விமர்சனம் : மந்தாகினி!

Published On:

| By Kavi

Mandakini Malayalam Movie Review

மணமகளின் காதலனைத் தேடும் மணமகன் குடும்பம்!

ஒருவரிக் கதையொன்றைத் திரைக்கதையாக்கும்போது, அதில் இடம்பெறும் பாத்திரங்களின் வழியே, அதனை வெவ்வேறு வகைமை சார்ந்ததாக மாற்ற முடியும். ஒரு உதவி இயக்குனர் தான் பார்த்து ரசித்த சித்திரத்தில் இருந்து, அப்படியொரு பயிற்சியைத் திறம்பட மேற்கொண்டு அதனை உணரலாம். அதற்கு உதாரணம் காட்டப் பல திரைப்படங்கள் தமிழில் உண்டு.

அந்த வகையில், ‘முதலிரவின்போது கணவனுக்குத் தனது மனைவி இன்னொருவனைக் காதலித்திருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தால் என்னவாகும்’ என்று சொல்கிறது ‘மந்தாகினி’ திரைப்படம். ‘அந்த ஏழு நாட்கள்’ முதல் பல படங்களில் நாம் கண்ட ஒருவரிக்கதை தான் இது.

ஆனால், இயக்குனர் வினோத் லீலா ‘மந்தாகினி’யைக் காட்சியாக்கம் செய்திருக்கும் விதம், தியேட்டரில் ஒரு கொண்டாட்டத்தை நிகழ்த்துகிறது.

அப்படி என்ன மாயாஜாலம் இதில் பொதிந்திருக்கிறது?

கல்யாணக் கனவு!

அரோமல் (அல்தாப் சலீம்) மிகச்சாதாரண தோற்றம் கொண்ட, அப்பாவித்தனம் நிறைந்த ஒரு இளைஞன். இதுவரை அவரை ஈர்த்த பெண்கள் எவருமே, அவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்த்ததில்லை. அதுவே, திருமண வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளை அவர் மனதில் பெருகச் செய்கிறது. அது ஈடேறும் நாளும் வருகிறது.

அம்பிலி (அனார்கலி மரிக்கார்) என்ற பெண்ணைப் பார்க்கச் செல்கின்றனர் அரோமல் குடும்பத்தினர். அதையடுத்து, இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.

திருமணம் முடிந்ததும், அரோமல் வீட்டுக்கு வருகிறார் அம்பிலி. மணக் கொண்டாட்டம் முடிந்து, அவர்களது முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

அப்போது, அரோமலின் சகோதரி கணவர் உன்னி (வினோத் தட்டில் டேவிட்) அவரைக் காண்கிறார். ‘மாப்ளே டென்ஷன் ஆகாதீங்க, கொஞ்சம் குடிச்சா எல்லாம் சரியாகும்’ என்கிறார்.

டீட்டோட்டலர் ஆன அரோமல் அதனை ஏற்பதாக இல்லை. இருந்தாலும், உன்னியும் அவருடன் திரியும் அனியும் (குட்டி அகில்) வற்புறுத்துவதால் வேறு வழியில்லாமல் ‘சரி’ என்கிறார்.

எப்போதும் தன்னைத் திட்டிக் கொண்டிருக்கும் உன்னி மற்றும் அரோமலைப் பழி வாங்க இதுவே சரியான சந்தர்ப்பம் என்றெண்ணும் அனி, கொஞ்சம் அதிகமாக மதுவை ஊற்றி ‘காக்டெய்ல்’ தயார் செய்கிறார். அதனை முதலிரவு அறையில் வைக்கிறார். அதேநேரத்தில், அந்த மது அடுப்பங்கரையில் இருப்பதாக அரோமலிடம் சொல்கிறார் உன்னி.

சமையலறையில் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் டம்ளரில் இருக்க, அதுதான் மது என்று நினைத்துக் குடிக்கிறார் அரோமல். அதேநேரத்தில், முதலிரவு அறையில் இருந்த காக்டெய்லை ‘ஜுஸ்’ என்று நினைத்து குடித்துவிடுகிறார் அம்பிலி.

அவ்வளவுதான். முதலிரவு அறையில் வித்தியாசமான அம்பிலியைக் காண்கிறார் அரோமல். அப்போதுதான், தான் குடித்தது மது அல்ல என்றும், தனக்காக வைத்த மதுவைக் குடித்தது மனைவி என்றும் அறிகிறார்.

அந்த உண்மையை உணர்ந்து அரோமல் சுதாரிப்பதற்குள், அவரது தலையில் இடி விழுகிறது. ‘சுஜித் வாசுதேவ்’ என்பவரைத் தான் காதலித்ததாகச் சொல்ல ஆரம்பிக்கிறார் அம்பிலி.

போதையின் உச்சத்தில் அம்பிலி ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, அதனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் மச்சான் உன்னியை அழைக்கச் செல்கிறார் அரோமல். அவர் திரும்பி வருவதற்குள், வீட்டு வாசலில் தாய் ராஜலட்சுமி (சரிதா குக்கு), சகோதரி அஜிதா (அஸ்வதி ஸ்ரீகாந்த்) உட்படப் பல பெண்கள் அம்பிலி சொல்லும் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதற்குள் விஷயம் ‘வாட்ஸ்அப்’ மூலமாக அக்கம்பக்கத்தினருக்குத் தெரிய வருகிறது. அம்பிலியின் பெற்றோரும் கூட மணமகன் வீட்டுக்கு வந்துவிடுகின்றனர். அப்போதும், ‘நான் இப்பவே அந்த சுஜித் வாசுதேவைப் பார்த்தாகணும்’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் அம்பிலி.

அவமானத்தின் உச்சத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அரோமல் முழிக்கிறார். அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல், அம்பிலியின் பெற்றோர் உட்பட அனைவரும் திணறுகின்றனர்.

அந்த நேரத்தில், அம்பிலியை விளிக்கிறார் ராஜலட்சுமி; மருமகளைப் பார்த்து ‘வா, நாம போய் அந்த சுஜித் வாசுதேவைப் பார்ப்போம்’ என்கிறார்.

மகன், மருமகள், மகள் மற்றும் இதர பெண் உறவினர்கள் சகிதம் ராஜலட்சுமி ஒரு காரில் புறப்பட, அதன் பின்னால் உன்னி, அனி உள்ளிட்ட சிலர் இன்னொரு காரில் வருவதாக முடிவாகிறது.

அந்த பயணத்தின் முடிவு என்னவாக இருந்தது? அவர்கள் அந்த சுஜித் வாசுதேவைக் கண்டார்களா? அவருடனான அம்பிலியின் காதல் முடிவுக்கு வரக் காரணம் என்ன? அனைத்து உண்மைகளையும் அறிந்தபிறகு அரோமல் என்னவானார் என்று சொல்கிறது ‘மந்தாகினி’யின் மீதி.

மேற்சொன்ன கேள்விகளைக் கண்டவுடன், இது ஒரு சீரியஸ் படம் என்று மனதுக்குள் தோன்றும். அதற்கு மாறாக, ரொம்பவே சீரியசான பிரச்சனையொன்றைச் சிரிக்கச் சிரிக்கத் திரையில் சொன்ன வகையில் வேறுபட்டு நிற்கிறது ‘மந்தாகினி’.

அரோமல் என்ற அப்பாவியின் கல்யாணக் கனவு குலைந்து போவதாகத் திரைக்கதை நகர்ந்தாலும், ‘அப்பாவியான ஆண்களை ரசித்துக் கொண்டாடும் பெண்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்’ என்று ‘பாக்யராஜ்’ பாணி கதை சொல்லலைக் கொண்டிருக்கிறது இப்படம். அதுவே இதன் யுஎஸ்பி.

குறைந்த பட்ஜெட்டில் வெற்றி!

நம்மூரில் குறைந்த பட்ஜெட் படம் என்றால், அதில் காட்சிகளின் உள்ளடக்கம், ஷாட்களின் எண்ணிக்கை, லொகேஷனுக்கான செலவு என்று எல்லாமே மிகக்குறைவாக இருக்குமென்ற எண்ணம் இருக்கிறது. மாறாக, ‘மந்தாகினி’யில் குறைவான பட்ஜெட்டில் நிறைவான காட்சியனுபவமொன்றை உணர வைத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் இயக்குனர் வினோத் லீலா.

அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், .ஒளிப்பதிவாளர் சிஜு பாஸ்கர் திரையில் கலர்ஃபுல்லான விஷுவல்களை காட்டுகிறார். இந்த படத்தின் கதையும் அவருடையதே.

பெண் பார்க்கும் நிகழ்வு, திருமண கொண்டாட்டம், மணமகன் வீடு, இரவு நேரப் பயணம் என்று கதை நகரும் களங்களைத் திறம்படத் திரையில் நாம் உணர வகை செய்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் சௌம்யதா வர்மா.

மிகச்செறிவான கதை சொல்லலை உணரும் வண்ணம் ஒவ்வொரு காட்சியையும் நறுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷெரில்.
இசையமைப்பாளர் பிபின் அசோக், பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் வழியே ஒரு கொண்டாட்ட மனநிலையை தியேட்டரில் உருவாக்குகிறார்.

இந்த படத்தை இயக்கியிருக்கும் வினோத் லீலா, இதில் இருபக்கமும் கூரான ஒரு கத்தியைக் கையிலேந்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் கிண்டலடிக்கச் சாத்தியமுள்ள ஒரு கதையை எடுத்துக்கொண்டு, கனகச்சிதமான பாத்திர வார்ப்பு மற்றும் காட்சியாக்கம் மூலம் திரையில் அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள் நிறையவே உண்டு. அதிலும், அரோமல் குடிக்க வேண்டிய ‘காக்டெய்ல்’ எப்படி இருக்க வேண்டும் என்று உன்னி பாத்திரம் விளக்கும் இடம் ரொம்பவே அபாயகரமானது; நாமும் அதனை ‘ட்ரை’ செய்யலாமே என்ற எண்ணத்தைத் தூண்டக் கூடியது.
இதில் பெண் பாத்திரங்கள் மது அருந்துவதாகவும், அவர்கள் இரவு நேர ரோந்தில் ஈடுபடும் போலீசாரிடம் சிக்கிக் கொள்வதாகவும் ஒரு காட்சி உண்டு. அப்போது சிரிப்பை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது.

அதையெல்லாம் மீறி, ‘மது போதை தேவையில்லை’ என்ற நீதி இக்கதையில் ஒளிந்துள்ளது. அதனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அது போன்ற ஒரு சில குறைகளே ‘மந்தாகினி’யில் உண்டு.

மற்றபடி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு சென்றால் சிறப்பான பொழுதுபோக்கினை இப்படம் நிச்சயமாகத் தரும். அதற்கு இப்படத்தின் ’காஸ்ட்டிங்’ முக்கியக் காரணம்.

வயிறு குலுங்கச் சிரிக்கலாம்!

‘மந்தாகினி’யில் மலையாளத் திரையுலகின் முதன்மையான நட்சத்திரங்கள் என்று எவரும் இல்லை. இதில் நடித்திருக்கும் பலரை வேறு படங்களில் இரண்டொரு காட்சிகளில் பார்த்திருப்போம். ஆனால், அவர்களில் ஒருவர் கூட ‘அமெச்சூர்’ கலைஞர்கள் இல்லை என்று நிரூபிக்கிறது இப்படம்.

சமீபத்தில் வந்த ‘பிரேமலு’வில் ஹைதராபாதில் நாயகனுக்குப் பயிற்சி அளிக்கும் ஆசிரியராகத் தோன்றியிருப்பார் அல்தாப் சலீம். அதில், அவர் வரும் காட்சிகளை விரல் விட்டு எண்ண முடியும். அவர்தான் இதில் நாயகன். ‘இப்படியொரு அப்பாவி இருக்க வாய்ப்பில்லை’ என்பது போலத் திரையில் தோன்றி அதகளம் செய்திருக்கிறார்.

அவருக்கு இணையாக, முன்பாதி முழுக்கத் திரையை ஆக்கிரமிக்கிறார் மச்சான் ஆக வரும் வினோத் தட்டில் டேவிட். சில போலீஸ் படங்களில் இவரைக் கொஞ்சம் முதுமையான போலீிஸ்காரராக மட்டுமே பார்த்திருப்போம். அவரது ‘காமெடி டைமிங்க்’ இதில் தெறிக்கிறது.

இதில் சுஜித் வாசுதேவ் ஆக கணபதி பொதுவால் நடித்துள்ளார். கொஞ்சம் சூர்யா, இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் சாயல் இவரது நடிப்பில் தெரிகிறது. தன்னைத் தேடி வந்த கூட்டத்தினர் முன்னால் இவர் குத்தாட்டம் போடும் காட்சி அதகளமாக இருக்கும்.

இன்னும் அனி, அஜிதா, அவர்களது உறவினர்கள் பாத்திரங்களில் நடித்தவர்கள் என்று பலர் இதில் உண்டு. இயக்குனர் லால் ஜோஸ் மற்றும் ஜியோ பேபி, ஜாபர் இடுக்கி போன்ற பல ஜாம்பவான்கள் அப்பாத்திரங்களில் தோன்றி இரண்டொரு காட்சிகளில் மட்டும் வந்து போவது மலையாள சினிமாவுலகில் மட்டுமே நிகழும் அதிசயம். ஆனால், அந்த காட்சிகளிலும் அவர்களுக்கான முக்கியத்துவத்திற்குக் குறைவில்லை.

இந்த படத்தில் அனைவரையும் மீறி நம் நெஞ்சில் நிலைப்பது நாயகியின் மாமியாராக வரும் சரிதா குக்கு. இதற்கு முன் விருதுகள் குவித்த சில மலையாளப் படங்களில் இவர் தலைகாட்டியிருந்தாலும், கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் ‘யார் இவர்’ என்று மலைக்கும் அளவுக்கு சரிதாவின் பெர் பார்மன்ஸ் இதில் அமைந்துள்ளது.

மருமகளைப் பார்த்து ‘வா, உன்னோட காதலனைப் பார்க்கலாம்’ என்று சொல்லும் மாமியாரைத் தாய்மார்கள் கூட்டம் போற்றுமா? தூற்றுமா? ‘மந்தாகினி’ ஓடும் தியேட்டருக்குச் சென்றால் அதற்கான பதிலை நீங்கள் காண முடியும்!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

T20 World Cup 2024: மேற்கிந்திய தீவுகளுக்கு தோல்வி பயத்தை காட்டிய பப்புவா நியூ கினியா

கலைஞர் திருவுருவ படத்திற்கு டெல்லியில் மரியாதை : ராகுல், சோனியா புகழாரம்!

அரண்மனை- 4 முதல் கருடன் வரை…. மே மாத பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

Share Market: மோடி மேஜிக்! 1 மணி நேரத்துக்குள் 11 லட்சம் கோடி லாபம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel