ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிப்ரவரி 9 அன்று வெளியான படம் லால் சலாம். இப்படத்தில், விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாகவும், ரஜினிகாந்த் கெளரவ வேடத்திலும் நடித்திருந்தனர்.
லால் சலாம் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரஜினி கதாநாயகனாக நடித்த படம் போன்றே திரையரங்குகளில் பேனர், கட் அவுட்டுகள் வைத்து அவரது ரசிகர்கள் கொண்டாடினர். படத்திற்கான டிரைலர், விளம்பரங்களிலும் ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
படத்தில் பேசப்பட்டிருக்கும் மத நல்லிணக்கம் எனும் கருத்துக்காகவும் அதை முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மூலம் பேசியதாலும் ஊடகங்களில் படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் வெளியானது.
அதேசமயம், திரைக்கதை அமைப்பு, கதை சொல்லும் பாணியில் லால் சலாம் ஒரு முழுமையான திரைப்படமாக இல்லை, என்கிற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன.
“இயக்குநர் எழுதிக் கொடுத்ததை தான் பேசினேன். அதை அரசியலாக பார்த்தால் நான் பொறுப்பு இல்லை என்று படையப்பா, முத்து படங்களில் தான் பேசிய அரசியல் வசனங்களுக்கு காரணம் சொன்னவர் தான் ரஜினிகாந்த். அது போன்று தான் லால் சலாம் படத்தில் அவர் பேசும் மத நல்லிணக்க வசனங்களும்” என்று கடுமையாகவே பொது வெளியில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் திரை விமர்சகர்கள்.
இப்படிப் படம் பற்றிய கருத்துகள் பலவிதமாக இருந்தாலும், திரையரங்குகளில் படத்தின் வசூலைப் பொறுத்தவரை முதல் நாளிலிருந்தே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், அப்படத்தின் மொத்த வசூலில் தயாரிப்பாளரின் பங்கு திரையரங்குகளில் படம் ஓடி முடியும் போது ரூ.10 கோடி வந்தாலே பெரிய சாதனை என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில்.
திரையரங்குகளில் நிலவி வந்த வசூல் தேக்கநிலையை லால் சலாம் மாற்றும் என எதிர்பார்த்த தியேட்டர் வட்டாரம், கடும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் போன்ற பெரிய ஜாம்பவான்கள் இருந்தும் படத்தின் வசூல் இவ்வளவு குறைவாகியிருக்கிறதே என்கிற அதிர்ச்சிதான் அது.
இப்படத்தின் தயாரிப்புக்கு ஆன மொத்தச் செலவு முதலில் ரூ.50 கோடி என கூறினார்கள். பட வெளியீடு, விளம்பரம் என தற்போது ரூ.80 கோடி லைகா நிறுவனம் செலவு செய்திருக்கிறது. இதில் ரஜினிகாந்த் சம்பளம் மட்டும் ரூ.40 கோடி என்கின்றனர் லைகா வட்டாரத்தில்.
இவ்வளவு முதலீடு செய்த படத்துக்கு திரையரங்க வசூல் குறைவாக இருப்பதால் படத்தைத் தயாரித்த லைகாவும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
இந்த சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல லண்டனிலுள்ள லைகா நிறுவனர் சுபாஷ்கரனிடம், “படத்துக்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இங்குள்ள உங்கள் நிறுவனத்தினர் படத்தை தேவையான அளவுக்கு புரமோஷன் செய்யவில்லை அதனால் தியேட்டர்களில் வசூல் குறைவாக இருக்கிறது” என்று புகார் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இதைக்கேட்டு அதிர்ச்சிக்குள்ளான சுபாஷ்கரன், சென்னையில் உள்ள விளம்பரப் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு உண்மை நிலையை கேட்டறிந்துள்ளார். மேலும், ஐஸ்வர்யாவின் புகார் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
“லால் சலாம் படம் அறிவித்த நாளிலிருந்து கடுமையாக உழைத்த எங்களுக்கு இதுதான் பரிசா?” என சுபாஷ்கரனிடம் வருத்தப்பட்டிருக்கிறார்கள் விளம்பரக் குழு.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பேச்சுவார்த்தை தோல்வி: மீண்டும் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் பணி!