விளக்குகளை விஞ்சி ஒளிர்ந்த மெக்சிகோவின் மின்மினி கலைஞன்!

Published On:

| By Kavi

Alejandro González Iñárritu birthday article

மின்விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நவநாகரீக ஜப்பானிய நகர் ஒன்றின் உயரமான மாடிக்கட்டிட பால்கனியில் காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு இளம்பெண் முழு நிர்வாணமாய் தன் முன் பரந்து நெடிந்திருக்கும் நகரை வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் தந்தை வீட்டிற்கு வந்த பின் உள்ளே தன் மகளைக் காணாது தேட, பால்கனியில் அவ்வாறு நின்றிருக்கும் அவளைக் கண்டு அருகில் சென்று நிற்கிறார்.

தன் மனதிற்கு விருப்பமான ஒருவரால் அவளின் தீராத பாலியல் விருப்பம் நிராகரிக்கப்பட்டதன் துக்கம் தாளாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து இருக்கிறது.

அதை அவளால் சொல்லவும் முடியாத நிலையை கண்களால் உணர்ந்து கொண்ட தன் அப்பாவின் கைகளைப் பிடித்து, அவரைப் பற்றிக்கொண்டு தேம்பி அழுகிறாள். தன் குழந்தையை எந்த கேள்வியும், சலனமும் இன்றி அவள் அப்பா தோளில் தட்டி கொடுத்து தேற்றுகிறார். திரை இருள்கிறது.

என் குழந்தைகளுக்கு இப்படத்தை சமர்ப்பிக்கிறேன் என்று மெக்சிகன் இயக்குனர் அலெசாந்த்ரோ இன்யாரித்தோவின் வார்த்தைகள் தோன்ற “பேபல்” திரைப்படம் முடிகிறது.

அதென்ன வார்த்தை பேபல்? பேபல் ஒரு விதத்தில் குழப்பம் என்கிற அர்த்தப்படுகிற வார்த்தை.

உலகத்தின் மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசிக்கொண்டிருக்கும் காலத்தில் சொர்க்கத்தை முட்டுகிற உயரத்தில் கோபுரம் ஒன்றை கட்டத்தொடங்கிய போது கடவுள் தோன்றி அவர்களின் பேசும் மொழியை மாற்றி ஒருவருக்கொருவர் புரியாதபடி ஆக்க, பெரும் குழப்பம் ஏற்படவே அந்த கோபுரம் கட்டும் வேலை அப்படியே நின்று போனது .

பாதியில் நின்ற அந்த கோபுரத்தின் பெயர் பேபல் என்றும், அன்றிலிருந்து மக்கள் வெவ்வேறு மொழிகள் பேசும்படி ஆனார்கள் எனும் பைபிள் கதையால் இத்திரைப்படத்திற்கு பேபல் எனப் பெயர்.

மொராக்கோ, மெக்சிகோ என வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சூழல்களில் சிக்கித்தவிக்கும் வெவ்வேறு மொழிகள் பேசும் கதாப்பாத்திரங்களின் கதைகளையும் , ஜப்பானில் பேச இயலாத மாற்றுத்திறன் கொண்ட இளம்பெண்ணின் வளரிளம் பருவக் கதையையும் ஒரே புள்ளியில் இணைத்து பேசிய இப்படத்திற்கு பேபல் என்பது எத்தனை பொருத்தமான பெயர்?! நிற்க.

2017 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் VR (Virtual Reality) குறும்படம் ஒன்று வெளியானது. திரைப்பட ஆர்வலர்களும், ரசிகர்களும் VRகருவிகளை கண்களில் மாட்டிக்கொண்டு ரம்மியமான அனுபவத்தையும் பரவசமான காட்சிகளையும் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

என்ன செய்ய? அடுத்தடுத்து சிறந்த இயக்குனருக்கான இரண்டு ஆஸ்கர்களை வாங்கிய இன்யாரித்தோ இயக்கி , அவருடன் சேர்ந்து இரண்டும், அதற்கு முன் ஒன்றும் என மூன்று ஆஸ்கர்களை அடுத்தடுத்து வாங்கிய உலகின் முதல் ஒளிப்பதிவாளர் இமானுவேல் லுபெஸ்கி ஒளிப்பதிவு செய்த அந்த ஏழு நிமிட VR அனுபவத்தைக் காண காத்துத் தானே ஆகவேண்டும்.

இவர்கள் சொன்னால் ஹாலிவுட்டின் மதிப்புவாய்ந்த நடிகர் டைட்டானிக் நாயகன் டிகாப்ரியோ கூட உறைந்து கொண்டிருக்கும் பனிக் குளத்தின் மத்தியில் இறங்குவார், தான் சைவம் என்பதை விட்டுக் கொடுத்து பச்சைக் காட்டெருமைக்கறியையும் உண்பார்.

VR கருவிகளில் காட்சிகள் தோன்றின, அத்தனை பேரின் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாய் ஒரு போர் சூழலின் நடுவில் அமெரிக்க எல்லையை உயிருடன் கடக்கப் போராடும் மெக்சிகர்களின் நடுவில் பார்வையாளரையும் ஒரு கதாப்பாத்திரமாக்கி அவர்களுக்கு உயிர் பயத்தை எடைக்குறையாமல் கடத்த, பனித்த கண்களிலிருந்து VR கருவிகளைக் கழற்றினர் கான்ஸ் பார்வையாளர்கள்.

அதுவரை கண்டிராத மெக்சிகன் அகதிகளின் பெரும்பாட்டை ஃப்ளஷ் அண்ட் சான்ட் (Flesh And Sand) எனும் பெயரில் VR குறும்படமாக பார்த்துவிட்டு அவர்கள் நிமிர்ந்த போது அங்கு நின்றிருந்த இயக்குனரும்,ஒளிப்பதிவாளரும் மெக்சிகர்கள் என்று உணர ஒரு கணம் பிடித்தது.

தென் அமெரிக்காவின் மெக்சிகோ என்றதும் நினைவுக்கு வருவது ஒன்று கெளபாய்கள், மற்றொன்று செவ்விந்தியர்கள்(கொலம்பஸ் இந்தியாவைக் கண்டறியும் முயற்சியில் தவறாக அமெரிக்காவிற்கு சென்றிறங்கி அங்குள்ளவர்களை இந்தியர்களென நம்பி செவ்விந்தியர்கள் என அழைத்ததால் இப்பெயர் நிலைத்து விட்டது.

உண்மையில் அவர்கள் அமெரிக்க பூர்வகுடிகள் என்றழைக்கப்பட வேண்டியவர்கள்) மெக்சிகோ தான் அலெசாந்த்ரோ இன்யாரித்தோ பிறந்து வளர்ந்த நிலம்.

பதின்வயதில் படிப்பில் அவ்வளவாக ஆர்வமில்லாத இன்யாரித்தோ பயணங்கள் செய்வதை மிகவும் விரும்பியதால் உயர்கல்வியை பாதியில் விட்டுவிட்டு கடல்பயணங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன் இருபதுகளில் ஐரோப்பிய, ஆப்பிரிக்க பயணங்களை மேற்கொண்டு மெக்சிகோவிற்கு தன் சினிமா ஈடுபாட்டை முழுமையாக உணர்ந்த ஒருவனாகத் திரும்பினார்.

இசை மீது கொண்ட ஈடுபாட்டினால் ரேடியோ ஸ்டேஷன்களில் ஆர் ஜேவாகவும் பணியாற்றிய இன்யாரித்தோ பல்வேறு பயணங்களில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெவ்வேறு நிலங்களின் கலாச்சாரங்களை நன்கு அறிந்து கொண்டார்.

ஜப்பானில் நடக்கும் கதையையும் இன்யாரித்தோவால் தன் சொந்த நிலத்தின் கதையைப் போலவே எடுக்க முடிந்த அவரின் ஆளுமைக்கு இப்பயணங்களே வழி வகுத்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

2000 ல் வெளிவந்த அமோரஸ் பெர்ரோஸ் என்கிற மெக்சிகன் திரைப்படம் தான் அலெசாந்த்ரோ இன்யாரித்தோ இயக்குனராய் அறிமுகமான முதல் திரைப்படம், ஒரு மகத்தான கலைஞனின் வருகை என்பது அதன்பின் வரும் திறமிக்க கலைஞர்களின் பயணத்திலும் ஒரு சுவடெழுதிச் செல்கிறது.

Alejandro González Iñárritu birthday article

மார்டின் ஸ்கார்சசி , ஸ்பீல்பெர்க், டாரன்டினோ என அத்தனை இயக்குனர்களும் அதனை மாஸ்டர் பீஸ் எனக் கொண்டாடினர்.

வெற்றிமாறன் ஆறு தேசிய விருதுகள் பெற்ற தன் ஆடுகளம் திரைப்படத்திற்கான விதை அமோரஸ் பெர்ரோஸ் தான் என்றும் இப்படத்தில் காட்டப்படும் மெக்சிகோவின் நாய் சண்டையே தான் மதுரையில் சேவல் சண்டையை மையமாகக் கொண்ட கதைக்களத்தை அமைக்க காரணம் என்றும் கூறுகிறார். மேலும் இதன் கடைசி காட்சியே அன்பே சிவத்தின் கடைசி ஃபிரேமையும் தீர்மானித்தது என்றும் சொல்லலாம்.

ஹைபர் லிங்க் எனப்படும் வெவ்வேறு கதைகளை ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் வகைமையில் இன்யாரித்தோ இயக்கிய மூன்று படங்கள் தான் அமோரஸ் பெர்ரோஸ், 21 கிராம், மற்றும் பேபல். தமிழில் வெளிவந்த வானம், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் ஆகியவை இப்படியான ஹைப்பர் லிங்க் கதைகள் தான்.

பேபல் போலவே இன்யாரித்தோவின் சினிமா தலைப்புக்கள் வெறுமனே கடந்து போக முடியாதபடி அதனுள் ஒரு தத்துவார்த்தத்தை தாங்கியதாகவே பெரும்பாலும் இருக்கின்றன.

உதாரணமாய் அவரின் இரண்டாவது படம் 21 கிராமை எடுத்துக் கொள்ளலாம். மனித உடலிலிருந்து உயிர் பிரியும் முன்னும், பின்னும் அந்த உடலின் எடையில் ஏற்படும் மாற்றம் என்பது 21 கிராம் என்று 1907ல் செய்யப்பட்ட ஆய்வொன்று சொல்கிறது. எனில் அந்த 21 கிராம் தான் உயிரின் எடையா என்று கேட்கும் இன்யாரித்தோ தன் முதல் மூன்று படங்களிலும் இறப்பு மிக முக்கிய காரணியாய் இருப்பதால் இவற்றுக்கு “டெத் ட்ரையாலாஜி”எனப் பெயரிட்டார்.

பேபலுக்குப் பிறகு நான்காவதாய் 2010ல் ஜேவியர் பார்டெம் நடிப்பில் இன்யாரித்தோ இயக்கிய திரைப்படம் “பியுட்டிஃபுல்”

Alejandro González Iñárritu birthday article

தன் இரு குழந்தைகளுடன் ஏழ்மையில் வாழ்ந்து வரும், இறந்தவர்களுடன் பேசும் திறன் கொண்ட ஒருவன் கேன்சரால் பாதிக்கப்பட அதன் பின் நிகழும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கதை வியாபார ரீதியில் தோல்வியடைந்திருந்தாலும் இரண்டு ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இத்திரைப்படம் வரை இவரின் படங்கள் பனிரெண்டு முறை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஒரு விருது வாங்கியிருந்தது.

உருவாக்க முறையில் வேறொரு பரிமாணத்தை இன்யாரித்தோ அடைந்தது இதன் பிறகான பேர்ட் மேன்(Birdman) திரைப்படத்தில் தான். ஒரே டேக்கில் அதாவது கட் செய்யாமல் ஒரே நீளமான ஷாட்டில் எடுக்கப்பட்டது போன்று தெரியும் ஒரு முழு நீளப்படமான பேர்ட் மேனில் நீளமான டேக்குகள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன. சில்ட்ரென் ஆப் மென், கிராவிட்டி முதலான படங்களின் மூலம் உலகப்புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் இம்மானுவேல் லுபெஸ்கி இன்யாரித்தோவுடன் சேர்ந்தது இப்படத்தில் தான்.

இன்யாரித்தோ இப்படத்தில் கையாண்ட கதை என்பது காலம் காலமாய் கலைவடிவங்களில் பேசப்பட்டு வரும் முரணின் அடிப்படையில் அமைந்தது. பல்வேறு கலை வடிவங்களில் ஒன்றான சினிமா தன் வணிக எல்லையினால் மிகப்பரவலாய் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. அதற்குமுன் தோன்றிய , உடனிருந்த பல வடிவங்களை மறைத்து பூதாகரமாய் நிற்கும் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக நடித்த நடிகன் தன் வயதான காலத்தில் புகழ்பெற்ற ரேமன்ட் கார்வரின் “What We Talk About, When we Talk About Love” சிறுகதையை நாடகமாக்கி இயக்க முயற்சிக்கிறான்.

மேடை நாடகத்தை கெடுக்க வந்தவன், கலை தெரியாதவன், காசுக்கு ஆடிய கூத்தாடி என்று விமர்சிக்கப்படும் அவனுக்குள் அவ்வபோது அவன் நடித்த பேர்ட் மேன் கதாப்பாத்திரமும் தோன்றி பேசிக்கொண்டிருக்கும். தான் மெய்யான கலைஞன் இல்லையா என்கிற கேள்விகளுடன் அவன் உளவியல் சிக்கல்கள் நாளுக்கு நாள் முற்ற கடைசியில் என்னவாகிறான் என்பதை சொல்லும் இப்படம் காட்சியனுபவத்தில் பல்வேறு எல்லைகளை எட்டியது.

மேஜிக்கல் ரியலிசத் திரைப்படமான பேர்ட் மேன், பரிசோதனை முயற்சியின் வெற்றிகர படைப்பாய் உலகெங்கும் கொண்டாடப்பட்டு ஒன்பது ஆஸ்கர்கள் பரிந்துரையில் நான்கு விருதுகளை வென்றது. இன்னும் சுவாரஸ்யமாக நிஜ வாழ்க்கையில் பேட் மேனாக(Batman) நடித்த மைக்கேல் கீட்டன் இதில் தன் சொந்த வாழ்க்கையின் பாத்திரத்தையே பிரதிபலித்தது போல் நடித்திருந்தார்.

நீளமான ஷாட்கள் பற்றி இன்யாரித்தோ கூறும் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை, “என் ஐம்பது வயதில் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். மனித வாழ்க்கை தினமும் கண்ணை திறந்த நொடியிலிருந்து எந்த எடிட்டிங்கும் இல்லாமல் நீளமான ஷாட்டாக இருக்கிறது, நாம் எப்போது வாழ்க்கையை பற்றி யோசிக்கிறோமோ அப்போதுதான் எடிட்டிங் நடக்கிறது. என் கதாப்பத்திரங்களின் வாழ்க்கையிலிருந்து பார்வையாளர்கள் தப்பிக்காமல் இருக்க நீளமான ஷாட்களை தேர்ந்தெடுக்கிறேன்”.

அதன்பின் வந்த திரைப்படங்களில் ஆச்சர்யத்தக்க வகையில் நீளமான ஷாட்டுகளை மட்டுமே அதிகம் பயன்படுத்தினார்.

பேர்ட் மேன் ஏற்படுத்தியிருந்த அதிர்வலையிலிருந்து வருவதற்குள் லியனார்டோ டிகாப்ரியோ நடிக்க தன் அடுத்த படமான “தி ரெவனன்ட்” படத்தை தன் பிரியத்திற்குரிய இமானுவேல் லுபெஸ்கி ஒளிப்பதிவில் தொடங்கினார் .

1800களில் வாழ்ந்த ஹியு கிளாஸ் எனப்படும் பண்டைய அமெரிக்க வேட்டைக்காரனின் கதையை அடிப்படையாக கொண்ட நாவலை படமாக்க நினைத்த இன்யாரித்தோ கனடாவின் பனி நிலங்களுக்கு மத்தியில் சென்று இறங்கினார். நிஜமான பனியிலும், ஆறுகளிலும் பயணித்து இயற்கையான சூரிய ஒளியை மட்டுமே வைத்துக்கொண்டு படப்பிடிப்பு விளக்குகள் எதையும் பயன்படுத்தாமல் தங்கள் அடையாளமான நீளமான டேக்குகளில் அந்நிலப்பரப்பிலேயே முழுப்படத்தையும் படம் பிடித்து ஒட்டுமொத்த திரையுலகத்தையும் வியப்பில் ஆழ்த்தியது படக்குழு.

ஹியு கிளாஸ், கரடியின் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து, சுமார் இருநூறு மைல்களை காட்டிலும், பனியிலும், தவழ்ந்தும், நொண்டியும், நடந்தும், கடந்து உயிர்பிழைத்த வேட்டைக்காரர். கியு கிளாசாக நடித்த டிகாப்ரியோவின் நடிப்பு கண்டம் தாண்டியும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Alejandro González Iñárritu birthday article

ஹியு கிளாஸ் கரடியிடம் அடிபடும் காட்சியைக் கண்ட எவரும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத வண்ணம் அதை படமாக்கியிருந்தனர். தன் மகனைக் கொன்றதற்கு பழிவாங்கும் ஒரு தந்தையின் கதையின் முடிவை அறம் பிறழாமல் கையாண்டு என்றும் நினைவிலிருக்கும் ஒரு படத்தை அளித்து அடுத்தடுத்து சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுகளை வென்று திரை வரலாற்றில் மிக சொற்பமாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளில் தன்னை இணைத்துக் கொண்டார் இன்யாரித்தோ.

அதற்கு முன் பதிமூன்று முறை கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்று முறை வென்ற மகத்தான நடிகனான டிகாப்ரியோவிற்கு இருபத்தி இரண்டு ஆண்டுகளில் ஆறு முறை ஆஸ்கர் பரிந்துரை செய்யப்பட்டும் ஒரு ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டதில்லை.

தி ரெவனன்ட் திரைப்படத்திற்காக அவர் பெயர் அறிவிக்கப்பட்ட போது எழுந்து சென்றவர், மிகுந்த உணர்ச்சிவயப்படுதல் ஏதும் இல்லாமல் எல்லாருக்கும் நன்றி சொல்லிவிட்டு நிகழ்ந்து கொண்டிருக்கும், கால நிலை மாற்றத்தை பற்றி பதிவு செய்துவிட்டு இறங்கினார்.

சென்ற வருடம் வெளியான பார்டோ திரைப்படம் இன்யாரித்தொவின் மற்றொரு தத்துவ விசாரணையாகவே இருந்தது, எதிர்பாராத மரணத்தை அடைந்த ஒருவன் அதன் பிறகான வாழ்க்கையில் தவறுதலாக பார்டோ எனும் இடத்தில் மாட்டிக்கொள்கிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்களும் அங்கிருந்து அவர்கள் தப்பிக்க அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மறுபார்வை பார்த்தும் ,சரி செய்தும் கொள்ளும் கதையாக உருவான இக்கதையில் மன்னிப்பையும், நம்மை நாமாக ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் நோக்கி நம்மை நகர்த்துகிறார்.

இப்படி தன் படங்களில் வீரியமான மனித உணர்வுகளையும், உளச்சிக்கல்களையும் தனக்கே உரித்தான பாணியில் படமாக்கும் அலெசாந்த்ரோ இன்யாரித்தோவின் கதைகளில் எப்போதும் காணப்படும் ஒற்றுமையென இருப்பது தந்தையர்களின் கதைகள்.

அவரின் எந்தவொரு படத்திலும் குழந்தைகளை பற்றியிருக்கும் கதாப்பாத்திரங்களின் தந்தைமை தனித்தே தெரிகிறது. அந்த தந்தைகள் இறந்தவர்களுடன் பேசினாலும், நாய்களுடன் வாழ்ந்தாலும், மாயமாய் காற்றில் பறந்தாலும் , கடும்பனியில் கரடி தாக்கினாலும் அப்பற்றை விடுவதே இல்லை.

தங்கள் குழந்தைகளை நேசிக்கும் விதத்திலும் ,அவர்களை புரிந்து கொள்ளும் விதத்திலும் சினிமா உள்ளவரை இன்யாரித்தோவின் கதை மாந்தர்கள் நினைவு கூறப்படுவார்கள்.

இந்த அசலான கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்.

கார்த்திக் ஜீவானந்தம்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர்: பாஜக கோரிக்கையை நிராகரித்த கர்நாடக அரசு

சுதந்திர தினத்தில் பேச ஆரம்பித்த மேயர்… புறக்கணித்து வெளியேறிய திமுகவினர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share