டாம்க்ரூஸ்
ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், ட்ராமா, ஹாரர், த்ரில்லர், பேண்டஸி என்று பல வகைமை கொண்ட திரைப்படங்கள் தமிழில் வந்து கொண்டிருக்கின்றன. adult comedy perusu movie trailer
ஏதேனும் ஒரு வகைமையை மட்டும் முதன்மைப்படுத்தி திரைக்கதை அமைப்பதைப் போலவே, ஒன்றுக்கும் மேற்பட்ட வகைமையிலான கதைகளைச் சொல்லும் போக்கும் தற்போது பெருகி வருகிறது.
அதேநேரத்தில், தலைவாழை இலையில் நிரப்பப்பட்ட உணவுகளைக் குழப்பியடித்து உருண்டை பிடிப்பது போன்று ‘கமர்ஷியல் பட பார்முலா இதுதான்’ என்று ஜல்லியடிக்கும் வழக்கம் குறைந்திருக்கிறது.
கடந்த பத்தாண்டு காலத் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், இதனை நன்கு உணர முடியும். இதற்கு நடுவே, மேற்சொன்ன வரிசையில் ‘அடல்ட் கண்டெண்ட்’ திரைப்படங்களின் எண்ணிக்கை அருகி வருவதையும் உணர முடியும்.
அது பற்றி யோசிக்கையில், ’அப்படியா நிலைமை இருக்குது’ என்பது போல நம்மை வந்தடைந்திருக்கிறது ‘பெருசு’ பட ட்ரெய்லர். யூடியூபில் வெளியான ஒரு நாளில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில், அருண் ராஜ் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன், தீபா சங்கர், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
என்ன ‘கதை’?!

ட்ரெய்லரை பார்த்துவிட்டுக் கதை சொல்லும் அளவுக்கு விலாவாரியான விளக்கங்களை ‘பெருசு’ தரவில்லை. மாறாக, சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறது.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் அவதிப்பட்டு வரும் ஒரு முதியவர் மரணமடைகிறார். அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் அதைத்தான் நெடுநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் முழு மனதோடு இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாவண்ணம் ஒரு அசம்பாவிதத்துடன் அந்தப் பெரியவரின் மரணம் நிகழ்கிறது.
இறுதிச்சடங்கில் பங்கேற்பவர்கள் ’இப்படியொரு சோதனையா’ என்ற வார்த்தைகளையே விதவிதமாகக் கேட்கும் வகையில் நேரிட்ட அந்த மரணத்தில், அப்படியென்ன சொல்ல முடியாத விஷயம் ஒளிந்திருக்கிறது? அது ட்ரெய்லரில் கோடு கிழித்துக் காட்டப்பட்டாலும், படம் இன்னும் பல விஷயங்களைப் பேசும் என்று நம்பலாம்.
ஆனாலும், அதையே ‘படத்திற்கான யுஎஸ்பி’ ஆக முன்வைத்திருக்கிறது ‘பெருசு’ குழு. ஆக, இப்படத்தின் கதை கொஞ்சம் கோக்குமாக்கானது என்பதை ட்ரெய்லரே சொல்லிவிடுகிறது.
நல்ல காம்பினேஷன்! adult comedy perusu movie trailer

காமெடி படங்களில் தனது நடிப்பு அட்டகாசமாக இருக்கும் என்பதை நிரூபித்தவர் நடிகர் வைபவ். அவரது சகோதரரான சுனில், ‘ஆரம்பமே அமர்க்களம்’ என்பது போல, தான் அறிமுகமான ‘சீதக்காதி’யில் நகைச்சுவை நடிப்பில் அசத்தியிருப்பார். அது போதாது என்பவர்களுக்காகவே ‘டாக்டர்’ தொடங்கிப் பல படங்களில் நம்மைக் கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார்.
இவர்கள் போதாதென்று பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நக்கலைட்ஸ் தனம், தீபா சங்கர் என்று நிறைய நகைச்சுவைக் கலைஞர்கள் இதிலிருக்கின்றனர்.
இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அருண் ராஜ். பின்னணி இசையை கே.எஸ்.சுந்தரமூர்த்தி அமைத்திருக்கிறார்.
இது போக ஒளிப்பதிவாளர் சத்யா திலகம், படத்தொகுப்பாளர் சூரியா குமரகுரு, கலை இயக்குனர் சுனில் வில்லுவமங்கலத் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆக, நல்லதொரு காம்பினேஷன் ஆகத் தோற்றம் தருகிறது இப்படம்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் இளங்கோ ராம், ‘ஒரு யதார்த்தம் நிறைந்த நகைச்சுவைப் படமாக’ இதனைத் தர முயற்சித்திருக்கிறார். அதையும் தாண்டி, படத்தில் நிறைய ‘சினிமாட்டிக் மொமண்ட்’ உண்டு என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.
வழக்கமாக, ‘யதார்த்தம்’ தெறிக்கிற ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’டை கொண்டிருக்கிற திரைப்படங்களில் சமகால வாழ்வியல் கூறுகள் தான் கிண்டலடிக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் ஒரு ‘சிறிய’ விஷயத்தை வைத்துக்கொண்டு முழுநீள நகைச்சுவைப் படத்தை உருவாக்க முயற்சித்திருக்கின்றனர்.
இதுவும் தேவைதானே adult comedy perusu movie trailer

தமிழில் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, கே.பாக்யராஜ், பார்த்திபன் என்று பல இயக்குனர்கள் ‘அடல்ட் கண்டெண்ட்’ திரைப்படங்களைத் தந்திருக்கின்றனர். அந்த வரிசையில், கொஞ்சம் நேர்த்தியான திரையனுபவத்தைத் தரும் படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘பெருசு’.
‘டைமிங்’ சரியாக அமைகிற பட்சத்தில், தியேட்டரில் வெடிச்சிரிப்பை இந்த ‘பெருசு’ ஏற்படுத்தலாம்.
குறைந்தபட்சமாக, பாலியல் சார்ந்த சந்தேகங்களை மனதுக்குள்ளே பூட்டி வைத்துக்கொண்டு மூன்றாம் தர இணையதளங்களில் நேரத்தையும் பணத்தையும் இழக்கிற அப்பாவிகளின் மூளையில் படர்ந்திருக்கும் மாய வலையை அகற்றுவதில் இப்படம் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதைத் தீர்மானமாகச் சொல்லலாம்.
’ஃபன் பிலிம் ப்யூனரல்’ என்ற டேக்லைன் உடன் ‘காமெடி பேமிலி எண்டர்டெயினர்’ தருவதாகச் சொல்கிறது ‘பெருசு’ குழு. முழுக்கவே ‘பெரியவர்களுக்கானதாக’ முன்னிறுத்தப்படுகிற இப்படம் பதின்ம வயது இளையோரை எளிதில் கவரக்கூடியதாகவும் அமையலாம்.
ஜோடியாக அமர்ந்து சிரிக்கச் சிரிக்க இது போன்ற படங்களைப் பார்க்கலாம். நட்பு வட்டத்தோடு சேர்ந்து குதூகலத்தில் கூப்பாடு எழுப்பியவாறு பார்க்கலாம். யாரோ ஒரு மருத்துவர் அல்லது வழிகாட்டி தீர்க்க முடியாத சந்தேகங்களைத் தீர்த்து, தியேட்டர் இருளில் சிலர் பெருமூச்சுடன் மன நிம்மதி அடைய இது போன்ற படங்கள் உதவலாம்.
முக்கியமாக ‘எரோடிக்’ மற்றும் ‘போர்ன்’ படங்களுக்கு இடையேயான வித்தியாசத்தை உணராமல் ‘ஆபாச குப்பை’களை இணையதளங்களில் கண்டு நோய்வாய்ப்படுபவர்களுக்கான மருந்தாக அமையக்கூடிய பணியைச் செவ்வனே உருவாக்கப்பட்ட ‘அடல்ட் கண்டெண்ட்’ படங்கள் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ‘பெருசு’வும் சேரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இதன் ‘ட்ரெய்லர்’. முழுப்படமும் அதற்கேற்ப அமைந்தால் மகிழ்ச்சிதான்..! adult comedy perusu movie trailer