தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ’தல’ அஜித் குமார் நேற்று (மார்ச் 7) சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் வழக்கமான செக்கப் செய்வதற்காகவே அஜித் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் வந்தது.
அஜித்தின் ஹெல்த் பற்றி அவரது ரசிகர்களும் அபிமானிகளும் தெரிந்துகொள்வதற்கு காத்திருக்கும் நிலையில், அப்பல்லோ வட்டாரத்தில் அஜித்தின் உடல் நிலை பற்றி மேலும் விசாரித்தோம்.
52 வயதான நடிகர் அஜித்குமார் படத்தில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் பைக் மற்றும் கார் ரேஸ்களில் உயிரைப் பணயம் வைத்துக் கலந்துகொள்ளக் கூடியவர். அதனாலேயே பல விபத்துகளையும் சந்தித்து சிகிச்சைகளை எதிர்கொண்டவர்.
எப்போதுமே ஆக்டிவ்வான அஜித்துக்கு கடந்த சில நாட்களாக கழுத்து வலி, தலைவலி, உடல் சோர்வு என இருந்திருக்கிறது. இதுகுறித்து குடும்ப டாக்டரிடம் ஆலோசனை செய்திருக்கிறார் அஜித்.
குடும்ப டாக்டர் ஆலோசனைப்படி ஜெனரல் செக்கப் செய்துகொள்ள நேற்று மார்ச் 7 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு வழக்கம்போல ரத்தப் பரிசோதனை, இசிஜி எடுக்கப்பட்டது. கூடுதலாக காது, மூக்கு, தொண்டை டாக்டரும் பரிசோதனை செய்துள்ளார்.
அஜித்துக்கு 52 வயதாகிறபடியால் இதயம் தொடர்பான சோதனைகளும் முன்கூட்டியே செய்யப்பட்டது. அதன் பிறகு கழுத்து, தலைப் பகுதியில் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், காதுப் பகுதியிலிருந்து மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளில் ஒரு நரம்பில் அப்நார்மாலிட்டியை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அதாவது, அசாதாரணமான ஒரு பகுதியை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதற்கு கேங்லியான் (Ganglion) என்று மருத்துவ வட்டாரங்களில் பெயர்.
காதுப் பகுதியிலிருந்து மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளில் ஒரு நரம்பில் சிறிய கட்டி உருவாகியிருக்கிறது. இதனால் நரம்பு மண்டலம் முழுவதும் பாதித்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது. உடனடியாக சீனியர் டாக்டர்களுடன் ஆலோசனைகள் செய்த பிறகு ஆபரேஷன் செய்து அதை அகற்ற முடிவு செய்தனர்.
அதன்படி நரம்பியல் டாக்டர், மயக்க டாக்டர், மூளை நிபுணர், இருதய டாக்டர் என ஒரு மருத்துவ குழுவுடன் இன்று (மார்ச் 8) கன்சர்வேடிவ் சர்ஜரி செய்துள்ளனர்.
கன்சர்வேடிவ் சர்ஜரி என்றால் மற்ற உறுப்புகளைப் பாதிக்காத அளவுக்கு செய்வது. இந்த அறுவை சிகிச்சை முடிந்ததும் அகற்றப்பட்ட அந்த பகுதியை சோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், நாளையோ நாளை மறுநாளோ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்கிறார்கள்.
மேலும், தற்போது அஜித் குமார் நடித்து வரும் விடா முயற்சி படத்தில் பல காட்சிகள் மிகவும் ரிஸ்க் எடுத்து தலைகீழாக விழுவது, ரோலிங் செய்வது என்று நடித்திருக்கிறார்.
இதையறிந்த டாக்டர்கள் அஜித்திடம், ”இனி அவ்வாறெல்லாம் ரிஸ்க் எடுக்காதீர்கள். சில மாதங்களுக்கு விமானப் பயணம் வேண்டாம்” என்று கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதுதான் தல அஜித்தின் இப்போதைய ஹெல்த் அப்டேட்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி : துணை ஜனாதிபதி பங்கேற்பு!