ICC WorldCup 2023: இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் இடையே இன்று (அக்டோபர் 15) நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹமனுல்லா குர்பஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரன் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 118 ரன்கள் குவித்த நிலையில், அடில் ரசீத் வீசிய 16வது ஓவரில் இப்ராஹிம் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ரஹமத் ஷா(3) அடில் ரசீத்தின் 18வது ஒவரில் வெளியேறினார். அதே ஓவரில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் என வெளுத்து வாங்கிய குர்பாஸ் (80) ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனையடுத்து விக்கெட் கீப்பர் இக்ரம் அலிக்ஹில்(58) இங்கிலாந்து பந்துவீச்சை தைரியமாக எதிர்கொண்டாலும், ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.
கடைசி நேரத்தில் ஆல்ரவுண்டர் ரஷீத் கான்(23) மற்றும் முஜீப்(28)ஆகியோரின் சிறிது நிதானமான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் 250 ரன்களை கடந்தது.
தொடர்ந்து விளையாடிய அந்த அணி 49.5 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
இங்கிலாந்து அணி தரப்பில், அடில் ரஷீத் 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும், லிவிங்ஸ்டன், ரூட், டோப்லே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கவீரர் பேர்ஸ்டோவை 2 ரன்களிலும், ஜோ ரூட்டை 11 ரன்களிலும் வெளியேற்றி அதிர்ச்சி அளித்துள்ளனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.
இதனால் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக்கூட பெறாமல் இருக்கும் ஆப்கானிஸ்தான் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடிக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
போட்டித்தேர்வில் வட இந்தியர்கள் மோசடி: விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!