பூகன்விலியா : விமர்சனம்!

Published On:

| By christopher

amal neerad bougainvillea movie review

வழக்கத்திற்கு மாறான ‘த்ரில்லர்’!

ஒரு செக்கு சுழன்று கொண்டிருக்கிறது. அதனை ஒரு மாடு சுழற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சுற்றின்போதும், அதன் சுற்றுப்பாதை வட்டம் மெலிதாக அதிகமானாலோ அல்லது விட்டம் பெரிதானாலோ எப்படியிருக்கும். அந்த வகையில், ‘தீர்வே கண்டறிய முடியாது’ என்பது போன்று நகரும் ஒரு ‘த்ரில்லர்’ கதையில் ஆங்காங்கே சின்னச் சின்னதாய் திருப்பங்கள் வைத்து நம்மை ஈர்க்கிறது அமல் நீரட் இயக்கியுள்ள ‘பூகன்விலியா’ (Bougainvillea).

’ரூத்திண்ட லோகம்’ என்ற பெயரில், மலையாளத்தில் லஜோ ஜோஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது இப்படம். குஞ்சாக்கோ போபன், ஜோதிர்மயி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

சரி, இப்படம் தரும் ‘த்ரில்’ அனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

அடுத்த கட்டம் எப்போது?

டாக்டர் ராய்ஸ் தாமஸ் (குஞ்சாக்கோ போபன்) தனது மனைவி ரீத்து (ஜோதிர்மயி) உடன் இடுக்கி பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

எல்லோருடனும் சுமூகமாகப் பழகுகிற இயல்பு கொண்டவர் ராய்ஸ். ஆனால், ரீத்துவைப் பற்றி யாராவது பேச்செடுத்தாலே ‘சீரியஸ்’ ஆகிவிடுவார். அவரது முகத்தைச் சோகம் பற்றிக் கொள்ளும்.

எட்டாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில், ‘அம்னீஷியா’வினால் பாதிக்கப்பட்டவர் ரீத்து. அதன் பின்விளைவாக, கடந்த கால நினைவுகளை இழக்கிறார். அம்னீஷியாவுக்குப் பிறகு சொல்லப்பட்ட தகவல்களை மட்டும் நினைவில் கொண்டே வாழ்கிறார். முந்தைய நாள் என்ன நடந்தது, சில மணி நேரங்களுக்கு முன் என்ன நிகழ்ந்தது என்பது கூடச் சில சமயம் அவரது நினைவில் இருப்பதில்லை.

’ரீத்துவை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார் ராய்ஸ்’ என்பதே அவர்களைத் தெரிந்தவர்களின் எண்ணம். அதற்கேற்ப அவரும் இருந்து வருகிறார்.

ரீத்துவைக் கவனிக்க ரெமா (ஸ்ரீந்தா) என்ற வேலைக்காரப் பெண் இருக்கிறார். அவரது கணவர் பிஜு (ஷரப் யூ தீன்) ஒரு கார் ஓட்டுநர். அவ்வப்போது ரீத்துவையும் ரெமாவையும் வெளியே அழைத்துச் செல்வது பிஜுவின் வழக்கம்.

ஒருநாள் டிவி நியூஸில் ஒரு கல்லூரிப் பெண் காணாமல் போனதாக வரும் தகவலைக் காண்கிறார் ரீத்து. அந்தப் பெண்ணின் பெயர் சாயா. அவரைத் தான் நேரில் கண்டதாகவும், பேசியதாகவும் உணர்கிறார். ஆனால், ரெமா அதனை ’பிரமை’ என்றெண்ணுகிறார்.

அடுத்த சில நாட்களில், ரீத்துவைத் தேடி தேனி போலீசார் வருகின்றனர். சாயாவின் கல்லூரி விடுதி வாசலில் ரீத்து இருக்கும் வீடியோ அவர்களது கைவசம் இருக்கிறது. அந்தப் பெண் தேனியிலுள்ள கட்சிப் பிரமுகரின் மகள் என்பதால், உதவி கமிஷனர் டேவிட் கோஷி (பகத் பாசில்) தலைமையிலான சிறப்புக்குழு தீவிரமாக அவ்வழக்கை விசாரித்து வருகிறது.

டேவிட் கோஷியும் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராஜனும் ரீத்துவிடம் விசாரணை மேற்கொள்கின்றனர். அவர்களிடம் ரீத்துவின் மருத்துவ நிலைமையைச் சொல்கிறார் ராய்ஸ்.

மனதில் இருக்கும் நினைவுகளைக் கொண்டு அல்லது கற்பனை செய்துகொண்டு, அவர்களிடம் சிலவற்றைச் சொல்கிறார் ரீத்து. தங்களுக்குக் குழந்தைகள் இல்லை எனவும், இரண்டு குழந்தைகள் இருப்பதாக பிரமையில் ரீத்து வாழ்வதாகவும், அவர்களிடத்தில் சொல்கிறார் ராய்ஸ்.

டேவிட் கோஷிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த வழக்கில், கிரிமினாலஜிஸ்ட் மீரா (வீணா நந்தகுமார்) உதவியோடு ரீத்துவிடம் விசாரணை மேற்கொள்கிறார். ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இந்த நிலையில், அப்பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. அந்த ஆண் சடலத்தோடு ஒரு பிரேஸ்லெட்டும் கிடைக்கிறது. அது ரீத்துவினுடையது.

குற்றங்களோடு ரீத்துவுக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்தாலும், தகவல்களைப் பெற வழியின்றி கையைப் பிசைகிறது போலீஸ். இந்த நிலையில், மீரா மட்டும் ரீத்துவின் நினைவலைகளில் கல்லெறிய முயற்சிக்கிறார். அவரது சுபாவங்களை, செயல்பாடுகளை, பற்று கொண்ட விஷயங்களை ஆராய்கிறார்.

அப்போது, மீராவிடத்தில் ‘தங்களுக்கு குழந்தை இல்லை’ என்ற விஷயத்தை மட்டும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார் டாக்டர் ராய்ஸ். அதனை மீறி, அந்த விஷயத்தை ரீத்துவிடம் அவர் சொல்கிறார்.

அப்போது, மீராவுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. அது என்ன என்பது ‘பூகன்விலியா’ திரைக்கதையில் ஒளிந்துள்ள புதிரை விடுவிக்கிறது.

இந்தக் கதையில், ‘இந்த வழக்கோட அடுத்தகட்டம் என்ன’ என்ற போலீஸ் பாத்திரங்களின் எதிர்பார்ப்பு தான் ஹைலைட். அதுவே ரசிகர்களான நம்முடைய பார்வையாகவும் இருக்கிறது. ஆனால், அதற்கேற்ற பதில்கள் திரைக்கதையில் உடனடியாகக் கிடைப்பதில்லை.

அதனால், நம் பொறுமையைச் சோதிக்கிற விதமாகவே இதன் ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’ இருக்கிறது. அதன் விளைவாக, ‘ரொம்ப ட்ரையா இருக்கு’ என்றே உணர்கிறோம்.

அதையும் மீறி, மெதுவாகச் செல்லும் பயணத்தில் ஆங்காங்கே வரும் திருப்பங்கள் போன்று இக்கதையிலும் சில விஷயங்கள் காட்டப்படுகின்றன. அதனை ரசிப்பவர்களுக்கு மட்டும் இப்படம் பிடித்தமானதாக இருக்கும்.

இந்தப் படத்தின் டைட்டிலை கேட்டதும் ‘ஜெர்க்’ ஆக வேண்டாம். ‘பேப்பர் பூ’ என்று சிலர் சொல்வார்களே, அதன் பிரெஞ்சுப் பெயர் தான் இது. படம் முழுக்க வரவில்லையாயினும், இதில் முக்கியத் திருப்பத்திற்குக் அதுவே காரணமாக உள்ளது.

