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோன்று மதுரையிலும் மாமன்னன் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய முக்குலத்தோர் எழுச்சி கழகத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 30) படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையம் வந்த இயக்குனர் அமீரிடம் ”மாமன்னன் படம் ஜாதி மோதலை ஊக்குவிக்கிறதா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “மாமன்னன் படம் மூலம் மாரி செல்வராஜ் ஜாதி மத மோதல்களை ஊக்குவித்துள்ளார் என்று கூறுவதை நான் ஏற்கமாட்டேன்,
தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மூலமாக தான் பல ஆண்டுகளாக திராவிட, பெரியாரிய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாட்டிலேயே தமிழ் சினிமா தான் முன்னிலையில் உள்ளது.
மாரிசெல்வராஜ் ஒரு குறிப்பிட்ட சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வலியை தனது திரைப்படம் மூலமாக காட்ட முயற்சித்துள்ளார் என்றே கூற வேண்டும். அந்த உரிமை அனைவருக்கும் உள்ளது.
இதனை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதில் தான் படத்திற்கான வெற்றியும் ஆதரவும் உள்ளது” என்றார்.
தொடர்ந்து அவர், வடசென்னை படத்தில் இடம்பெற்ற ராஜனின் முழு கதையும் வெளிவந்தால் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும், தனது இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் மிகப்பெரியவன் படப்பிடிப்பிற்காகவே ராம்நாடு வந்துள்ளதாகவும் அமீர் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
17 வயது சிறுவன் கொலையால் பற்றி எரியும் பிரான்ஸ்
”செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்?”- அண்ணாமலை