புஷ்பா-2 திரையிடலின் போது பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனை கடந்த 3 மணி நேரமாக ஹைதராபாத் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கத்தில், சிறப்பு காட்சியை காண்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வந்துள்ளார்.
அவரை காண்பதற்கு ரசிகர்கள் அங்கு குவிந்தததால், கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற அவரது ரசிகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனும் அன்று படுகாயம் அடைந்ததால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனால் அல்லு அர்ஜுன் டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு அடுத்த நாளே ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டமன்றத்தில் அல்லு அர்ஜுனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்ற 6 மர்ம நபர்கள், அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்தனர். கற்களை வீசினர். இதனை அறிந்து, அங்கு வந்த காவலர்கள் அவர்களை கைது செய்தனர். ஆனால் அவர்களுக்கு நேற்று ஹைதராபாத் உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் சந்தியா திரையரங்கத்தில் பெண் இறந்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹைதராபாத் சிக்கட்பல்லி போலீஸார் அவருக்கு நேற்று(டிசம்பர் 24) சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதனையடுத்து, இன்று காலை 11 மணிக்கு சிக்கட்பல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரது அப்பா அல்லு அரவிந்த், மாமனார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் ரெட்டி மற்றும் அவரது வழக்கறிஞர்கள் ஆகியோருடன் சென்று ஆஜரானார்.
அவரிடம் போலீஸார் தொடர்ந்து கடந்த 3 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிக்கட்பல்லி போலீஸ் ஸ்டேஷன் அருகே மக்கள் குவிந்துள்ளனர்.

இதற்கிடையில் பாஜக செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி ” தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அரசின் அதிகாரத்தை அல்லு அர்ஜுனுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறார். அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்ளாததால், ரேவந்த் ரெட்டி பயந்து போய் உள்ளார்” என்று ஏஎன்ஐ பத்திரிகைக்கு இன்று பேட்டி அளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சிரியாவில் கிறிஸ்துமஸ் மரம் எரிப்பு; வெடித்தது அடுத்த போராட்டம்!
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை… தலைவர்கள் புகழஞ்சலி!