உண்மையையும் பொய்யையும் பிரித்தறியலாமா?
’ஒரு பொய் சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கணும்’ என்ற வசனம், இயக்குனர் ஹெச்.வினோத்தின் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வந்து போகும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நாம் கடந்து வந்த பொய்களில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட அந்த ரகத்தில் தான் இருக்கும். நூறு சதவிகிதப் பொய்யை நாம் எளிதாக அடையாளம் கண்டுவிடுவோம் என்பதே உண்மை.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், இது போன்று உண்மையையும் பொய்யையும் கலந்து ஆட்டமாடினால் அது ‘ருத்ர தாண்டவமாக’ இருக்கும் என்பதை அழுத்தமாகச் சில திரைப்படங்கள் சொல்லியிருக்கின்றன. மிஷ்கினின் ‘அஞ்சாதே’ படத்தில் வரும் பிரசன்னா பாத்திரம் அத்தகையது தான். அதனைப் பார்க்கையில் ‘இந்த நபருக்கு மனநலப் பிரச்சனைகள் இருக்கும்’ என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு, அப்பாத்திரம் கோர முகம் காட்டும்.
அப்படி மனநலம் பாதிப்புக்குள்ளான, குற்றச் செயல்களில் தொடர்புடைய, பாத்திரங்கள் ஓரிடத்தில் சந்தித்தால் என்னவாகும் என்பதைச் சொல்கிறது, மலையாளத் திரைப்படமான ‘லெவல் கிராஸ்’. ஆசிஃப் அலி, அமலா பால், ஷராபுதீன் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை அர்பாஸ் அயூப் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது ‘லெவல் கிராஸ்’?
மூன்று பேர்!
பாலைவனம் போன்றதொரு இடம். பேருந்து, படகு ஆகியன சிதைந்து கிடக்கிற சூழல். அதனூடே கோடு கிழிக்கும் ஒரு தண்டவாளம். அதன் ஒரு பகுதியில் ஒரு லெவல் கிராசிங். அதையொட்டினாற் போன்று ஒரு வீடு. அங்கு ஒரு நபர் (ஆசிஃப் அலி) வசிக்கிறார்.
பற்களில் கறை, சீவாத தலைமுடி, கசங்கிப்போன ஆடைகள் என்று வழக்கத்திற்கு மாறான தோற்றத்துடன், கால்களை விந்திக்கொண்டு நடப்பவராகத் தெரிகிறார். அவருடனேயே ஒரு கழுதையும் வருகிறது. எப்போதாவது கடந்து செல்லும் ரயிலுக்கு கொடியசைத்துவிட்டு, அமைதியாக அந்த இடத்தில் இருப்பதே அவரது தினசரி வாழ்வு.
ஒருநாள் ரயிலில் இருந்து ஒரு பெண் (அமலா பால்) கீழே குதிப்பதைப் பார்க்கிறார் அந்த நபர். அடிபட்டு மயங்கிக் கிடக்கும் அவரைத் தன் வீட்டுக்குத் தூக்கி வருகிறார்.
தனது பெயர் சைதாலி என்று சொல்லும் அப்பெண், அங்கு தங்குவதற்கு யோசிக்கிறார். அவரிடத்தில், தனது பெயர் ‘ரகு’ என்றும், அந்த இடத்தில் கேட் கீப்பராக இருப்பதாகவும் அந்த நபர் கூறுகிறார்.
அடுத்த நாள் காலையில் ஒரு சரக்கு ரயில் கடக்கவிருக்கும் தகவலைச் சொல்லும் வகையில் தொலைபேசி ஒலிக்க, சைதாலி குறித்து எதிர்முனையில் இருக்கும் அதிகாரியிடம் தகவல் சொல்ல முயற்சிக்கிறார் ரகு. ஆனால், அவரைச் சொல்லவிடாமல் தடுத்து போனை கட் செய்கிறார் சைதாலி.
தான் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் என்றும், மனைவி தற்கொலை செய்துகொண்ட காரணத்தால் மனச்சிதைவுக்கு உள்ளான ஜின்கோ தன்னிடம் சிகிச்சை பெற வந்தார் என்றும் சொல்கிறார் அப்பெண். நாளாக நாளாக, தனது சிகிச்சையால் அவர் நலமடைந்ததாகவும், ஒருநாள் தன்னைக் காதலிப்பதாக அவர் தெரிவித்ததாகவும் சொல்கிறார்.
பின்னர் ஜின்கோவை மணந்திருக்கிறார் சைதாலி. திருமணத்திற்குப் பிறகு ஜின்கோ தனது சுயரூபத்தை வெளிக்காட்டியதாகவும், தினமும் தன்னை ‘டார்ச்சர்’ செய்ததாகவும் கூறுகிறார். அவரிடம் இருந்து தப்பிக்கவே, ரயிலில் இருந்து குதித்ததாகச் சொல்கிறார்.
அதனைக் கேட்டபிறகு, தான் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், அந்தப் பெண் பணத்திற்காக ஒரு நபரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார் ரகு. அந்தப் பெண்ணை மறக்க முடியாமல் தான் தவித்ததாகக் கூறுகிறார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணை தாய் தனக்கு மணம் முடித்து வைத்தாகச் சொல்கிறார். ஆனால், அந்தப் பெண் ஒரு உறவினருடன் சேர்ந்து தனக்கு துரோகம் செய்ததாகவும், அதனால் மனைவி, அந்த நபர், குழந்தைகளைக் கொன்றுவிட்டதாகவும் கூறுகிறார் ரகு. போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து இந்த இடத்திற்கு வந்ததாகவும் சொல்கிறார்.
அதனைக் கேட்டபிறகு, ரகு மீது சைதாலி இரக்கம் கொள்கிறார். அவர் மீது வாஞ்சையாகச் சாய்கிறார். அப்போது, ‘நீயும் நானும் ஒரேமாதிரியானவர்கள்’ என்கிறார் ரகு. அதனைக் கேட்டு திகைக்கிறார் சைதாலி.
அந்த உரையாடல் முடியும்போது, தண்ணீர் எடுத்து வர வெளியே செல்கிறார் ரகு. அதையடுத்து, அந்த அறையைச் சுத்தம் செய்கிறார் சைதாலி. அப்போது, ‘கேட் கீப்பர் ரகு’ என்ற பெயரில் வேறொருவரின் புகைப்படத்தோடு ஒரு அடையாள அட்டையைக் கண்டெடுக்கிறார். கூடவே, ஒரு குடும்பத்தையே கூண்டோடு கொலை செய்த குற்றவாளியை போலீஸ் தேடுவதாக, சில செய்தித்தாள் துண்டுகளைப் பார்க்கிறார்.
அந்த நேரத்தில், அந்த நபர் அங்கு வருகிறார். அதன்பின் என்ன நடந்தது? ரகு என்ற பெயரில் அங்கிருக்கும் நபர் யார்? உண்மையான ரகுவை அவர் என்ன செய்தார்? அந்த நபர் சொல்வது போல, சைத்ராவும் அவரைப் போன்ற நபர் தானா? சைத்ராவைத் தேடி அவரது கணவர் அந்த இடத்திற்கு வந்தாரா? இது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.
இந்தக் கதையில் ரகு, சைதாலி மற்றும் அவரது கணவர் ஜின்கோ ஆகிய மூன்று பேரே பிரதானமாக உள்ளனர். இவர்கள் தவிர்த்து நான்கைந்து பாத்திரங்களில் ஓரிரு ஷாட்களுக்கு வந்து போகின்றன. இதனை இந்தப் படத்தின் பலமாகவும் கொள்ளலாம், பலவீனமாகவும் கொள்ளலாம்.
நுணுக்கமான சித்தரிப்பு!
நாயகன், நாயகி என்று இந்தப் படத்தில் தனியாகக் குறிப்பிட முடியாது. ஏனென்றால், மொத்தக் கதையும் ரகுவாக வரும் ஆசிஃப் அலியையே சுற்றி வருகிறது. அவரிடத்தில் இருந்தே திரைக்கதை தொடங்குகிறது.
வித்தியாசமான தோற்றம், உடல்மொழி, பார்வை என்று இப்படத்தில் வேறுபட்டு தெரிகிறார் ஆசிஃப் அலி. கண்ணசைவுகளை நொடியில் மாற்றிச் சில ஷாட்களில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
முன்பாதியில் வெகுசாதாரணமாகத் தெரிகிறது அமலா பாலின் பாத்திரம். பின்பாதியில் அந்த நினைப்பை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது அவரது இருப்பு.
இவர்கள் இருவருக்கு இணையாக இல்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவம் இத்திரைக்கதையில் ஷராபுதீனுக்கு உண்டு.
படம் பார்க்கத் தொடங்கியவுடன் இரண்டு விஷயங்கள் சட்டென்று நம் கவனத்தைக் கவர்கின்றன. ஒன்று, பிரேம் நவாஸின் தயாரிப்பு வடிவமைப்பு. இரண்டாவது, அப்பு பிரபாகரின் ஒளிப்பதிவு.
அகண்ட நிலப்பரப்பு. ஆங்காங்கே சிதைந்த நிலையில் கிடக்கும் பொருட்கள், ஆளில்லா கிராமம், அங்கே ஒரு லெவல் கிராசிங் என்பதைக் காட்ட, இதில் ‘துனிசியா’ நாட்டிலுள்ள ஒரு லொகேஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளும், அதனைச் சுற்றியும் நிகழ்வதாகக் காட்டப்பட்ட காட்சிகள் க்ரீன்மேட் பயன்படுத்தி ‘செட்’டில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது. ஆசிஃப் பாத்திரத்தின் சித்தரிப்பை நுணுக்கமாகக் காட்டும் வகையில், அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் திரையில் காட்டப்படுகின்றன.
காலம் மற்றும் இடம் குறித்த லாஜிக் சார்ந்த கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு, ‘லெவல் கிராஸ்’ படத்தை நாம் காண வேண்டும் என்பதே இயக்குனரின் ஆசை. அதற்கேற்ப, இப்படத்தின் ஒளிப்பதிவும் கலை வடிவமைப்பும் படத்தின் உள்ளடக்கத்திற்குப் பலம் சேர்க்கின்றன.
லாங் ஷாட்கள் நம்மை பிரமிப்புக்கு உள்ளாவது போன்று, சின்னச் சின்ன தகவல்களைச் சொல்லும் வகையில் கலை வடிவமைப்பு உள்ளது.
தீபு ஜோசப் இப்படத்தில் காட்சிகளைத் தொகுத்துள்ளார். முன்பாதி மிக மெதுவாக ஊர்ந்து செல்வதை ‘அப்படியே இருக்கட்டும்’ என்று விட்டிருக்கிறார்.
சிதைந்த மனிதத் தலையைக் காட்டும் ஒரு காட்சியில் ரோனக்ஸ் சேவியரின் ஒப்பனை நம்மை அருவெருப்புக்குள் தள்ளுகிறது.
இந்தப் படத்தின் இயக்குனர் அர்பாஸ் அயூப், மூன்று நபர்களுக்கு இடையிலான முரண்களைக் கொண்டு, மனநலப் பிறழ்வு பிரச்சனையைக் கொண்டு, மூளையைக் கசக்குகிற ஒரு த்ரில்லரை தர முயற்சித்திருக்கிறார்.
நீளம் கருதி முன்பாதியில் ஆசிஃப் அலி, அமலா பால் இடையே நட்பு முளைப்பதைத் திரையில் நீட்டி முழக்கியிருக்கிறார். அது, அயர்ச்சியைத் தருகிற விஷயமாக உள்ளது.
அதேநேரத்தில் கிளைமேக்ஸ் திருப்பத்தை முன்கூட்டியே சொல்லும்விதமாகவும் இதில் சில காட்சிகள் உள்ளன என்பதைச் சொல்லியாக வேண்டும். குறிப்பாக, ஆடம் அயூப்பின் சில வசனங்கள் மீண்டும் ஒலிக்கும்போது அது தானாக நிகழ்கிறது.
குறைவான பட்ஜெட்டில், தேர்ந்த சில நடிப்புக்கலைஞர்களைக் கொண்டு, திருப்பங்கள் நிறைந்த ஒரு கமர்ஷியல் படத்தைத் தர முனைந்திருக்கிறார் அர்பாஸ் அயூப். ஆனால், அந்த முயற்சி பாதியளவு மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை முன்பாதியில் நாம் திரைக்கதையோடு பிணையக் காரணமாக உள்ளது. ஷாட்களோடு சேர்ந்து அவரது இசை மாயாஜாலம் நிகழ்த்தியுள்ளது. பின்பாதியில் பரபரப்பை ஏற்படுத்தத் துணையாக இருக்கிறது.
நீளத்தைக் குறைத்திருக்கலாம்!
கதையில் வரும் மூன்று பாத்திரங்களோடு பார்வையாளர்கள் ஒன்ற வேண்டும் என்று திரைக்கதையை ஊர்ந்து போகச் செய்திருக்கிறார் இயக்குனர்.
ஆசிஃப் அலி பாத்திரத்தின் தனிமையையும், அந்த சுற்றுப்புறத்தையும் காண்பித்துவிட்டு, நேராக அமலா பாலின் கதைக்கு வந்திருக்கலாம். பிறகு, ஷராபுதீனைக் காண்பித்துவிட்டு, இடைவேளை திருப்பத்திற்கு நகர்ந்திருக்கலாம். கூடுதலாகச் சில காட்சிகள் வேண்டுமென்றால், ஷராபுதீன் பாத்திரம் என்ன செய்கிறது என்று காண்பித்திருக்கலாம். அதனைச் செய்யாத காரணத்தால், முன்பாதி நம்மைச் சோதிக்கிறது.
இரண்டாம் பாதி அந்தளவுக்கு இல்லை என்றாலும், அதன் நீளத்தையும் குறைத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கே நிலைமை உள்ளது. அர்பாஸ் அயூப் இவ்வாறு நீட்டி முழக்கி கதை சொல்வதை தனது ஸ்டைலாக தேர்வு செய்திருக்கலாம். ஆனால், பார்க்கும் நமக்கு அது போரடிக்குமா இல்லையா என்று அவர் சிந்திக்கவில்லை.
இந்தக் கதையில் திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால், ஒரு த்ரில்லர் பட ரசிகரால் அதனை எளிதாக யூகித்துவிட முடியும்.
‘சைக்கோ’ த்ரில்லர் படங்களில் சம்பந்தப்பட்ட பாத்திரத்தின் மனநிலையை விளக்க, பிரேமில் சில பொருட்கள் காட்டப்படும். பின்னணியில் சில நபர்கள் அல்லது செயல்கள் இடம்பெறுவதும் நிகழும். இந்தப் படத்தில் அந்த உத்தி தேவையான அளவுக்கு மாயாஜாலம் நிகழவில்லை.
இந்தக் கதையில் எந்த பாத்திரம் பொய் சொல்கிறது? அதில் உண்மையின்
கற்பனையான நிலப்பரப்பில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்ட காரணத்தால், இதன் திரைக்கதையைக் குறை சொல்ல முடியாது. அதேநேரத்தில், இயக்குனர் தான் வகுத்துக்கொண்ட நியதிகளை முழுமையாகப் பின்பற்றி திரையில் கதை சொல்லியிருக்கிறாரா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். அதேநேரத்தில், சதவிகிதம் என்ன என்று பிரித்தறிய வைக்கிறது திரைக்கதை மற்றும் பாத்திர வார்ப்பு. அதுவே ‘லெவல் கிராஸ்’ படத்தின் யுஎஸ்பி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
தனியார் வசமாகும் அரசு போக்குவரத்துக்கழகம்? : சீமானுக்கு அமைச்சர் பதில்!
அடுத்தடுத்து கொலைகள்… அரசு பதவி விலக வேண்டும் : அன்புமணி