இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நாளை (அக்டோபர் 30) நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நேரலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கமெண்ட்ரி செய்ய உள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் (அக்டோபர் 23) பரம எதிரியான பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் விஸ்வரூபமெடுத்த விராட் கோலி, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அதற்குப் பிறகு நெதர்லாந்துடன் நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இவ்விரு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, அதிகபட்சமாக 4 புள்ளிகளை எடுத்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி தன்னுடைய 3வது லீக் போட்டியில் நாளை (அக்டோபர் 30) தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்தியா 4 புள்ளிகளுடன் இருப்பதை போன்றே தென்னாப்பிரிக்க அணி 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நேரலையில் நடிகர் சிவகார்த்தியேகன் சிறப்பு கமெண்ட்ரி செய்தார். ’பிரின்ஸ்’ பட விளம்பரத்தின் ஒருபகுதியாக இந்த கமெண்ட்ரி நடைபெற்றது.
அப்போது ஆர்.ஜே.பாலாஜி “உங்களுக்கு இந்திய வீரர்கள் அல்லாமல் வேறு எந்த நாட்டு வீரரைப் பிடிக்கும்” என்று சிவாவிடம் கேட்க, அதற்கு அவர், ”எனக்கு பாபர் அசாம் பிடிக்கும்” என்றார். அவர் சொல்லி முடிக்கும் முன், பாபர் அசாம் அவுட் ஆனார்.
அதுபோல், நாளை (அக்டோபர் 30) நடைபெற இருக்கும் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நேரலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு கமெண்ட்ரி செய்ய இருக்கிறார்.
இந்த தகவலை அவர் இன்று, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ள அந்த வீடியோவில், ”ஹாய், எல்லோருக்கும் வணக்கம். நான் உங்களுடைய ஐஸ்வர்யா ராஜேஷ்.
நாளை (அக்டோபர் 30) டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற இருக்கும் போட்டியைக் காண, உங்கள் எல்லோரையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி மூலம் சந்திக்க இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். கிரிக்கெட் வீராங்கனையாக அவர் நடித்திருந்த ’கனா’ படம் அவருடைய மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இதில் மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துள்ள ’ஃபர்ஹானா’, ’டிரைவர் ஜமுனா’, ’சொப்பன சுந்தரி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் அவர் நடித்திருக்கும் பட விளம்பரத்தின் ஒருபகுதியாகவும் இந்த கமெண்ட்ரி இருக்கும் என தெரிகிறது.
ஜெ.பிரகாஷ்
சிரிக்கும் சூரியன்: நாசாவின் வைரல் புகைப்படம்!
T20 WorldCup 2022: இலங்கையை கடைசி இடத்திற்கு தள்ளிய நியூசிலாந்து