நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது குடும்பத்தினருடன் இன்று (ஜூன் 10) திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவர் 2017-ஆம் ஆண்டு மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ஞான்டுகாலுடே நாட்டில் ஒரிடவேளா திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து மாயநதி, வரதான், விஜய் சூப்பரும் பெளர்ணமியும், அர்ஜெண்டினா ரசிகர்கள், காட்டூர்கடவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் 2019-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து ஜகமே தந்திரம், புத்தும் புது காலை விடியாதா, கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது பூங்குழலி கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்தநிலையில் ஐஸ்வர்யா லக்ஷ்மி திருப்பதி கோவிலில் தனது குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.

சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பகவானை தரிசனம் செய்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மலையாளத்தில் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
அதற்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போதைக்கு வெப் சீரிஸில் நடிக்கும் எண்ணமில்லை. எனக்கு திரையரங்கில் சினிமா பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதனால் திரையரங்க வெளியீட்டிற்கான சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.
தமிழில் அசோக் செல்வனுடன் இணைந்து காதல் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளேன். தற்போதைக்கு தெலுங்கு திரைப்படம் எதிலும் நடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஐஸ்வர்யா முதல் அனுஷ்கா வரை: பாலிவுட் பிரபலங்களை பாட்டியாக்கிய AI கலைஞர்!