திருமணம் குறித்து ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நிவேதா தாமஸ் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானவர் நிவேதா தாமஸ். இதையடுத்து சமுத்திரகனி இயக்கிய போராளி படத்தின் மூலம் நிவேதா தாமஸ் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர், நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நிவேதா தாமஸ் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
நிவேதா தாமஸின் ட்விட்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிவேதா தாமஸ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “அதிக நாட்கள் ஆகிவிட்டது… ஆனால் இறுதியாக…” என்று இதய எமோஜியுடன் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியதோடு, நிவேதா தாமஸ் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், “35” படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தனது திருமணம் குறித்து வெளிவந்த செய்திகளுக்கு நடிகை நிவேதா தாமஸ் விளக்கம் அளித்தார்.
“எனக்கு திருமணம் என்ற செய்திகளை பார்த்து என் அம்மா மிகவும் ஆச்சரியப்பட்டார். குழந்தைகள் ஏதும் இருக்கா என்று என்னிடம் கிண்டலாக எனது அம்மா கேட்டார்.
இது தான் என் கணவர், இவர்கள் தான் என்னுடைய 2 மகன்கள். முதல் மகன் பெயர் அருண், இரண்டாம் மகன் பெயர் வருண்” என கூறிய நிவேதா தாமஸ் “35” படத்தில் தனக்கு கணவனாகவும், மகன்களாகவும் நடித்தவர்களை அறிமுகப்படுத்தினார்.
மேலும், “நான் நடிக்கும் படம் குறித்துதான் ஒரு பதிவை வெளியிட்டேன். அதைப் பார்த்து நிறைய பேர் எனக்கு திருமணம் ஆகப்போகிறது என்று பேசினார்கள். நான் தற்போது நடித்துள்ள படத்தில்தான் எனக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள்” என்று நிவேதா தாமஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அழைப்பு : முழு விவரம்!
மீன்பிடி படகுகளுக்கு வழங்க இருந்த 9,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்!