”இந்தி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயுடன் ஏற்பட்ட காதலை தூசி தட்டப்பட்ட விஷயம்” எனக் கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.
இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலின்போது, விவேக் ஓபராயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த விவேக், ”இந்த கேள்விக்கு பதில் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அது முடிந்து தூசி தட்டப்பட்டது.
இருப்பினும், திறமையான இளைஞர்கள் உண்மையிலேயே தங்கள் பணியில் கவனம் செலுத்தி, நூற்றுக்கு நூறு வீதம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், உங்கள் கேரியரை தாக்கும் வாய்ப்பை யாருக்கும் கொடுக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, அதிக கவனம் செலுத்துங்கள்.
ஒருவர் தனக்கும், தொழிலுக்குமான அர்ப்பணிப்புக்கு ஒருபோதும் அவதூறு செய்யக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
’கடந்தகால காதல் தூசி தட்டப்பட்ட ஒரு விஷயம்’ என்று குறிப்பிடும் அதே விவேக் ஓபராய், கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளோடு ஐஸ்வர்யா ராயை ஒப்பிட்டுப் போட்டிருந்த ஒரு ட்விட் பதிவு, பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அதில், முதலில் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்’ என்று தலைப்பிட்டிருந்தார். அடுத்து தன் படத்துடன் ஐஸ்வர்யா ராய் படத்தைப் பகிர்ந்த அவர், அதற்கு ‘தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்று தலைப்பிட்டிருந்தார்.
அதுபோல் மூன்றாவதாக ஐஸ்வர்யா ராயுடன் அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் குழந்தையுடன் உள்ள படத்தைப் பகிர்ந்த விவேக், அதற்கு ’தேர்தல் முடிவு’ என்று தலைப்பிட்டிருந்தார். அவருடைய இந்த ட்வீட் அப்போது அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது.
முதலில் ஐஸ்வர்யா ராய் சல்மானைக் காதலித்ததாகவும் பிறகு, விவேக் ஓபராயைக் காதலித்ததாகவும் ஊடகங்களில் தகவல்கள் கசிந்தன. இதில் ஐஸ் மற்றும் விவேக்கின் காதல், நிச்சயதார்த்தம் வரை சென்று, வேறு பல காரணங்களால் பாதியில் முறிந்துபோனதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய், தற்போது அக்குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்