”என்ன மாதிரியான மனிதர் அவர்?” : அல்லு அர்ஜூனை சட்டமன்றத்தில் விளாசிய தெலங்கானா முதல்வர்!

Published On:

| By Minnambalam Login1

புஷ்பா 2 திரையிடலின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனை சட்டமன்றத்திலேயே தெலங்கானா முதல்வர் நேற்று(டிசம்பர் 21) கடுமையாக விமர்சித்தார்.

தெலங்கானா தலைநகரம் ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சந்தியா திரையரங்கத்தில் ‘புஷ்பா-2’ படம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

அப்போது அத்திரைப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுனும் படம் பார்க்க வந்தார். இதனால் படம் பார்க்க வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவரை அருகில் காண்பதற்காக அவரின் காரை சுற்றி கூட முயற்சித்தனர்.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த ரேவதி என்பவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் அவரது 8 வயது மகன் ஸ்ரீ தேஜ்ஜும் படுகாயம் அடைந்ததால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.

இதனை அடுத்து, இறந்த போன பெண் குடும்பத்தார் கொடுத்த போலீஸ் புகாரை அடுத்து, அல்லு அர்ஜுன் டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவருக்கு அடுத்த நாளே ஹைதராபாத் உயர்நீதிமன்றம் நான்கு வாரத்திற்கு இடைக்கால பிணை வழங்கியது.

இந்த நிலையில் ஹைதராபாத் சட்டமன்றத்தில் இது தொடர்பாக எம்.எல்.ஏ அக்பருதின் ஒவைஸி நேற்று கேள்வி எழுப்பினார்.

போலீஸ் கூறியும் கேட்கவில்லை!

இதற்கு பதிலளித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி “டிசம்பர் 4 அன்று திரையரங்கத்திற்கு வருவதற்கு அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் அனுமதி தரவில்லை. ஆனால் அதை மீறியும் அவர் வந்துள்ளார். மேலும் ரோட் ஷோவும் நடத்தினார்.

இதனால் அவரை சுற்றி கூட்டம் கூடியுள்ளது. இதனால் ஏற்பட்ட நெரிசலால்தான் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீ தேஜ்ஜின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது.

இந்த சம்பவம் நடந்துகொண்டிருக்கையில் அல்லு அர்ஜுன் படம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரை போலீஸ் அதிகாரிகள் சிலர் திரையரங்கத்தை விட்டு கிளம்புமாறு கூறியும், படம் முடிந்த பிறகே செல்வதாக கூறி அவர் மறுத்துள்ளார்.

இதனை அடுத்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் அல்லு அர்ஜுனிடம் ,”உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறிய பிறகுதான் அல்லு அர்ஜுன் அங்கிருந்து கிளம்பியுள்ளார். என்ன மாதிரியான மனிதர் அவர்?” என்று கேள்வி எழுப்பினார்.

கை, கால்களை இழந்துவிட்டாரா?

மேலும் பிணையில் வெளிவந்த அல்லு அர்ஜுனை நேரில் சென்று சந்தித்த தெலுங்கு திரையுலகு பிரபலங்களை குறித்து பேசுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக, அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இரவு மட்டும் சிறையில் இருந்து மறுநாள் ஜாமீனில் விடுதலையாகி வீட்டிற்கு சென்றார். அல்லு அர்ஜுன் சில மணி நேரமே சிறையில் இருந்தார்.

உடனே நடிகர்கள் பலரும் அவரது வீட்டிற்குச் சென்று ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர் வீட்டிற்கு சென்றபோதும் அவரை பார்க்க வரிசையில் பலர் நிற்கின்றனர். அல்லு அர்ஜுன் என்ன கை, கால்களை இழந்துவிட்டாரா?

நாங்கள் யாரோ சிலரின் பேச்சைக் கேட்டு அவரை கைது செய்ததாக தகவல் பரப்புகிறார்கள். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை யாரும் சென்று பார்க்காதது துரதிர்ஷ்டவசமானது” என அவர் கூறினார்.

இனி சிறப்பு காட்சிகள் கிடையாது!

மேலும், “உங்கள் தொழிலை நடத்தவும், உங்கள் திரைப்படங்களை எடுக்கவும், பணம் சம்பாதிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு ஊக்கத்தொகை, மானியங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.

ஆனால் ஒருவரின் கொலைக்கு காரணமான பிறகு, இனிமேல் உங்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்காது இத்தனை வருடங்களில் சினிமா துறைக்கு டிக்கெட், விலை மற்றும் சிறப்பு காட்சிகள் என சலுகைகள் வழங்கப்பட்டு நன்றாக இருந்தது.

ஆனால் இப்போது திரையுலகம் சாமானியர்களைக் கொல்லத் தொடங்கிவிட்டது. இனிமேல், நான் மாநில முதல்வராக இருக்கும் வரை திரைத்துறைக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைக்காது. நான் முதலமைச்சராக இருக்கும் வரை தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்பு காட்சிகள் கிடையாது” என ரேவந்த் ரெட்டி ஆவேசமாக தெரிவித்தார்.

அல்லு அர்ஜூன் குற்றச்சாட்டு!

இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அல்லு அர்ஜுன் “கூட்ட நெரிசலில் இறந்து பெண்னின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அது ஒரு விபத்து. மருத்துவமனையில் இறந்த பெண்ணின் மகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். என்னை பற்றி பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. என் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்” என்று அல்லு அர்ஜூன் தெரிவித்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

திமுக செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா, அதிமுகவுக்கு எதிராக தீர்மானம்!

மார்கோ : விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share