வீணடிக்கப்பட்ட பகத் பாசில்!

‘தலைநகரம்’ பட நாயகி ஜோதிர்மயி, இதில் பெரும்பாலான காட்சிகளில் வந்து போயிருக்கிறார். ‘அவரா இவர்’ என்று சொல்லும்படியான தோற்றத்தோடு நடித்திருக்கிறார். பெரிதாக உணர்வுகளைக் காட்டாதபோதும், ‘இப்படித்தான் இந்த நபர் இருப்பார்’ என்று நம்ப வைக்கிறார். அதுவே அவரது வெற்றி. அவரது தோற்றத்திற்கான காரணம் கதைக்கருவோடு பிணைக்கப்பட்டிருப்பது அருமை.

’குஞ்சாக்கோ போபன் இதில் வருகிறார், போகிறார். அவருக்கு என்ன வேலை’ என்று ரசிகர்கள் கருதும் அளவுக்கே அவரது இருப்பு படத்தில் உள்ளது. ஆனால், அவருக்கும் இக்கதையில் சிறப்பானதொரு இடம் தரப்பட்டிருக்கிறது.

பகத் பாசில் இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு அப்பாத்திரப் படைப்பு இல்லை. அவரது இருப்பு இப்படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இவர்கள் தவிர்த்து ஸ்ரீந்தா, ஷரப் யூ தீன், வீணா நந்தகுமார் உட்படச் சுமார் ஒரு டஜன் பேர் இதில் நடித்திருக்கின்றனர்.

இடுக்கி மற்றும் தேனியை ஒட்டியுள்ள கேரள எல்லையோரம் நிகழ்வதாகக் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காட்சிகளில் அந்த இயற்கை குளுமையைக் காண முடிவதில்லை. காரணம், கதைக்கருவுக்கு ஏற்ப ஒருவித வெறுமையைத் தனது ஒளிப்பதிவின் வழியே ஆனந்த் சி சந்திரன் நிறைத்திருப்பதுதான்.

சாம்பல் மற்றும் மெலிதான நீல வண்ணத்தை வாரியிறைத்தது போன்ற எபெக்டை ‘டிஐ’யில் உருவாக்கியிருப்பது கதையோடு நம்மை எளிதாக ஒன்ற வைக்கிறது.

கொஞ்சம் முன் பின்னாக நகர்கிற காட்சிகளைக் கொண்ட இத்திரைக்கதையைக் குழப்பமின்றி நாம் காண முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன். இது போக, ஆங்காங்கே சில மாண்டேஜ்கள் வேறு பயமுறுத்துகிறது.

கதவு கிறீச்சிடுவது போன்ற ஒலி, பகத் பாசில் அறிமுகத்தின்போது ஒலிக்கும். அது போன்ற வித்தியாசமான சத்தங்களைக் கொண்டு சுஷின் ஷ்யாம் அமைத்திருக்கும் பின்னணி இசை இக்கதைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.

ஜோசப் நெல்லிக்கல்லின் தயாரிப்பு வடிவமைப்பு, அமல் நீரட் காட்ட விரும்பிய உலகைத் திரையில் உருவாக்கியிருக்கிறது.

போலவே சமீரா சனீஷின் ஆடை வடிவமைப்பு, ரோனக்ஸ் சேவியரின் ஒப்பனை, தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு, சுப்ரீம் சுந்தர் மற்றும் மகேஷ் மேத்யூவின் சண்டைக்காட்சி வடிவமைப்பு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் இக்கதையுடன் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

லஜோ ஜோஸ் எழுதிய நாவலைக் கொண்டு இதன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அமல் நீரட். இதில் தமிழில் வரும் வசனங்களை ஆர்.ஜே.முருகன் எழுதியிருக்கிறார். கொஞ்சமாய் வந்தாலும் அந்த வசனங்கள் வருமிடங்கள் ரசிக்க வைக்கின்றன.

