இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரம், தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி இன்று (மார்ச் 24) அதிகாலை உடல்நலக்குறைவால் காலமான செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை பூர்விகமாக கொண்ட அஜித்தின் தந்தை பி.எஸ் மணியும், கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட அஜித்தின் தாய் மோஹினி இருவரும் சென்னையில் கடந்த 50 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இந்த தம்பதிகளுக்கு அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். அனுப் குமார் முதலீட்டாளராகவும், அனில் குமார், ஜோடி 356 என்ற மேட்ச்மேக்கிங் தளத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

தமிழகத்தில் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களால் ’தல’ என்று அழைக்கப்படும் அஜித்தின் இளமைக்காலம் அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. 10 ஆம் வகுப்புடன் படிப்பை முடித்த அஜித், மெக்கானிக் வேலை செய்தார். பின்னர் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
1993-ஆம் ஆண்டு ’அமராவதி’ திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அஜித்திற்கு மோட்டார் சைக்கிள் ரேஸில் விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த படத்தில் நடிகர் விக்ரம் தான் அஜித் குரலுக்கு டப்பிங் கொடுத்தார். ஒரு வருட இடைவேளைக்கு பிறகு ’பவித்ரா’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வந்தார்.
1995-ஆம் ஆண்டு வெளியான ’ஆசை’ திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி அடைந்ததால், அஜித்திற்கு அந்த படம் நல்ல பெயரை தேடிக்கொடுத்தது. தொடர்ந்து கல்லூரி வாசல், காதல் கோட்டை, வாலி, முகவரி, அமர்க்களம் என ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் முகமாக அஜித் மாறினார்.

2001-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படத்திலிருந்து அவரை தல என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அஜித்தின் மார்க்கெட் சரியவேயில்லை. சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் வரை அஜித் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அஜித்தின் வெற்றிக்கு அவரது தந்தை மணியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. மணி தனது குழந்தைகள் மீது எதையும் திணிப்பதே இல்லை. அவர்கள் விரும்பியபடியே வாழ்க்கை அமைத்துக்கொள்ள சுதந்திரம் வழங்கியிருக்கிறார்.
மற்ற இரண்டு குழந்தைகளும் படிப்பை தொடர்ந்த போது, அஜித் படிக்கவில்லை என்று தனது தந்தையிடம் கூறியதும் அவர் அதனை ஏற்றுக்கொண்டார். அஜித்திற்கு பிடித்ததை அவர் செய்ய சொன்னார். மெக்கானிக், மாடலிங், சினிமா என தனது வேலையை தொடர்ந்து மாற்றி வந்தாலும், மணி அஜித்திற்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்து வந்தார்.
இதனால் தான் அஜித், சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார். நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், சிலம்பரசன், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலரும் திரை குடும்பத்தை பின்புலமாக கொண்டவர்களாக இருந்து சினிமாவில் சாதித்தனர்.

ஆனால் சினிமா பின்புலத்தை சேராத அஜித் இன்றைக்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறப்பதற்கு அவரது தந்தையின் ஊக்கமும் உந்துதலும் மிக முக்கியமான காரணம் .
தந்தை மணி குறித்து அஜித்குமாரின் சகோதரர் அனில் குமார் ஒரு நேர்காணலில் கூறும்போது, “எங்க அப்பா எங்களை ஸ்டிரிக்டா வளர்க்கவில்லை. நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவர் ஒரு rebel.
எங்கள் அப்பாவிற்கு படிப்பில் ஆர்வம் இல்லை. ஆனால் அவர் மிகவும் ஸ்மார்ட்டான ஒருவர். வயதானாலும் இளைஞர் போல இணையத்தை மிகவும் சுலபமாக பயன்படுத்துவார். புது டெக்னாஜியை மிகவும் எளிதாக கற்றுக்கொள்வார். அப்பா தமிழர், கேரளாவில் பிறந்தார், அம்மா கராச்சியை சேர்ந்தவர். கடந்த 50 வருடங்களாக நாங்கள் சென்னையில் தான் இருக்கிறோம்.
எங்களுடைய பெற்றோர்கள் படிக்காததால் எங்களை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தார்கள். நாங்கள் பள்ளிக்கு சென்று வீட்டில் ஆங்கிலம் பேசினால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
எங்களுக்கு அவர் சுதந்திரத்தை கொடுத்தார். படிப்பிலும் வேலையை தேர்ந்தெடுப்பதில் அவர் எங்கள் விருப்பத்தை புரிந்துகொள்வார். எங்கள் அப்பா எங்களுக்கு படிப்பதற்கும் நல்ல வேலையை நோக்கி போவதற்கும் தகுந்த சூழலை ஏற்படுத்தி கொடுத்தார்.
சுதந்திரம் கொடுத்ததால் மது, புகையிலை என கெட்ட பழக்கம் வந்துவிடும் என்று அவர் எண்ணியது இல்லை. மது, புகையிலை போதை பொருட்கள் வேண்டும் என்றால் எங்கள் முன்னாலே எடுத்துக்கொள்ளுங்கள் என்று எங்களது பெற்றோர்கள் கூறுவார்கள்.
ஸ்பைடர் மேன் படத்தில் வரும் Great power comes from great responsibilities என்ற வசனம் போல தான் Great freedom comes from great responsibilities. அவர்களுடைய நம்பிக்கையை சீர்குலைத்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் மது, புகையிலை பக்கமே போகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தங்களது தந்தை இறுதிச்சடங்கை ஒரு குடும்ப நிகழ்வாகவே அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் இன்று நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தந்தையார் பி.எஸ் மணி அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும் அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையார் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கவும் எங்களை தொலைபேசியிலோ, கைப்பேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்களுடன் பேசுவதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும் இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். இரங்கல் தொடர்பாக செய்திகளை psmanifamily@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை நீலங்காரையில் உள்ள அஜித் வீட்டில் அவரது தந்தை மணியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இயக்குநர் ஏ.எல்.விஜய், நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரசன்னா, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
அஜித் தந்தை மணியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது.
அஜித் குமார் தந்தையின் மரணத்தால் சோகமடைந்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
ரமலான் நோன்பு: பிரதமர் வாழ்த்து!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!