விருமன் பாடல் வெளியீட்டு விழாவில் காமெடி நடிகர் சூரி கல்வி குறித்து பேசியதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் தனது பேச்சுக்கு விளக்கமளித்தார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடித்திருக்கும் திரைப்படம் விருமன் . இந்த படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாகும் அதிதி,பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் ஆவார். இதில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, சிங்கம்புலி, கருணாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சூரி பேச்சுக்கு எழுந்த கண்டனம்!
வரும் 12ம் தேதி விருமன் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரொமோசன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அகரம் அறக்கட்டளை குறித்து பேசிய காமெடி நடிகர் சூரி, ”ஆயிரம் கோவில் அன்னசத்திரம் கட்டுவதைவிட, ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது” என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள், சூரி இந்து கோவில்களையும், இந்துகளையும் அவமரியாதையுடன் பேசிவிட்டதாக கண்டனம் தெரிவித்தன.

நான் கோவிலுக்கு எதிரானவன் அல்ல!
இந்நிலையில் விருமன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, படக்குழுவினர் பற்றியும், நடிகை அதிதி செயல்பாடுகள் குறித்தும் நகைச்சுவையாக பேசினார். அதனைத் தொடர்ந்து தன் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு சூரி விளக்கமளித்தார்.
”மதுரையில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் எப்போது பேச ஆரம்பித்தாலும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் எனதான் பெயர் வைத்துள்ளேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நான் எந்த கோவிலுக்கும் எதிரானவன் கிடையாது” என்றார்.

இப்பவும் சொல்றேன் கல்வி முக்கியம்!
மேலும் அவர், “நான் படிக்காதவன். படிக்காததால் பல இடங்களில் அவமானபடுத்தப்பட்டு பல நேரங்களில் மனசு கஷ்டப்பட்டுள்ளேன். கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும். அன்றைக்கு மதுரையில் நிறைய ரசிகர்கள் வந்திருந்தனர்.
என்னை மாறி யாரும் கஷ்டப்பட கூடாது. அதனால் அங்கு கல்வி குறித்து பேசினேன். எனவே, இப்பவும் சொல்றேன். எல்லாருக்கும் கல்வி வேணும். மதுரை மீனாட்சி அத்தனை பேருக்கும் கல்வியை கொடுக்கட்டும்” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா