ஒரு படத்தை உருவாக்கத் தொடங்கியபிறகு, அதன் இயக்குனருக்குப் பலவற்றைச் சேர்க்க வேண்டுமென்று தோன்றுவது இயல்பு. ஆனால், அதெல்லாமே கதை விவாதத்தோடு முடிந்துவிட வேண்டும்; படப்பிடிப்புத்தளத்திற்குச் செல்லும்போது, ஏற்கனவே காகிதத்தில் இருப்பவற்றை மேம்படுத்தும் சிந்தனைகளுக்கே இடம் கொடுக்க வேண்டும். மொத்தமாக அவற்றைக் கிழித்தெறிந்துவிட்டு புதிது புதிதாகச் சேர்த்துப் படமெடுக்கக் கூடாது. அதற்கு உதாரணங்களாகப் பல தமிழ் படங்கள் இருக்கின்றன. சிலவற்றை நேர்மறையாகவும், சிலவற்றை அதற்கு எதிரான திசையிலும் குறிப்பிடலாம்.
பிரஜன், காயத்ரி ரெமா, கேபிஒய் வினோத், சரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஃ’ திரைப்படம் பார்த்தபோது, மேற்சொன்னது நினைவில் வந்துபோனது. சரி, அந்த வார்த்தைகளுக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?
ஹாரர் கலந்த கதை
ஸ்வேதா என்ற இளம்பெண் கொலையாகிறார். இயக்குனர் ருத்ரன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் அப்பெண்ணின் பிணம் கிடக்கிறது. அங்கு ருத்ரனோ, அவரது உதவி இயக்குனர்களோ இல்லை. போலீசார் ஒருபக்கம் அந்த நபர்களைத் தேடுகின்றனர். இன்னொரு பக்கம் ஸ்வேதாவின் காதலர் ஹரிஷ் அவர்களைத் தேடி அலைகிறார்.
இந்த தேடலின்போது, ருத்ரன் ஒரு தீவிரமான மனநோயாளி என்பது தெரிய வருகிறது. தான் படிக்கும் கதையிலுள்ள பாத்திரங்களாக, தான் எழுதும் திரைக்கதையிலுள்ள பாத்திரங்களாக மாறும் பாதிப்பு அவரிடம் உண்டு. அப்படிப்பட்ட ருத்ரனிடம் நாயகி வாய்ப்பு கேட்டு வந்தவர் தான் இந்த ஸ்வேதா. அவரை அந்த அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றவர் ஹரிஷ்.
ஹரிஷுக்கு ருத்ரனை நேரடியாகத் தெரியாது. அவரிடம் உதவியாளர்களாக இருந்த தனது நண்பர்களை மட்டுமே தெரியும். இந்த நிலையில், முதலில் ருத்ரனைத் தேடிச் செல்கிறார் ஹரிஷ். பின்னர் தனது நண்பர்களைப் பார்க்கப் போகிறார். ஒவ்வொருவரும் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். அந்தக் கொலையைச் செய்தது ஹரிஷ் என்று சந்தேகிக்கின்றனர் போலீசார்.
நடப்பது என்ன என்று யோசிப்பதற்குள், ஹரிஷை ஆபத்து சூழ்கிறது. அதன்பிறகு என்னவானது என்பதோடு படம் முடிவடைகிறது.
முழுக்க ‘த்ரில்லர்’ பாணியில் நகர்கிறது முக்கால்வாசி திரைக்கதை. இறுதியில், அதனை ‘ஹாரர்’ ஆக மாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குனர். சைக்கோத்தனமான குற்றவாளியையும், பேய்களின் பயமுறுத்தலையும் ஒரு படத்தில் காட்டியிருப்பதே ’குழப்பக் கூத்தாக’ அமையும். இந்தப் படத்திலோ, கொலை நிகழ்வதற்கு முன்பாகவே அதனை ஒருவர் ஓவியமாகத் தீட்டுவது போன்ற ‘இஎஸ்பி’ அம்சமும் உண்டு.
ட்ரெய்லரை ஒருமுறை பார்த்தாலே, இதுதான் கதை என்று தெரிந்துவிடும். படத்தில் அந்த விஷயங்களைத் தவிர புதிதாக ஏதுமில்லை. ’பேய்ப்படம்னா இப்படித்தான் இருக்கும்’ என்று பலமுறை கிண்டலடிக்கப்பட்ட விஷயங்களை ஒன்றாகக் கோர்த்து கதையாக்கியிருக்கிறார் இயக்குனர். அதனை நேர்த்தியாகப் படமாக்கியிருந்தாலே, ‘இப்பவே கண்ணைக் கட்டுதே’ என்றிருக்கும். இப்படம் அந்த விஷயத்திலும் நம்மைச் சோதிக்கிறது.
ஆசுவாசப்படுத்தும் இசை
பிரஜன் இதில் நாயகன். முடிந்தவரை தான் வரும் இடங்கள், பேசும் வசனங்கள் சரியாக இருப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். அவரது இத்தனை ஆண்டு கால அனுபவம் அதற்கு உதவியிருக்கிறது. அதனைக் கதைகள், பாத்திரங்கள் தேர்வு செய்வதிலும் காட்டினால் நன்றாகயிருக்கும்.
காயத்ரி ரெமா இதில் நாயகி. அந்த நினைவுடனே ஒவ்வொரு காட்சியிலும் நடித்தாரோ என்று எண்ண வைக்கிறது அவரது நடிப்பு.
’கலக்கப்போவது யாரு’ சரத், வினோத், ராமநாதன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். சரத்தும் வினோத்தும் காமெடியில் அசத்தியிருப்பார்கள் என்று நம்பிவரும் சில ரசிகர்களை இயக்குனர் ஏமாற்றியிருக்கிறார்.
இதில் வில்லன் பாத்திரத்தில் இயக்குனர் ஸ்டாலினே நடித்துள்ளார். அந்தவொரு விஷயமே, ஒட்டுமொத்தக் கதையையும் சுக்குநூறாகச் சிதைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் ஜெய் ஆகாஷ் தோன்றுகிறார். அதைப் பார்த்தவுடன், ‘இரண்டாம் பாகத்தையும் சேர்த்து எடுத்துவிட்டார்களா’ என்று மனம் பதைபதைக்கிறது.
திரையைப் பார்த்து பார்த்து, ஒருகட்டத்தில் அயர்வுற்றுக் கண்களை மூடினால் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது சதீஷ் செல்வம் தந்திருக்கும் இசை. பாடல்கள் ஓகே ரகம். காட்சியாக்கத்தைவிட ஒரு படி மேலிருக்க வேண்டும் என்ற நோக்கோடு, அவரது பின்னணி இசை அமைந்துள்ளது.
தேவசூர்யாவின் ஒளிப்பதிவு, அரவிந்த் ஆறுமுகத்தின் படத்தொகுப்பு ஆகியன நல்லதொரு காட்சியனுபவத்தை உருவாக்கத் தவறியிருக்கின்றன. ஒரு படத்திற்கு ஆதாரமாக விளங்கும் கதை, திரைக்கதையே இங்கு கோணலாக அமைந்திருப்பதால், தொழில்நுட்பப் பணிகளில் நிறைந்திருக்கும் விலகலைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
நேர விரயம்
முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்துவிட்டு திரைப்படமாக்கும் முயற்சியில் அலைந்து திரிவோர் ஒரு வகை. திரைப்பட வாய்ப்பு கிடைத்தபிறகு, சட்டென்று ஒரு ஸ்கிரிப்டை உருவாக்குவோர் இன்னொரு வகை.
எந்த வகையாயினும், எழுதப்பட்ட ஒரு திரைக்கதையும் அதனைக் காட்சியாக்கம் செய்த விதமும் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். இரண்டரை மணி நேரம், அத்திரைக்கதை காட்டும் உலகினுள் அவர்களைப் புகச் செய்ய வேண்டும். மிக முக்கியமாக, அவர்களை மரியாதைக்குரியவர்களாகக் கருத வேண்டும்.
‘ஃ’ படத்தின் திரைக்கதையை மனதுக்குள் ஓட்டிப்பார்த்தால், அது கொஞ்சம் கூட நிகழவில்லை என்று புரியும்.
ஒரு சாதாரண பார்வையாளரிடம் முழுத் திரைக்கதையையும் விவரித்தாலே, ’எது சரி, எது தவறு’ என்று அவர் புட்டு புட்டு வைத்துவிடுவார். அதன்பிறகு தத்தமது சாகசத்தை அப்படக்குழுவிலுள்ள ஒவ்வொருவரும் காட்டுவதே, அதனைச் சிறப்பானதாக மாற்றும்.
அப்படியொரு கருத்துப் பகிர்வு சுத்தமாக இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ஃ’. இதனால் பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல் படக்குழுவினருக்கும் நேர விரயம் நேர்ந்திருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
INDvsPAK: தோல்வியையே சந்திக்காத இந்தியா… 8வது முறை பாகிஸ்தானை வீழ்த்துமா?