அஜித் ரசிகர்களை வசீகரிக்கிறதா? Ajith Vidaamuyarchi Movie Review
’எப்போ வரும்’, ‘இப்போ வருமா’, ‘அப்போ வருமா’ என்று விதவிதமான கேள்விகளால் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ‘விடாமுயற்சி’ ஒருவழியாகத் திரையரங்குகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது. இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித்குமார் கூட்டணியே அதற்குக் காரணம்.
’கடவுளே.. அஜித்தே..’ வைரலான நிலையில், அதனை நினைவூட்டும்விதமாக இப்படத்தின் டீசருக்கான பின்னணி இசையை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் அனிருத். அது, இப்படம் குறித்துப் பல திசைகளில் ரசிகர்களை யோசிக்க வைத்தது.
சரி, ’விடாமுயற்சி’ படத்தின் உள்ளடக்கம் எப்படியிருக்கிறது?
’ஆள் கடத்தல்’ கதை! Ajith Vidaamuyarchi Movie Review

அஜார்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் வசித்து வருகின்றனர் அர்ஜுன் – கயல் (அஜித்குமார், த்ரிஷா) தம்பதியர். இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. Ajith Vidaamuyarchi Movie Review
திருமணமானபோது மனதில் காதல் ததும்பத் ததும்ப வாழ்ந்த இந்த தம்பதி, அதன்பிறகான நாட்களில் மெல்ல அந்த ஈர்ப்புவிசையைத் தவறவிடுகிறது. ஒருகட்டத்தில் ‘நாம பிரிஞ்சு போகலாம்’ என்கிறார் கயல். வேறு வழியில்லாமல் அர்ஜுனும் அதற்குச் சம்மதிக்கிறார்.
திப்ளிஸ் நகரில் இருக்கும் தனது பெற்றோரின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறுகிறார் கயல். ‘நானே ட்ராப் செய்கிறேன். நாம் இருவரும் காரில் போகலாம்’ என்கிறார் அர்ஜுன்.
தம்பதியராகக் கடைசிப் பயணம் என்பதால் கயலும் அதற்குச் சம்மதிக்கிறார்.
அடுத்த நாள் காலையில் இருவரும் காரில் திப்ளிஸுக்கு புறப்படுகின்றனர். வழியில், ஒரு பெட்ரோல் பங்கில் தீபிகா (ரெஜினா கசாண்ட்ரா), ரக்ஷித் (அர்ஜுன்) இணையைச் சந்திக்கிறார் கயல்.
சாலையில் செல்லும்போது, ஓரிடத்தில் அர்ஜுனின் கார் பழுதாகி நின்றுவிடுகிறது. அங்கு வரும் ரக்ஷித் – தீபிகா தம்பதியுடன் அவர்களது ட்ரக்கில் ஏறிச் செல்கிறார் கயல்.
அடுத்த சில நிமிடங்களில் காரில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்கிறார் அர்ஜுன். ரக்ஷித், தீபிகா குறிப்பிட்ட ஹைவே ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு, கயல் இல்லை.
அங்கிருப்பவர்களும் கயல் குறித்து சரியான தகவலைச் சொல்லாமல் அர்ஜுனை எரிச்சல்படுத்துகின்றனர். அந்த நேரத்தில், தொலைவில் ரக்ஷித்தின் ட்ரக் செல்வதைக் காண்கிறார் அர்ஜுன். அதனை விரட்டிப் பிடிக்கிறார். Ajith Vidaamuyarchi Movie Review
ரக்ஷித்தோ ‘உங்களையே நான் பார்த்ததில்லை. பிறகு உங்களது மனைவியைப் பற்றி என்னிடம் கேட்டால் எப்படி’ என்கிறார். அந்த ட்ரக்கில் தீபிகாவும் இல்லை.
அப்போது, அங்கு ரோந்து வரும் காவலரிடம் புகார் செய்கிறார் அர்ஜுன். அவரும் தன் பங்குக்கு ரக்ஷித்தின் ட்ரக்கை சோதனையிடுகிறார். அதில் கயல் இல்லை.
அடுத்த சில மணி நேரத்தில், அப்பகுதியில் இருக்கும் ஒரு காவல்நிலையத்தில் ’மனைவியைக் காணவில்லை’ என்று புகார் கொடுக்கிறார் அர்ஜுன்.
அதன்பின்னர், அவரைக் கடத்துகின்றனர் சில இளைஞர்கள். அவர்கள் அனைவருமே ரக்ஷித்தின் ஆட்கள். ’உன் பொண்டாட்டிதான் உன்னை கடத்தச் சொன்னா’ என்று அர்ஜுனிடம் சொல்கின்றனர்.
