நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ’ஃபர்ஹானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (அக்டோபர் 5) வெளியானது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் நிறைந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் ’டிரைவர் ஜமுனா’ என்ற படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ’ஒருநாள் கூத்து’, ’மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில்
’ஃபர்ஹானா’ என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தை ‘ஜோக்கர்’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’அருவி’, ’கைதி’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்துக்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இப்படத்திற்கு கவிஞர் மனுஷ்யபுத்ரன் வசனம் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து இயக்குநர் செல்வராகவன், ’ஜித்தன்’ ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.
அதற்கு முன்பு வரும் அக்டோபர் 7ம் தேதி ’ஃபர்ஹானா’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ’ஃபர்ஹானா’ படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான போஸ்டரை படக்குழு இன்று (அக்டோபர் 5) வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முஸ்லிம் பெண்ணாக உடை அணிந்திருப்பதுடன், மைக் உள்ள ஹெட்செட்டில் யாருடனோ பேசுவதுபோல் இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த ’ஃபர்ஹானா’ படத்தின் முதல் போஸ்டர் சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், “வலிமையும் தன்னம்பிக்கையும் கொண்ட பெண்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ’ஃபர்ஹானா’.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை கச்சிதமாக வடிவமைத்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
எஸ்.ஜே.சூர்யாவின் புதிய அவதாரம்!
கல்யாண அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகர்