ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த், விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடிக்கும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 7) துவங்கியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ’3’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதனைத்தொடர்ந்து ’வை ராஜா வை’ படத்தையும், ’பயணி’ என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கியும் வரவேற்பை பெற்றார்.
இதனையடுத்து ‘லால் சலாம்‘ என்ற புதிய படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார் என்று படத்தயாரிப்பு நிறுவனம்லைகா கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இந்தபடத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யாவின் தந்தையும், சூப்பர்ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
அவருக்கு தங்கையாக 80களில் முன்னனி நடிகையாக வலம் வந்த நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் திரையுலகில் மீண்டும் என்ட்ரி கொடுப்பது பற்றி ஜீவிதாவும் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ‘லால் சலாம்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியானது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று தொடங்கியுள்ளதாக படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் ஹோலி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் ‘லால் சலாம்‘ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதில் ரஜினிகாந்த் மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.
இதற்கிடையே நடிகர் விஷ்ணு விஷால் படத்தில் இருந்து வெளியேறியதாக வதந்திகள் வெளியான நிலையில், லைகாவின் அறிவிப்பின் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா