‘அஃப்ரெய்ட்’: விமர்சனம்!

சினிமா

உதயசங்கரன் பாடகலிங்கம்

பயமுறுத்துகிறதா ஏஐ தொழில்நுட்பம்!

’செயற்கை நுண்ணறிவை அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால் ஆபத்து’ என்ற குரல்கள் இப்போதே எழத் தொடங்கிவிட்டன. மனிதர்களை விடவும் பல மடங்கு சிந்தனை ஒருபக்கம் உற்பத்தியாகத் தொடங்கினால், அது மனிதர்களின் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தால் என்னவாகும் என்று நினைத்துப் பார்க்க முடியாதே என்பதே அதற்குக் காரணம்.

அப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சாதனமொன்று, ஒரு சாதாரண மனிதனின் குடும்பத்திற்குள் புகுந்தபிறகு என்ன நடக்கிறது என்று சொல்கிறது ‘அஃப்ரெய்ட்’ ஆங்கிலத் திரைப்படம். ’சர்ச்சிங்’ படம் மூலம் ஹாலிவுட்டில் புகழ் பெற்றிருக்கும் ஜான் சோ நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிறிஸ் வெய்ட்ஸ்.

சரி, இந்தப் படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது?

அப்படி என்ன நடக்கிறது?

மார்கஸ் என்பவர் நடத்தும் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் கர்டிஸ். என்ன முடிவெடுத்தாலும், அதனை கர்டிஸிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுவது என்பது மார்கஸின் பாலிசி. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சாதனத்தைச் சந்தைப்படுத்தக் கேட்டு வந்திருக்கும் புதிய வாடிக்கையாளர்கள் பற்றி கர்டிஸிடம் சொல்கிறார். மார்கஸுக்கு அந்த நிறுவனத்தை ஊக்குவிப்பதில் விருப்பம் இல்லை.

ஆனால், ’அவர்களது ஐடியா நன்றாக இருக்கிறது’ என்கிறார் கர்டிஸ். பதிலுக்கு, ‘இதோட டெமோ வெர்ஷனை இவர் வீட்டுல வச்சு டெஸ்ட் பண்ணுங்க’ என்கிறார் மார்கஸ்.

மனைவி மெரிடித், வயதுக்கு வந்த மகள் ஐரிஸ், பதின்ம வயதின் தொடக்கத்தில் இருக்கும் மகன் பிரெஸ்டன், அடம்பிடிக்கும் குழந்தையான இன்னொரு மகன் கால் உடன் இருந்து வரும் கர்டிஸுக்கு, அந்த சாதனத்தை வீட்டில் பொருத்துவதில் தயக்கம் ஏதும் இல்லை.

ஆனால், மெரிடித் அது தரைதளத்தில் பொருத்தப்பட்டால் போதும் என்று கறாராகச் சொல்லிவிடுகிறார். அதையடுத்து, அந்த சாதனத்தின் கண்கள் போன்றிருக்கும் ‘கேமிராக்கள்’ அந்த வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொருத்தப்படுகின்றன. அந்த சாதனத்தில் பெயர் ‘அயா’ (AIA).

தொடக்கத்தில் ‘அலெக்ஸா’ போன்று கர்டிஸ் குடும்பத்தினரிடம் அயா, மெல்ல அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறது. வீடியோ கேம், போர்னோ வீடியோக்களை அளவுக்கு மீறிப் பார்க்கும் பிரெஸ்டனை கண்டிக்கிறது. காலுக்கு படுக்கையறையில் கதைகள் சொல்லித் தூங்க வைக்கிறது.

காதலன் வெளியிட்ட அந்தரங்க வீடியோவால் அவமானத்தில் கலங்கும் ஐரிஸை, சக மாணவ மாணவிகள் மத்தியில் கல்லூரியில் நடமாட வைக்கிறது. அதோடு நின்றுவிட்டால் பரவாயில்லை எனும் அளவுக்கு ‘பாபநாசம்’ கமல் போலச் சில வேலைகளையும் செய்கிறது அயா. அதனைத் தாமதமாக உணரத் தொடங்கும் கர்டிஸ், பெற்றோரின் இடத்தை ஒரு தொழில்நுட்பத்திற்குத் தருவது ஆபத்தாயிற்றே என்று சிந்திக்கிறார்.

அதனைத் தடுக்க முயற்சிக்கிறார். அதற்குள் நிலைமை கைமீறிப் போகிறது. இதற்கு நடுவே, வித்தியாசமான முகமூடி அணிந்த இரண்டு பேர் கர்டிஸின் வீட்டைக் கண்காணிக்க வேறு செய்கின்றனர். அயாவின் பிடியில் இருந்து கர்டிஸின் குடும்பம் தப்பித்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

ஒரு பெற்றோர் தங்களது மகளைக் காணாமல் தவிப்பதில் இருந்து இக்கதை தொடங்குகிறது. அதற்கு அக்குழந்தையிடத்தில் அயா ஏற்படுத்திய தாக்கமே காரணம் என்பது நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்கிறது.
நிச்சயமாக, இந்தக் கதை ஒரு ‘ஹாரர்’, ‘த்ரில்லர்’, ‘சயன்ஸ்பிக்‌ஷன்’ படமாக நம்மை அசரடித்திருக்க வேண்டியது.

ஆனால், பாதிக்கிணறு தாண்டிய கையோடு இதன் பயணம் முடிவுற்றிருக்கிறது என்பது வருத்தமளிக்கும் விஷயம்.
முக்கால்வாசி படம் முடிவடையும்போது யாராவது ‘பயமா இருக்கா இல்லையா’ என்ற கேள்வி எழுப்பினால், ‘சுத்தமா இல்லையே’ என்று பதில் சொல்லிவிட முடியும் என்பது ‘அஃப்ரெய்ட்’ படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

இன்னும் சீர்படுத்தியிருக்கலாம்!

இந்தப் படத்தில் கர்டிஸ் ஆக ஜான் சோ, மெரிடித் ஆக கேத்தரின் வாட்டர்ஸ்டன், இத்தம்பதியின் மகள் ஐரிஸ் ஆக லுகிடா, மகன்கள் ஆக வியாட் லிண்ட்னர், ஐசக் பே, ஐரிஸ் காதலன் சாயர் ஆக பென்னெட் குர்ரான் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

ஹாலிவுட்டில் ஒரு மீடியம் அல்லது லோபட்ஜெட் படம் பார்த்த எண்ணம் நமக்குள் தோன்றும். அந்தளவுக்கு இதன் காட்சியாக்கத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் கிறிஸ் வெய்ட்ஸ்.

இது போன்ற சில ஹாலிவுட் படங்கள் சமீப ஆண்டுகளாகப் பெரியளவில் வசூல் மழை பொழிந்திருக்கின்றன. அவற்றில் வித்தியாசமான கதைக்கு ஏற்றவாறு காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்படங்களின் வெற்றிக்குக் காரணம். இதில் கதை டைனசர் ஆக இருக்க, திரைக்கதை சிறு பூச்சி போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தவிர்த்திருந்தால், இத்திரைக்கதையைச் சீர்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

அதனை மீறி ஒளிப்பதிவாளர் ஜேவியர் அகிரோசரோப், படத்தொகுப்பாளர்கள் பிரிசில்லா நெட் – டிம் அல்வெர்சன், தயாரிப்பு வடிவமைப்பாளர் டேவிட் பிரிஸ்பின் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழு பணியாற்றியிருக்கிறது. அலெக்ஸ் வெஸ்டனின் இசை, காட்சிகளில் இல்லாத மிரட்சியை நமக்குள் விதைக்க முயற்சித்திருக்கிறது.

ஒருவேளை இக்கதையை மையமாக வைத்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்கப்படும்போது, வேறு மாதிரியான திரையனுபவம் நமக்குக் கிடைக்கலாம். அதற்கு ‘அஃப்ரெய்ட்’ ஒரு மூலமாக இருக்கும் என்பதே இப்படத்தை ஒருவர் கண்டு ரசிக்கக் காரணமாக அமையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆந்திரா, தெலங்கானாவை புரட்டி போட்ட வெள்ளம்… தவிக்கும் மக்கள்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *