பண்டிகை காலத்தில் தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்வது ஒரு அற்புதமான அனுபவம். தீபாவளி, பொங்கல் நாட்களில் வெளியாகும் திரை நட்சத்திரங்களின் படங்கள் புதிய அனுபவத்தைத் தரும்.
தமிழில் சினிமா பேசத் தொடங்கிய காலம் தொட்டு, அதுவே நிகழ்ந்து வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத், அஜித்குமார் கூட்டணியில் வெளியாகியிருக்கும் ‘துணிவு’ படமும் அப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறதா?
கொள்ளையடிப்பது யார்?
ஒரு தொழிலதிபர் கடல்வழியே கடத்தப்படுகிறார். டன் கணக்கில் வெடிமருந்துகள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க சிலர் திட்டம் தீட்டுகின்றனர். இப்படியொரு முன்கதையுடன் ‘துணிவு’ தொடங்குகிறது. அதன்பிறகு, கொள்ளை போகும் வங்கியை நோக்கி கதை நகர்கிறது.
வங்கிக்குள் புகும் கொள்ளைக்கும்பல் பணத்தை எடுத்துவிட்டு கிளம்ப நினைக்கும்போது, ஒரு மர்ம நபர் (அஜித்) துப்பாக்கியால் சுடுகிறார். பாதுகாப்பு படை வீரர்களை வெளியேற்றிவிட்டு, வங்கியிலுள்ள மக்களையும் கொள்ளையர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அந்த இடத்திற்கு போலீஸ் படை வர, கான்ஸ்டபிள் ஆண்டனியிடம் (மகாநதி சங்கர்) மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவேன் என்கிறார்.

யார் அந்த நபர்? எதற்காக கொள்ளையடிக்க வந்திருக்கிறார்? ஏன் உயரதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு ஒரு கான்ஸ்டபிள் உடன் பேசுகிறார்? அவரது நிபந்தனை என்ன? இதற்கெல்லாம் பதில்கள் தெரிவதற்கு முன்னதாகவே, வங்கிக் கொள்ளை நடக்க உதவி செய்தது போலீஸ் அதிகாரி ராமச்சந்திரன் (அஜய்குமார்) என்று தெரிய வருகிறது.
அவரைக் கைது செய்ய போலீஸ் கமிஷனர் (சமுத்திரக்கனி) உத்தரவிட, அந்த உத்தரவை மீறி வங்கிக்குள் நுழைய முயலும்போது அவர் கொல்லப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் இருக்கும் அந்த வங்கியின் தலைவர் உடனடியாக இங்கு வர வேண்டுமென்று அந்த நபர் நிபந்தனை விதிக்கிறார்.
கொள்ளையடிக்க வந்த நபர் ஒரு வங்கியின் தலைவரைச் சந்திக்க எண்ணுவது ஏன்? இந்த கேள்விக்கான பதிலாகவே விரிகிறது ‘துணிவு’ படத்தின் பிற்பாதி.

மேம்போக்காக ஒரு ‘ஹெய்ஸ்ட் ஆக்ஷன்’ படம் போன்று தோன்றினாலும், இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை செல்லும் பாதை வேறாக இருக்கிறது. இப்படியொரு கதையில், அஜித்தின் ரசிகர்களுக்காக யதார்த்தம் துறந்திருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். அது மட்டுமே மைனஸ்.
ரசிக்கவைக்கும் அஜித்!
‘வாலி’ தொடங்கி வில்லன், வரலாறு, மங்காத்தா, பில்லா, பில்லா 2, வேதாளம் போன்ற படங்களில் வில்லத்தனமான பாத்திரங்களில் அஜித் தோன்றி ரசிக்க வைத்திருப்பார். ’துணிவு’ ட்ரெய்லர் பார்த்தபோது, இதிலும் அப்படித்தான் நடித்திருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கேற்ப, அஜித்தின் அறிமுகக் காட்சியும் அமைந்திருக்கிறது.
சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம், வசனங்களில் நிரம்பியிருக்கும் தெனாவெட்டு, ஸ்டைலான நடனம் என்று ஒரு ‘எக்சன்ட்ரிக்’ ஆகவே அமைந்த அஜித்தின் நடிப்பு துணிவின் ஆகப்பெரும் பலம். அஜித் நடித்த படங்களில் வேறெந்த ஹீரோ நடித்தாலும் நிச்சயம் எடுபடாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

முழுக்க முழுக்க அஜித்தை சுற்றிவரும் ஒரு திரைக்கதையில் மஞ்சு வாரியாருக்கு மட்டுமல்ல, வேறெந்த கலைஞர்களுக்குமே பெரிதாக இடம் கிடைக்காது. அதனால் வீரா, பிரேம், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அஜய்குமார், பக்ஸ், பாலசரவணன், பவ்னி, அமீர், சிபி, சிராக் ஜனி, குமார் நடராஜன், அழகப்பன் என்று அடுத்தடுத்து பல முகங்கள் திரையில் வந்து போகின்றன. அவர்கள் அதிகமாகத் தோன்றினால் திரைக்கதை தொய்வடையலாம் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். ஆனாலும், கிடைத்த இடைவெளியில் சமுத்திரக்கனியும் மோகனசுந்தரமும் ரசிகர்களை ஈர்க்கும்விதமாக நடித்திருப்பது ஆச்சர்யமான விஷயம்.
’ஹெய்ஸ்ட்’ படங்களுக்கென்று சாம்பல் கலந்த நீல நிற வண்ணம் அல்லது சிவப்பும் மஞ்சளும் கலந்த தொனி எல்லா பிரேம்களிலும் நிரம்பியிருக்கும். ஆனால், ’இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு’ என்று ரசிகன் சொல்லிவிடாமலிருக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. அவருக்கு உதவி செய்வது போல மிலன் டீமின் கலை வடிவமைப்பும் அமைந்திருக்கிறது.
இயக்குனர் ஹரி படங்களில் வரும் ‘ரேம்ப்’ ஷாட்கள் போல, துணிவு பட சண்டைக்காட்சிகளில் ஒவ்வொரு பிரேமுக்கும் அரை நொடி, ஒரு நொடி போதும் என்று முடிவெடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி. அவரது பாணியே முதல் பாதி விறுவிறுவென்று நகர உதவியாக இருக்கிறது.

ஆக்ஷன் காட்சிகள் என்றாலே அதிரவைக்கும் இசையைத் தந்துவிட வேண்டுமென்று துடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். அது பல இடங்களில் ‘வொர்க் அவுட்’ ஆகியிருக்கிறது. ஆனால், பாடல்கள்தான் படத்தின் ஓட்டத்திற்கு தடைக்கற்களாக இருக்கின்றன.
சுப்ரீம் சுந்தரின் உழைப்பு இப்படத்தின் புண்ணியத்தால் இனி இந்தி திரையுலகிலும் கொண்டாடப்படும். அந்த அளவுக்கு ரசிகர்கள் பிரமிக்கும் அளவுக்குச் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 நொடிகளுக்கு சிங்கிள் ஷாட்டில் அஜித் சண்டையிடும் இடம் மட்டும் நேர்த்தியைத் தவறவிட்டிருக்கிறது.
‘ஹெய்ஸ்ட்’ வினோத்!
பொதுவாக உச்ச நட்சத்திரங்களின் படங்களில் கதை இல்லாமல் இருந்தாலும் ஆபத்து, அதிகமாகச் சொன்னாலும் அபாயக்கட்டத்தைத் தொட்டதாகிவிடும். அதை உணர்ந்து, கதையின் மையத்தை இடைவேளைக்குப் பிறகு வைத்திருக்கிறார் இயக்குனர் வினோத். தர்ஷன் பிளாஷ்பேக் மனதைத் தொடும் அளவுக்கு அஜித், மஞ்சு, பவ்னி, அமீர் சம்பந்தப்பட்ட பாங்காங் காட்சிகள் அமையவில்லை. அதனை வசனமாக விளக்கினால் ரசிகர்களுக்குப் புரியாது என்று நினைத்திருக்கலாம்.
படத்தில் குறைகள் இருக்கிறதா என்றால் ‘ஆம்’ என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் அது பற்றி ரசிகர்கள் யோசித்துவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர்; இரண்டாம் பாதியில் ‘பரவாயில்ல யோசிச்சுக்கோங்க’ என்று விட்டிருக்கிறார். அதனால், கிளைமேக்ஸுக்கு முன்னதாக ஜான் கொக்கனையும் அவரது கூட்டாளிகளையும் மகாநதி சங்கர் அடிக்கும் காட்சி சிலருக்கு அபத்தமாகத் தோன்றலாம். ஆனால், சாதாரண ரசிகர்களை மையக் கதையோடு ஒன்றவைக்கும் இடமாகவும் அதுவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.

இதில் சமகால பொருளாதார மோசடிகளுக்குத் துணை போகும் பிரபலங்கள் பற்றிய விமர்சனங்களும் உண்டு. அரசியல் தொடர்பான ‘பஞ்ச்’கள் இல்லாதபோதும், அது தொடர்பான காட்சிகள் இப்படத்தில் உண்டு. நிச்சயம் அது ‘துணிவு’ நிறைந்த முயற்சியே. தனியாகத் துருத்திக்கொண்டு தெரியாத இந்த அணுகுமுறையைத் திரைக்கதையில் பொதித்து வைப்பதே வினோத்தின் மாபெரும் பலம்.
முதல் படமான ‘சதுரங்க வேட்டை’யில் மோசடி மன்னன் ஒருவரை நாயகனாக காட்டினார் ஹெச்.வினோத். அந்த வகையில், இதில் ஒரு ஹைடெக்கான கொள்ளை கும்பலை நடமாட விட்டிருக்கிறார். பிரச்சனைகளின் வேர் வரை மக்கள் அறிய வேண்டுமென்று அவர் நினைத்திருப்பது சரி; ஆனால், மக்கள் ஹெச்.வினோத் என்ற பெயரை ஹெய்ஸ்ட் வினோத் என்று சொல்லிவிடக் கூடாது; அந்த அளவுக்கு இது போன்ற கதைகளில் ‘டீட்டெய்ல்’ கொட்டுகிறார் வினோத். அவருக்கு வயதாகும்போது, இந்த உத்தியை விட்டு அவர் விலகவும் வாய்ப்புள்ளது.
ஒரு நேர்த்தியான திரைக்கதை அமையாதபோதும், அஜித் என்ற ஆளுமையால் சுமார் இரண்டரை மணி நேரம் படம் பார்க்க வருபவர்களைக் கட்டிப்போட முடியும் என்பதற்கு சாட்சி ‘துணிவு’. அதனால், ஒருமுறை பார்க்கலாம் என்று வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. படம் பார்த்து முடிந்ததும், அதிநுட்பமான வங்கி கொள்ளைகள் பற்றி வினோத் இன்னும் பல படங்கள் இயக்குவாரோ என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.
உதய் பாடகலிங்கம்
பத்திரிகையாளர் மறைவு: ஆளுநர் இரங்கல்!
“சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி” – உதயநிதி ஸ்டாலின் பதில்!