பெருநகரமொன்றில் வசிக்கும் பெண்களின் கதை!
சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற ஒரு இந்தியப் படத்திற்கு உள்நாட்டில் எத்தகைய வரவேற்பு கிடைக்கும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் ரசிகர்களுக்கும் நம்மூர் தியேட்டரில் கூடுகிறவர்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு.
அவர்களது எதிர்பார்ப்புகள் வெவ்வேறு திசைகளில் இருக்கும். அவற்றை மீறிச் சுவாரஸ்யமான கதை சொல்லலும் மண் மற்றும் மனிதம் சார்ந்த உணர்வுப் பிணைப்பும் இருந்தால் மட்டுமே ஒரு படம் பெரும்பாலாரின் வரவேற்பைப் பெறும்.
அப்படியொரு வரவேற்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது பாயல் கபாடியாவின் ‘All We Imagine As Light’. இப்படம் இந்த ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவில் கிராண்ட்பிரிக்ஸ் பரிசைப் பெற்றிருக்கிறது.
தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது என்று காண்போமா?
பிரவாகமெடுக்கும் உணர்வுகள்!
மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த பலர் நர்ஸ் ஆகப் பணியாற்றுகின்றனர். அந்த நர்ஸ்களில் சீனியர்களில் ஒருவரான பிரபாவும் (கனி குஸ்ருதி) ஜுனியர்களில் ஒருவரான அனுவும் (திவ்யபிரபா) ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றனர்.
பிரபாவின் கணவர் ஜெர்மனியில் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு அங்கு சென்றவர் மீண்டும் இந்தியா திரும்பவே இல்லை.
கேரளாவிலுள்ள கிராமம் ஒன்றில் பெற்றோர் வசிக்க, மும்பையில் வாழும் அனு அவர்களோடு மொபைலில் கூடப் பேசத் தயாராக இல்லை. ’எந்நேரமும் கல்யாணப் பேச்சு தவிர வேறெதையும் அவர்கள் பேசுவதில்லை’ என்பதாகப் பிரபாவிடம் அவர் குறை சொல்கிறார்.
உண்மையில், ஷியாஸ் (ஹ்ருது ஹாரூண்) எனும் வாலிபரைக் காதலிக்கிறார் அனு. இது மருத்துவமனையில் உள்ள பல பணியாளர்களுக்குத் தெரியும். ஒருமுறை அந்த தகவல் பிரபாவிடம் சொல்லப்படுகிறது. ஆனால், அது பற்றி அவர் அனுவிடம் எதுவும் கேட்பதில்லை.
அதேநேரத்தில், அவருக்குள் இருக்கும் தாபம் ஒருமுறை அனுவிடத்தில் ஆத்திரமாக வெளிப்படுகிறது.
மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்ப்பவர் பார்வதி (சாயா கடம்). அவர் வாழும் வீட்டை ஆக்கிரமிக்கிறது ஒரு கட்டுமான நிறுவனம். அப்பகுதியிலுள்ள பலரிடம் ஆவணங்களை வாங்கிக்கொண்டு பணத்தை அல்லது வேறு பகுதியில் இடத்தை வழங்குகிறது. ஆனால், பார்வதியிடம் வீட்டுக்கான ஆவணம் ஏதுமில்லை.
22 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வீட்டைப் பிரியவும் முடியாமல், தனிக்குடித்தனம் சென்ற மகனோடும் இருக்க முடியாமல், சொந்த ஊரான ரத்னகிரிக்கே திரும்ப முடிவெடுக்கிறார்.
வீட்டில் உள்ள சில பொருட்களை எடுத்துக்கொண்டு பார்வதி கிளம்ப, அவருடன் அனுவும் பிரபாவும் செல்கின்றனர். அங்கு சென்றபிறகே, அனுவின் பின்னால் ஷியாஸும் வந்தது பிரபாவுக்குத் தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை முதன்முறையாகப் பார்க்கும்போதே அதனை அவர் உணர்கிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
பிரபா, அனு, பார்வதி ஆகிய மூன்று பெண் பாத்திரங்களிடத்தில் பிரவாகமெடுக்கும் உணர்வுகளுக்கே முக்கியத்துவம் தந்திருக்கிறது திரைக்கதை.
கூடவே ஒரு ஆண், பெண்ணின் தனிப்பட்ட உறவு எப்போது சக மனிதர்களுக்கு உறுத்தலாகத் தெரியாது என்பதற்கான பதிலும் படத்தில் சொல்லப்படுகிறது.
காலை முதல் மாலை வரை ஏதாவது ஒரு வேலை செய்து சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பெருநகர மனிதர்களிடத்தில் எப்போதாவது ஒருமுறை எழுகிற ‘இந்த பிழைப்பு எதற்காக’ என்ற கேள்விக்கான பதிலாகவும் இப்படம் அமைந்துள்ளது. அது போன்ற சில அம்சங்களே இப்படத்தின் யுஎஸ்பியாக உள்ளன.
ஈர்க்கும் பாத்திரங்கள்!
கனி குஸ்ருதி, திவ்யபிரபா, சாயா கடம், ஹ்ருது ஹாரூண், அஸீஸ் நெடுமங்காடு, ஆனந்த் சாமி ஆகியோரே இதில் பிரதானப் பாத்திரங்களில் வந்து போயிருக்கின்றனர். குறிப்பாக, மூன்று பெண்களின் வலியை, வேதனையை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பைச் சொல்வதாகவே உள்ளது இப்படம்.
பிசாசு, களம், ஸ்பைடர் போன்ற படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர் கனி குஸ்ருதி. ‘பிரியாணி’ என்ற மலையாளப் படம் மூலமாகத் தீவிர சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானவர். அவருக்குச் சர்வதேச அளவில் புகழ் தந்த படமாக இது அமைந்திருக்கிறது. ‘சாதாரணமாகவே இவர் இப்படித்தான் இருப்பாரோ’ என்றெண்ணும் அளவுக்கு மிக இயல்பானதொரு நடிப்பைத் திரையில் தந்திருக்கிறார்.
’கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்த திவ்யபிரபா, சீரியசான சினிமாக்களில் மட்டுமே தலைகாட்டுபவர். திருமண வயதை எட்டிய ஒரு பெண்ணாக, தனது சுய விருப்பங்களுக்கு மதிப்பில்லையா என்ற கேள்வியைச் சுமக்கிறவராக, இப்படத்தில் தோன்றியிருக்கிறார். காதலின் இனிமையையும், அது கைகூடுமா என்ற கேள்வியின் தகிப்பையும் வெளிப்படுத்துகிறபோது நம்மை ஈர்க்கிறார்.
சாயா கடம் இதில் நிறைவாழ்வு கண்ட பெண்மணி போன்று தோன்றியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளோடு எளிதாக நம்மால் ஒன்ற முடியும். அதுவே அவரது நடிப்பின் சிறப்பு.
இவர்கள் தவிர்த்து ’தக்ஸ்’ படத்தில் நடித்த ஹ்ருது ஹாரூண், நாடக நடிகர் ஆனந்த் சாமி, மலையாளப் படங்கள் பலவற்றில் இடம்பெற்றுவரும் அஸீஸ் நெடுமங்காடு ஆகியோரும் இப்படத்தில் உண்டு.
இதில் ஆண் பாத்திரங்கள் மூன்றும் பெண் பாத்திரங்களின் மீதான மையலை வெளிப்படுத்துபவையாகவே காட்டப்பட்டிருக்கின்றன. அவர்களது பின்னணி விவரிக்கப்படவில்லை.
சாதாரணமாக ஒரு விருதுப் படத்தைப் பார்க்கையில் எத்தகைய திரையனுபவம் கிடைக்குமோ, அதெல்லாம் தருகிறது ‘All We Imagine As Light’.
இயற்கையான ஒளியில் படம்பிடிக்கப்பட்டதாக எண்ண வைக்கும் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ். மும்பையின் இயக்கத்தை, மக்களின் வாழ்வைச் சொல்கிற காட்சிகள் ’ஒரு ஆவணப்படம் பார்க்கிறோமோ’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.
படத்தொகுப்பாளர் க்ளெமெண்ட், கதையின் போக்கை ஒரு நீரோட்டமாகத் திரையில் வடிகிறவாறு காட்சிகளைப் பிணைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் டோப்சேவின் உழைப்பு மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு பேண்ட்களின் இசை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பல காட்சிகளில் ஓரிரு வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்திருப்பது மிக எளிதாகக் காட்சியமைப்புடன் நேர்கோட்டில் நம்மை நிற்கச் செய்கிறது.
தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் பியூஷா சால்கே, ஷமீம் கான், யஜஸ்வி சபர்வாலின் பங்களிப்பு, ஒலிக்கலவை, ஆடை வடிவமைப்பு என்று பல தொழில்நுட்ப அம்சங்களுடன் நேரடியாக மும்பையில் வாழ்கிற சில மனிதர்களை நேரில் சந்தித்த அனுபவத்தை வழங்குகிறது இப்படம்.
இயக்குனர் பாயல் கபாடியா இந்தப் படத்தில் கதாபாத்திரங்களின் பின்னணிக்கேற்ப மலையாளம், இந்தி, மராத்தி மொழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.
பெருங்கூட்டத்தைக் காட்டுகிற காட்சிகளில், அந்தச் சூழலில் எழுகிற ஒலியை நேரடியாகக் கேட்டால் எப்படியிருக்குமோ அதனை தியேட்டரிலும் உணர வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.
மும்பை போன்ற பெருநகரத்தில் வசிப்பவர்களில் பலர் வேறிடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களாக இருந்தாலும், அங்கு ஏற்கனவே இருந்துவரும் கலை, கலாசார, வாழ்வியல் அம்சங்களோடு கலந்து போவார்கள். அதனைத் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
அது போன்ற விஷயங்களே இப்படத்தின் பலம். மேலும், இப்படத்தில் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் மன உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அதுவே சுவாரஸ்யத்திற்குக் காரணமாக உள்ளது.
மலையாளத்தில் வெளியான ஆக்ஷன், காமெடி, த்ரில்லர், ரொமான்ஸ் படங்களைப் பார்த்துச் சிலாகிக்கும் ரசிகர்கள் கூட, ‘All We Imagine As Light’ படத்தைப் பார்த்து ரசிப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. காரணம், இதிலிருக்கும் கதை சொல்லல் பாணி அப்படங்களுக்கு மாறானது.
அந்த வித்தியாசமான அனுபவத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் இப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம். ‘நமக்கு அது எதுக்கு’ என்பவர்கள், இதனைத் தாராளமாகப் புறக்கணிக்கலாம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
ரெட் அலர்ட் : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!
IPL Auction Day 2 : ஐபிஎல் ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல்!