இயக்குனர் அமல் நீரட் ‘ஸ்டைலிஷான விஷுவல்’களை தந்து பிரமிக்க வைப்பவர். இதிலும் அப்படிப்பட்ட விஷயம் இருக்கிறது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அதற்கான சான்று.

Bougainvillea Opening Box Office : ബ്രാന്‍ഡ് അമല്‍ നീരദ്; ബോക്സ് ഓഫീസില്‍ വര്‍ക്ക് ആയോ 'ബോഗയ്ന്‍‍വില്ല'? ആദ്യ ദിനം നേടിയത്

விடுபட்டுப் போன ‘கண்ணி’!

அமல் நீரட்டின் திரைக்கதை முதலில் ஒரு புதிரை முன்வைக்கின்றன. அதாகப்பட்டது, ராய்ஸ் உடன் ரீத்து வாழும் வாழ்வு இயல்புக்கு மாறானதாக இருப்பதாக நம்மை உணர வைக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே அரை மணி நேரம் ஓடிவிடுகிறது. அதன்பிறகு இளம்பெண் காணாமல் போனது, அந்த வழக்கு விசாரணை, அக்குற்றத்தில் ரீத்துவின் தொடர்புக்கான ஆதாரம் என்றே சுற்றி வருகிறது.

இளம்பெண் காணாமல் போன இடத்திற்கு ரீத்து எப்படிச் சென்றார் என்ற கேள்விக்கான பதிலே, இக்கதையின் மையம். திரைக்கதையில் அந்த கேள்வி சரிவரக் கையாளப்படவில்லை. போலவே, 360 டிகிரியில் அமையும் போலீஸ் விசாரணையும் இக்கதையில் காணக் கிடைக்கவில்லை.

முக்கியமாக, காணாமல் போன இளம்பெண் எப்படி ரீத்துவுக்குப் பழக்கம் என்பதைச் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் இக்கதையின் மையமான ‘கண்ணி’. அது திரைக்கதையில் விடுபட்டிருப்பதால், கிளைமேக்ஸ் முழு திருப்தியைத் தருவதாக இல்லை.

பின்பாதியில் ஒரு பிளாஷ்பேக்கும் இடம்பெற்றுள்ளது. அதுவும் தெளிவான சித்தரிப்பைக் கொண்டிருக்கவில்லை.
திரைக்கதை ட்ரீட்மெண்டில் மம்முட்டியின் ‘ரோர்சா’, வெங்கட்பிரபுவின் ‘மன்மத லீலை’ உள்ளிட்ட சில படங்களின் சாயல் தென்படுகிறது. இன்னும் சில பாத்திரங்களைச் சேர்த்திருந்தால், நேர்த்தியான காட்சிகளை இடம்பெறச் செய்திருந்தால், ஆகச்சிறந்த ‘த்ரில்லர்’ படமாக ‘பூகன்விலியா’ ஆகியிருக்கும்.

உள்ளடக்கத்தில் அடங்கியுள்ள சில விஷயங்கள் ‘சென்சாரில்’ கட் செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் தெளிவற்ற சித்தரிப்பைப் படக்குழுவே கையாண்டிருக்கலாம் அல்லது அப்படிப்பட்ட காட்சிகள் தணிக்கையில் ‘நறுக்கப்பட்டிருக்கலாம்’.

குறைகள் சில இருந்தாலும், அவற்றை மீறி ‘வித்தியாசமான ஒரு த்ரில்லர்’ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அதற்குப் போதுமான நியாயம் செய்திருக்கிறது ‘பூகன்விலியா’.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசங்கரன் பாடகலிங்கம்

நெருங்கும் தவெக மாநாடு… தொண்டர்களுக்கு விஜய் வைத்த முக்கிய கோரிக்கை!

ஒரே நாளில் 20 வெடிகுண்டு மிரட்டல் : ரூ.80 கோடி இழப்பு… டிஜிசிஏ டிரான்ஸ்ஃபர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment