கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி புஷ்பா படத்தின் பிரீமியர் ஷோ ஹைதரபாத் சந்தியா தியேட்டரில் வெளியிடப்பட்டது. படத்தை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் 9 வயது மகன் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், ‘அல்லு அர்ஜூன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் பற்றியும் ரேவதி இறந்தது பற்றியும் அவரிடத்தில் தகவல் கூற முயன்றனர். நேரடியாக அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவரின் மேலாளர் வழியாக அல்லு அர்ஜூனுக்கு சொல்லப்பட்டுள்ளது. தியேட்டரில் இருந்து அவர் வெளியேற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் அவரிடத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், 3 மணி நேரம் முழுமையாக இருந்து படத்தை பார்த்து விட்டுதான் செல்வேன் என்று அவர் அடம் பிடித்துள்ளார். பின்னர், சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்ளே சென்று அல்லு அர்ஜூனை வெளியேற வைத்துள்ளார். அதோடு, அல்லு அர்ஜூனின் பாதுகாவலர்களும் ரசிகர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதுதான், ஒரு வி.ஐ.பியின் குணநலன்களா?’ என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தகவல்களை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த் வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
அல்லு அர்ஜூனின் ஜாமீனை ரத்து செய்ய போகிறீர்களா? அல்லு அர்ஜூன் ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அமைதியாக இருக்கும்படி கூறி மிரட்டினார்களா? போன்ற கேள்விகளுக்கு ஹைதராபாத் கமிஷனர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
இதற்கிடையே, தெலங்கானா மாநில டி.ஜி.பி கூறுகையில், சினிமா பிரபலங்கள் ரசிகர்களின் உயிரின் மதிப்பை அறிந்து அதற்கேற்றார் போல் நடந்து கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்