ராமாயணத்தைப் படமாக்கி இந்தியா முழுவதும் வெளியிடுவது சாதாரண காரியமில்லை. அதற்குப் பின்னிருக்கும் நோக்கமும் சாதாரணமானதாக இருந்திட முடியாது. அதுவே ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடித்த ‘ஆதிபுருஷ்’ மீதான கவனக் குவிப்புக்குக் காரணம்.
ஆனால், நீண்ட நாட்களாகப் படம் தயாரிப்பில் இருந்தது அந்த ஈர்ப்பைச் சரித்தது. அப்போதுதான் படத்தின் டீசர் வெளியாகிப் பெரும் கிண்டலுக்கு உள்ளானது. அதில் நிறைவுறாமல் இருந்த விஎஃப்எக்ஸ் பணி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதன்பிறகு வெளியான ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்றாலும், படம் எப்படியிருக்குமோ என்ற கேள்வி பூதாகரமாகிக்கொண்டே வந்தது. இதோ, இப்போது திரையரங்குகளில் ‘ஆதிபுருஷ்’ வெளியாகியிருக்கிறது.
எப்படிப்பட்ட வரவேற்பை இது ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது?
வனவாசத்தில் தொடங்கும் திரைக்கதை!
ராமாயணக் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்று இயக்குனர் ஓம் ரவுத் நினைத்திருக்க வேண்டும். அதனால், வனவாசம் வரையிலான நிகழ்வுகளைச் சித்திரங்களாக்கி வாய்ஸ் ஓவரிலேயே முன்கதையைச் சொல்லியிருக்கிறார். அதற்கடுத்தாற்போல, ராவணன் பிரம்மனிடம் சாகாவரம் பெறுவதாகக் காட்டுகிறார். அதன்பிறகு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் காட்டில் வசிப்பதில் இருந்து திரைக்கதை தொடர்கிறது; இறுதியாக, ராவணன் வீழ்வதுடன் முடிவடைகிறது.
சொல்லப்போனால், சுமார் 40% ராமாயணக் கதையை முதல் பத்து நிமிடங்களிலேயே நிறைவு செய்துவிடுகிறது ‘ஆதிபுருஷ்’. சீதையை ராவணன் கவர்ந்து செல்வதில் இடைவேளை விட வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. அதனால், மிகநேர்த்தியாக வனவாசத்தையும் வாலி வதத்தையும் வானரப் படை உதவியுடன் இலங்கைக்குச் சென்று போரிடுவதையும் திரையில் காட்டியிருக்கலாம்.
ஆனால் மிகப்பிரமாண்டமாகத்தான் காட்சிகள் இருக்க வேண்டுமென்ற உத்தேசத்துடன் சாகசங்களுக்கும் சண்டைக்காட்சிகளுக்குமே முக்கியத்துவம் தந்திருக்கிறார் ஓம் ரவுத். அதனால் உணர்வுகளுக்கு இடம் தரும் காட்சிகளையே காண முடியவில்லை.
அனைத்துக்கும் மேலாக சயின்ஸ் பிக்சன், அனிமேஷன் மற்றும் கிராபிக் நாவல் வகைமை படங்களின் பாதிப்பில் ராவணன் ஆண்ட இலங்கையை வடிவமைத்திருக்கிறார்.
வௌவால் போன்று தோற்றமளிக்கும் ஒரு பிரமாண்ட பிராணியை அவரது வாகனமாகக் காட்டுகிறார். அது போதாதென்று ராமனும் ராவணனும் அஸ்திரங்களைப் பிரயோகிக்கும் இடங்களில் ‘நான் இருக்கிறேன்’ என்று தலை நீட்டுகிறது விஎஃப்எக்ஸ்.
அனைத்தும் ஒன்று சேரும்போது ஒரு வீடியோகேம் உலகுக்குள் நுழைந்துவிட்ட உணர்வே ஏற்படுகிறது. நாம் பார்ப்பது ஒரு புராணக் கதை என்பதே மறந்துவிடுகிறது. இதற்குப் பதிலாக, இந்த உழைப்பைக் கொண்டு ஒரு புதிய வீடியோ கேம் உருவாக்கியிருக்கலாம்.
உடம்பைக் குறைங்க பாஸ்!
‘பாகுபலி’ பாதிப்பில் இருந்து பிரபாஸ் இன்னும் மீளவில்லை என்பது அவரது பட வரிசையிலேயே நன்கு தெரிகிறது. திரையில் காட்சிகள் பிரமாண்டமாகத் தெரிவது போலத் தானும் தோன்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் இறங்கியிருப்பது அவரது சொந்த விருப்பம். ஆனால் ஜிம்பாய் அல்லது பவுன்சர்களுடன் போட்டியிடப் போகிறாரோ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கே இருக்கிறது அவரது தோற்றம். ப்ளீஸ், உடம்பைக் கொஞ்சம் குறைங்க பாஸ்!
ஒரு நாயகனாக, நடிகராக இதில் பிரபாஸுக்கு பெரிதாக ‘ஸ்கோப்’ இல்லை. எந்நேரமும் சலனமற்ற முகத்துடன் வசனம் பேசுவது நிச்சயம் அவருக்கே போரடித்திருக்க வேண்டும். அதனால், இறுதிக்காட்சிகளில் அவர் முகத்தில் வெறுமையே தென்படுகிறது.
கீர்த்தி சனோனுக்கு அந்தச் சிரமமில்லை. அழுகை, கவலை, கோபம், பெருமிதம், காதல் என்று தான் வரும் இடங்களிலெல்லாம் ஏதோ ஒரு உணர்வைத் திரையில் நிறைத்து விடுகிறார். கவர்ச்சி கண்ணை உறுத்தாத அளவுக்குத் தான் ஏற்ற பாத்திரத்தோடு பாந்தமாகப் பொருந்தியிருக்கிறார்.
ராவணனாக வரும் சையீஃப் அலிகானை இன்னும் பெரிதாகத் திரையில் காட்டியிருக்கின்றனர். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘ஓம்காரா’ டைப்பில் தனது ஆக்ரோஷத்தை கொட்டியிருக்கிறார் மனிதர். ‘இலங்கேஸ்வரன்’ மனோகர் பாணியில் விதவிதமாக அவரிடம் பாவனைகள் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு இருப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
‘லட்சுமணன்’ சன்னிசிங், ‘அனுமன்’ தேவ்தத்தா நாகே, ‘மண்டோதரி’ சோனால் சவுகான், ‘சூர்ப்பனகை’ தேஜஸ்வினி, ‘விபீஷணன்’ சித்தாந்த் கார்னிக், அவரது மனைவியாக வரும் திருப்தி தோரட்மால் உட்பட மிகச்சிலருக்கு மட்டுமே குளோஸ்அப்பில் முகம் காட்டும் வாய்ப்பு. மேற்சொன்னவர்களில் தேஜஸ்வினியும் திருப்தியும் கொஞ்சமாய் கவர்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் கீர்த்தி சனோன் பளிச்சென்று தெரிகிறார். க்ரீன்மேட் காட்சிகளே அதிகம் என்பதால் விஎஃப்எக்ஸை கருத்தில் கொண்டு பிரேம்களையும் ஒளியமைப்பையும் செதுக்கியிருக்கிறார். திரையில் ராவணனனைக் காட்டும் பிரேம்கள் சட்டென்று நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
அபூர்வா மோதிவாலே, ஆசிஷ் மாத்ரேவின் படத்தொகுப்பு இன்னும் கனகச்சிதமாக அமைந்திருக்கலாம். குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகான நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
கலை இயக்குனர் சாகர் மாலிக்கின் பணி எங்கெங்கு இருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது. அந்தளவுக்கு விஎஃப்எக்ஸுக்கு இடம் விட்டு க்ரீன்மேட் நுட்பம் பெரும்பாலான இடங்களை நிறைத்துள்ளது.
அஜய் – அதுல் மற்றும் சஜ்ஜட் – பரம்பரா தந்திருக்கும் பாடல்கள் வழக்கமான இந்திப்படங்களை நினைவூட்டுகின்றன. சையீஃப் பாடும் ‘சிவோகம்’ பாடல் இந்த திரைக்கதையில் ஆறாவது விரல் தான். அதே நேரத்தில் பின்னணி இசையில் சஞ்சித் பல்காரா – அங்கித் பல்காரா இணை மிரட்டியிருக்கிறது. என்ன, ஒரு புராணக் கதையில் தாங்கள் பணியாற்றுவதை மறந்து ஒரு ‘சூப்பர் ஹீரோ’வின் அட்வெஞ்சர் ஆக்ஷன் படம் என்று நினைத்துக்கொண்டு வாசித்து தள்ளியிருக்கின்றனர். இன்றைய தலைமுறையினரை அந்த இசை ஈர்க்கலாம். ஆனால், கதையுடன் ஒன்றுவதில் அதுவே முக்கியத் தடையாக இருக்கிறது.
மாபெரும் கேள்வி!
இன்றைய விஎஃப்எக்ஸ் யுகத்தில் புராண, இதிகாச நாயகர்களை சூப்பர் ஹீரோக்களாக காட்டுவது பெரிய விஷயமில்லை. அந்த நுட்பங்கள் செறிவுடன் அமையப் பெறும்போது காட்சியாக்கம் நம் கண்களைக் கவ்விக்கொள்வது நிச்சயம். அதற்காக, ஏற்கனவே நாம் கடந்துவந்த ராமாயண பாத்திரங்களை, நிகழ்வுகளை, அதில் நிரம்பியிருக்கும் ஒவ்வொன்றையும் தலைகீழாக மாற்றியிருப்பது மாபெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. காலம்காலமாக ராமாயணத்தை ரசித்தவர்களால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதே அது.
ஏனென்றால், இதுவரை வெளிநாட்டினர் தயாரித்த ராமாயணம், மகாபாரதப் புனைவுகள் எதுவுமே இந்தியாவில் பரவலான மக்களால் ரசிக்கப்பட வாய்ப்புகள் கிட்டியதே இல்லை. அப்படியொன்று நிகழ்ந்தாலும், எல்லோரும் அதனைச் சிலாகிப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை.
அனுமன் பாத்திரம் ‘பஜ்ரங்’ என்றே குறிப்பிடப்படுகிறது. ராமனும் சீதையும் லட்சுமணனும் ராகவன், ஜானகி, சேஷு என்றே குறிப்பிடப்படுகின்றனர். ராமாயணத்தை அறிந்தவர்களுக்கு அந்தப் பெயர்களின் மாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், தமிழ் டப்பிங் பதிப்பில் ராமர், சீதை, லட்சுமணன் என்று ஏற்கனவே நன்கு தெரிந்த பெயர்களைப் பயன்படுத்துவதில் என்ன தயக்கம்?
சில காட்சிகளில் ராகவ் என ராமனை சீதை குறிப்பிடும்போது, இந்தக் கதை எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது என்ற ஐயம் எழுகிறது (அதற்காக, அந்தக் காலத்தில் பெயரைச் சுருக்கி அழைக்கமாட்டார்களா என்று கேட்கக் கூடாது).
படத்தில் ஆங்காங்கே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கங்கள் வருகின்றன. ’எங்கள் வீட்டுப் பெண்கள் மீது கையை வைத்தால் உயிரோடு எரித்துவிடுவோம் என்று எச்சரித்துவிட்டு வந்தேன்’ என்பது போன்ற வசனங்கள் வலிந்து புகுத்தப்பட்டதும் கூட தேவையற்றது என்றே தோன்றுகிறது.
வழமையாகப் புராணப் படங்களில் இருந்த விஷயங்களைத் தவிர்க்க வேண்டுமென்று மெனக்கெட்ட இயக்குனர் ஓம் ரவுத், ஸ்லோமோஷனில் வசனம் பேசுவதை மட்டும் அப்படியே பின்பற்றியிருக்கிறார். இன்றைய வேக யுகத்தில் அது கேலிக்குள்ளாகும் என்று தெரிந்தே படத்தில் வைத்திருப்பது அபத்தத்தின் உச்சம்.
இப்படி விமர்சனங்களை எதிர்மறையாகப் பெறும்விதமாகவே ‘ஆதிபுருஷ்’ அமைந்துள்ளது. அதனால், பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்னவாகும் கணக்குவழக்குக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆனால், நன்கு தெரிந்த ஒரு கதையின் வழியே வித்தியாசமான காட்சியாக்கத்தைக் காணப் போகிறோம் என்று எதிர்பார்ப்புடன் இருந்தவர்களை ஏமாற்றியிருக்கிறது இப்படம்.
வீடியோகேம் மீது வேட்கை கொண்டு திரியும் வாண்டுகள், இப்படத்தைச் சின்னத்திரையில் ரசிக்கலாம். ஆனால், பெருந்திரையில் பிரமிப்பை ஏற்படுத்தாதா என்று யானைப்பசியுடன் காத்திருந்தவர்களுக்கு இப்படம் சோளப்பொரியைக் கூடத் தரவில்லை. ’இல்லையே, தியேட்டரில் பாப்கார்ன் விற்கிறார்களே’ என்று பதில் கேள்வி கேட்பவர்களுக்கு இந்த விமர்சனம் சிறிதும் பொருந்தாது.