இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வணிக முக்கியத்துவம், வசூல் செய்யக்கூடிய படங்கள் அனைத்தும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமாகவே வெளியானது.
விருமன், கேஜிஎஃப்- 2, காந்தாரா ஆகிய படங்கள் மட்டுமே தப்பியது.
தமிழ் படங்கள் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடத்தில் தயாரிக்கப்படும் பன்மொழி படங்களின் தமிழ்நாட்டு விநியோக உரிமைகளையும் ரெட் ஜெயண்ட் கைப்பற்ற தொடங்கியுள்ளது.
நேரடியாக ரெட் ஜெயண்ட் மூலம் வெளியிட விரும்பாத பெரிய படங்களை செண்பகமூர்த்தி மூலமாக வெளியிடும் புதிய முறையை பொன்னியின் செல்வன் படம் மூலமாக அறிமுகப்படுத்தினார்கள்.
அதனால்தான் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி உறுதியான பின்பு மரியாதை நிமித்தமாகவும், வாழ்த்து சொல்லவும் மணிரத்னத்தை அவரது இல்லத்தில் லைகா நிர்வாகி தமிழ்குமரன் சந்தித்தபோது அவருடன் செண்பகமூர்த்தி மட்டும் சென்றிருந்தார். உதயநிதி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் தமிழ் படங்களை வெளியிட செண்பகமூர்த்தி மூலம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் முயற்சியை மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விநியோகஸ்தர்கள் மத்தியில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.
இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு லவ் டுடே என பெயர் வைத்துள்ளனர். அந்தப் படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார்.
இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் மொத்த உரிமைக்காகவும், ஏரியா அடிப்படையிலான உரிமைக்காகவும் விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்தை அணுகியிருக்கிறார்கள். அவுட்ரேட் முறையில் விலை கொடுக்கவும் தயாராக இருந்திருக்கிறார்கள்.
ஆனால், படத்தயாரிப்பு நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் இப்படத்தைத் தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைக் கொடுத்துவிட்டார்கள். இதனால் இப்படத்தின் தமிழக உரிமையை கேட்ட விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக இருக்கும் செண்பகமூர்த்தி, இப்படத்தின் கர்நாடக திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்றிருக்கிறாராம்.
ரெட்ஜெயண்ட் நிறுவனம் எல்லாப் படங்களையும் விநியோக முறையிலேயே வெளியிடும். அந்த நடைமுறையை கர்நாடகத்திலும் அறிமுகப்படுத்தியிருக்கிறாராம் செண்பகமூர்த்தி. அங்கு அப்படத்தை எம்ஜி முறையில் வெளியிட விநியோகஸ்தர்கள் முன்வந்திருக்கிறார்கள்.
ஆனால், படத்தயாரிப்பு நிறுவனம், செண்பகமூர்த்தியிடம் விநியோக முறையில் வெளியிட ஒப்புக்கொண்டு படத்தைக் கொடுத்திருக்கிறது. இதனால் விநியோகஸ்தர்கள் வட்டாரம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில்தான் இந்த வியாபார நடைமுறையைக் கொண்டுவந்து திரைப்பட விநியோகஸ்தர்கள் என்கிற ஒரு இனமே அழிவை நோக்கிப் போகசெய்தனர். இப்போது கர்நாடகத்திலும் அந்த வேலையைத் தொடங்கிவிட்டனர் என்று சொல்லி வருத்தப்படுகின்றனர்.
-அம்பலவாணன்
நாங்களும் வரலாமா: த்ரிஷாவுக்கு ரசிகர்கள் கேள்வி?