மூத்த நடிகர்களை விமர்சித்த பாலகிருஷ்ணா… நாகசைதன்யா பதிலடி!

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித்குமார் நடிப்பில் வெளியான வாரிசு, துணிவு இரண்டும் ஜனவரி 11 அன்று ஒரே நாளில் வெளியானது.

இதில் எந்தப்படம் அதிகம் வசூல் செய்தது என்கிற விவாதமும், கணக்குகளும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வந்தது.

அதே போன்று தெலுங்கில் மூத்த நடிகர்களான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படங்களும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது.

இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன.
இரண்டு படங்களும் சமபல போட்டியாளர்களாக ரூபாய் 200 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்திருப்பதாக அப்படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன .

இரண்டு படங்களிலும் தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஸ்ருதிஹாசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ், கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார். வீர சிம்ஹா ரெட்டி படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றதை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் விழா நடைபெற்றது.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பாலகிருஷ்ணா பேசியபோது, “அக்னினேனி, தொக்கினேனி…..அஅ ரங்காராவ், ஈஈ ரங்கா ராவ்” என அக்கினேனி நாகேஸ்வரராவ் பற்றியும், குணச்சித்திர நடிகரான எஸ்வி ரங்காராவ் பற்றியும் கிண்டலான முறையில் பேசினார்.

இந்த பேச்சு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .தெலுங்கு சினிமாவில் குறிப்பிட்ட சில குடும்பங்களின் வாரிசுகளே புதியவர்கள் வந்தாலும் கதாநாயகர்களாக தொடக்ககாலம் முதல் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் என்.டி.ராமாராவ், வாரிசான பாலகிருஷ்ணா, நாகர்ஜூனா குடும்ப பெயர் குறித்து கிண்டலடித்திருப்பதற்கு நாகர்ஜூனா மகன்களான நடிகர்கள் நாக சைதன்யா, அகில் ஆகிய இருவரும் தனித்தனியாக ஒரே விதமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதில், “நந்தமூரி தாரக ராமராவ் காரு (என்டிஆர்), அக்கினேனி நாகேஸ்வரராவ் காரு, மற்றும் எஸ்.வி.ரங்கா ராவ் காரு ஆகியோர் தெலுங்கு சினிமாவின் தூண்களாகவும், பெருமையாகவும் இருந்து பங்களித்தவர்கள். அவர்களை மரியாதைக் குறைவாகப் பேசுவது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பாலகிருஷ்ணாவுக்கும், நாகார்ஜுனாவுக்கும் எப்போதுமே போட்டி உண்டு. இருவரும் நட்பாகவும் பழகிக் கொள்ள மாட்டார்கள் என்பது தெலுங்குத் திரையுலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அதனால்தான், அவரது மகன்களான நாக சைதன்யா, அகில் ஆகியோர் மூலம் நாகரிகமான வார்த்தைகளில் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் நாகர்ஜூனா தரப்பில்.

அதே நிகழ்ச்சியில் படக்குழுவினருக்கு மதுவிருந்து அளிக்கப்பட்டுள்ளது. அதில் பால கிருஷ்ணா மற்றும் அந்த படத்தில் நடித்துள்ள கவர்ச்சி நடிகை ஹனிரோஸ் இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

இருவரும் காதல் பார்வையுடன் நெருக்கமாக கைகளை கோர்த்து மது கோப்பைகளை ஏந்தியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பாலகிருஷ்ணா நடிகராக மட்டும் இருந்தால் இதை கண்டுகொள்ளாமல் கடந்துவிடலாம். அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் பொது சமூகத்துக்கு முன் உதாரணமாக இருக்கவேண்டியவர் இப்படி அநாகரிகமாக நடக்கலாமா என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இராமானுஜம்

சட்டம் ஒழுங்கு: காற்றோடு போனதா ஸ்டாலின் எச்சரிக்கை?

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி வழக்கு: அனைவரும் விடுதலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share