வேலையில்லா பட்டதாரி : வழக்கில் ஆஜராவதில் இருந்து ஐஸ்வர்யாவுக்கு விலக்கு!

Published On:

| By Kavi

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “வேலையில்லா பட்டதாரி” படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று (ஜூலை 15) ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014 ஜூலை 18 அன்று வெளியான படம் வேலையில்லா பட்டதாரி. தனுஷ், அமலா பால், சரண்யா பொன்வண்ணன், விவேக், சமுத்திரகனி நடிப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சுமார் எட்டு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் அந்த ஆண்டு வெளியான நேரடி தமிழ் படங்களில் வசூல் அடிப்படையில் வெற்றி படமாகும்.

இந்த திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று இருவரும் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை (இன்று) ஆஜராக விலக்கு அளித்து, வழக்கை இறுதி விசாரணைக்காக ஆகஸ்ட் 10ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share