நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது இன்று (டிசம்பர் 22) மாலை மர்ம நபர்கள் சிலர் கல்லெறிந்து தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த புஷ்பா-2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியானது. ஹைதராபாத்தில் அப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிட்டபோது அல்லு அர்ஜுன் வந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ரேவதி என்ற பெண் இறந்தார். மேலும், அவரது மகன் ஸ்ரீ தேஜ்ஜா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். ஆனால், ஒரே நாளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனை சட்டமன்றத்தில் கண்டித்திருந்தார். இதற்கு அல்லு அர்ஜுன் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக பதிலளித்திருந்தார்.
மேலும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ” என்னுடைய ரசிகர்கள் இணையத்தளத்திலோ அல்லது நேரிலோ தங்களது எண்ணங்களை பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்யான ஐடிகளிலிருந்து யாராவது மோசமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மாதிரி பொய்யான ஐடிகளுடன் எனது ரசிகர்கள் உரையாட வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் ஹைதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அல்லு அர்ஜுனின் வீட்டிற்கு சென்று கல்வீசி தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி புறக்கணிப்பு…. வலுக்கும் எதிர்ப்பு!