துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸில் `அஜித்குமார் ரேஸிங் டீம்’ 992 பிரிவில் முன்றாவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்திருக்கிறது. இந்திய கொடியுடன் கோப்பையை வென்ற அஜித்தை அரசியல், திரையுலகம், விளையாட்டு என பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு நேற்று துபாயிலுள்ள `Gulf News’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குடும்ப உறவு, பயணத்தின் தேவை, மன அமைதி, சமூகவலைதள ஆபத்து குறித்து அவர் அளித்த பேட்டி இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.
குறிப்பாக, ”நான் என்னுடைய குழந்தைகளிடம் கல்வியை கற்கச் சொல்வேன். தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ளக் கூறுவேன். பயணம் செய்வது வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் மற்றும் விளையாட்டுகளிலும் நாம் ஈடுபட வேண்டும்.
பயணம் செய்யும்போது வெவ்வேறு வகையான மனிதர்களை சந்திக்க முடியும்.முன் சந்திக்காத மனிதர்களையும் மதங்கள் வெறுக்கச் செய்யும்’ என்ற பிரபலமான கூற்று ஒன்று இருக்கிறது. பயணம் செய்யும்போது நீங்கள் எவ்வளவு சிறியவர்கள், இந்த உலகம் எவ்வளவு சிறியது என்பது உங்களுக்குப் புலப்படும்.
விளையாட்டுகளில் ஈடுபடும்போது வெற்றியையும் தோல்வியையும் கருணையுடன் கையாள்வதற்கு கற்றுக் கொள்வீர்கள். இதனால்தான் பயணமும் விளையாட்டும் மிக முக்கியமானது. வெற்றியைவிட தோல்வியே உங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்.
நீங்கள் எதை தேர்ந்தெடுத்து செய்கிறீர்களோ அதை திறம்பட செய்யுங்கள் என்று நான் கூறுவேன். வெற்றிக்கு எப்போதும் உங்களின் குடும்பத்தின் உறுதுணை மிகவும் முக்கியமானது. என்னுடைய மனைவி ஷாலினி மற்றும் என்னுடைய குழந்தைகளின் உறுதுணையில்லாமல் என்னால் இந்த விஷயத்தை சாத்தியப்படுத்தியிருக்க முடியாது.
இன்றைய தேதியில் சமூக வலைதளப் பக்கங்களில் நச்சுத்தன்மை நிரம்பியிருக்கிறது. இன்று உலகமெங்கும் உள்ள மக்களுக்கு மென்டல் ஹெல்த் ஒரு முக்கியமான பிரச்னையாகவும் இருக்கிறது. சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலரும் அதை இழக்கிறார்கள்.
எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற கூற்று இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவே உங்களுடைய வாழ்க்கை என்பதுதான் இதற்கு அர்த்தம்.
உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள்” என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்துகளுடன் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான்.
நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்! நன்றி!” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரோடு கிழக்கு : பெண் வேட்பாளரை களமிறக்கிய சீமான்… யார் இந்த சீதாலட்சுமி?