அதனை அர்ஜுன் நம்பினாரா? அது உண்மை இல்லை என்றால், கயலின் கதி என்ன? இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஆள் கடத்தல்’ கதையாகத் தெரியும் இப்படத்தில், ’காலங்கள் கடந்தாலும் தம்பதியருக்குள் காதல் மறையாது’ என்று சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. அதனால், முன்பாதி முழுக்கத் திரைக்கதையில் ரொமான்ஸை வாரியிறைத்திருப்பவர், பின்பாதியில் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டு நிறைத்திருக்கிறார். Ajith Vidaamuyarchi Movie Review
பரபரவென நகரும் கடைசி முக்கால் மணி நேரக் காட்சிகளைப் பார்க்க வேண்டுமானால், அதற்கு முன்னே ‘தேமே’வென குந்தியிருக்கும், சாய்ந்திருக்கும், தவழ்ந்திருக்கும் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரத்தையும் கடந்தாக வேண்டும்.
அஜித் ரசிகர்கள் ‘விடாமுயற்சி’யில் எதிர்கொள்கிற சவால் அதுவே!
மீண்டும் அஜித்! Ajith Vidaamuyarchi Movie Review

’விடாமுயற்சி’யில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் மட்டுமல்லாமல் ‘க்ளீன் ஷேவ்’ முகத்துடனும், சற்றே ‘பிரெஞ்ச் தாடி’ வைத்த தோற்றத்துடனும் வந்து போயிருக்கிறார் அஜித். ‘குட் பேட் அக்லி’யின் கெட்டப்புடன் நடிக்க வேண்டியிருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அதனைத் திரைக்கதைக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்ச்சிமயமான பாத்திரத்தில் மீண்டும் அஜித்தைப் பார்க்க முடிகிறது. அதனை, திரைக்கதையோடு பொருந்தும் வகையில் கையாண்டிருப்பது அருமை.
நாற்பதைத் தொட்ட ஒரு பெண்ணாக, மனதில் காதல் குறித்த ஏக்கங்களைக் கொண்டவராக, இதில் வந்து போயிருக்கிறார் த்ரிஷா. முன்பாதியில் மட்டுமே அவருக்கான காட்சிகள் இருப்பதால், பின்பாதியில் அவரை நாம் மறக்க நேரிடுகிறது.
‘லியோ’ படத்தைப் போலவே, ‘விடாமுயற்சி’யில் அர்ஜுனுக்கு காட்சிகள் குறைவு. ஆனால், ரக்ஷித் பாத்திரத்தை நாம் ஏற்கும்விதமாக வந்து போயிருக்கிறார்.
அதனை ஈடு செய்யும்விதமாக, ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
இது போக ஆரவ், அவருடன் வரும் இரண்டு நபர்கள், ஜீவா ரவி, ரவி ராகவேந்தர் மற்றும் அஜர்பைஜானைச் சேர்ந்த கலைஞர்கள் என்று சுமார் ஒன்றரை டஜன் கலைஞர்கள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். Ajith Vidaamuyarchi Movie Review
இவர்களோடு விஜே ரம்யாவும் இப்படத்தில் இருக்கிறார். அவருக்கான காட்சிகள் முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன.
’ஹாலிவுட் படம் மாதிரி ஸ்கிரீன்ல தெரியணும்’ என்ற படக்குழுவின் எண்ணத்தைத் திரையில் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். ஒவ்வொரு காட்சியிலும் அந்த மெனக்கெடல் பளிச்சிடுகிறது.
படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த், முன்பாதியில் சமகாலத்தையும் கடந்தகாலத்தையும் மாற்றி மாற்றி ‘பிளாஷ்பேக்’ உத்தியில் காட்டியிருக்கிறார். பின்பாதியில் சில காட்சிகளை முன்பின்னாக மாற்றியமைத்து, திரைக்கதையின் போக்கு வேகமெடுக்க உதவியிருக்கிறார். ஆனாலும், அந்த மாறுபாட்டைச் சட்டென உணர்வதற்குள் ஒரு ‘இடைவெளி’ முளைக்கிறது. அதனைச் சரிப்படுத்தியிருக்கலாம். Ajith Vidaamuyarchi Movie Review
மறைந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் மிலனின் கைவண்ணத்தில் தொடக்கக் காட்சிகள் சட்டென்று மனம் கவர்கின்றன. ’சர்வைவல் த்ரில்லர்’ வகைமையில் அமைந்த படம் என்பதனை உணர்த்த, அதற்கடுத்து வரும் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறது அவரது குழு.
அனிருத் இசையில் ‘சவாடீகா’ பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. ’பத்திகிச்சு’, ‘தனியே’ பாடல்கள் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கின்றன.
இரண்டாம் பாதியில் திரைக்கதையில் வேகமெடுக்கும்போது, அதனை மேலும் வலுவூட்டும்விதாகப் பின்னணி இசை தந்திருக்கிறார்.
சுப்ரீம் சுந்தர் வடிவமைத்துள்ள சண்டைக்காட்சிகள் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வருகின்றன. அவையே இப்படத்தின் யுஎஸ்பி.
இன்னும் விஎஃப்எக்ஸ், டிஐ, ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் பங்கேற்ற கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
1997இல் ஹாலிவுட்டில் வெளியான ‘பிரேக்டவுன்’ கதையைத் தழுவி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.
பெரிதாக மாற்றங்கள் இல்லாமல் அதனைத் தமிழில் தந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், இதில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளை நீக்கிவிட்டால் மீதமுள்ளது ’ஒரிஜினல் வெர்ஷனில் இருக்கும்’ என்று கருதலாம்.
தான் ரசித்த ஆங்கில மற்றும் மேற்கத்திய மொழிப் படங்களை ‘ரீமேக்’ செய்ய வேண்டும் என்று நாயகன் அஜித்குமார் விரும்பியிருக்கலாம். இதற்கு முன்னர் பல இந்தியப் படங்கள் அந்த வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
‘விடாமுயற்சி’யைப் பொறுத்தவரை, எடுத்துக்கொண்ட வகைமைக்கு நியாயம் செய்யும்விதமான ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’ இப்படத்தின் பலம். அது மிக நேர்த்தியாகத் திரையில் வெளிப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் பார்க்கிற எண்ணத்தைத் தருகிறது ‘விடாமுயற்சி’. இப்படத்தின் பலவீனமாகவும் அதுவே இருக்கிறது. ஏனென்றால், இப்படம் ரசிகர்களின் எண்ணவோட்டத்தோடு பொருந்தி, அவர்களை வசீகரிக்கிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
சில ‘மைனஸ்’கள்! Ajith Vidaamuyarchi Movie Review

ஆள் அரவமற்ற மிகப்பெரிய நிலப்பரப்பையும் குறைவான பாத்திரங்களையும் கொண்டிருக்கிறது ’விடாமுயற்சி’ திரைக்கதை. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என்றால், திரையில் பிரமாண்டம் தெரிய வேண்டும் என்பதிலிருந்து பின்வாங்கச் செய்கிறது அந்த அம்சம்.
நீண்ட நாட்கள் கழித்து அஜித்தையும் த்ரிஷாவையும் ‘ரொமான்ஸ்’ காட்சிகளில் பார்த்தாலும், அவற்றில் நிறைந்திருக்கும் வெறுமை எளிதில் சலிப்பைத் தந்துவிடுகிறது.
த்ரிஷா கடத்தப்படுகிறார் என்பதை நாயகன் உணர்கிற காட்சிகள் நீட்டி முழக்கிச் சொல்லப்பட்டிருக்கின்றன.
திரைக்கதை முழுக்கவே அஜர்பைஜானில் நிகழ்வதாகச் சொல்லப்பட்டிருப்பதைத் தமிழ்நாட்டில் வசிக்கும் அஜித் ரசிகர்கள் ஏன் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்கான ‘தொடர்பிழை’ இப்படத்தில் காட்டப்படவில்லை.
அதனால், அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக ‘விடாமுயற்சி’ இல்லை என்றே சொல்ல வேண்டும். இது போன்று சில ‘மைனஸ்’கள் இதிலுண்டு.
அதேநேரத்தில், ஒரு பெரிய நடிகர் எந்தவித ‘பில்டப்’களும் இல்லாமல் திரையில் காட்டப்பட்டிருப்பதும், ஒரு சாதாரண மனிதரைப் போல உலா வந்திருப்பதும் பாராட்டுக்குரிய அம்சங்களில் முதன்மையானவை. Ajith Vidaamuyarchi Movie Review
மேற்சொன்ன விஷயங்களில் ரசிகர்கள் எதனைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதைப் பொறுத்து, விடாமுயற்சியின் வசூல் வெற்றி அமையும்!