கடந்த ஜூன் 16 ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழியில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது ஆதிபுருஷ்.
இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ராமராக நடிகர் பிரபாஸ், ராவணனாக சயிப் அலிகான், சீதா தேவியாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டதிலிருந்தே இந்த படத்தை ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதேநேரம் மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்தனர்.
அதேபோல், ஆதிபுருஷ் திரைப்படத்தின் திரைக்கதை, வசனம் ஆகியவை இந்துக்களின் மத உணர்வையும் சனாதன தர்மத்தையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராமன் மற்றும் ராவணன் கதாபாத்திரங்கள் வீடியோ கேமில் வரும் பொம்மை போல் காட்டப்பட்டுள்ளன.
இப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு ஜூன் 20 ஆம் தேதி கடிதம் எழுதியது.
இப்படி படம் வெளியானதிலிருந்தே பல்வேறு கண்டனங்களையும், விமர்சனங்களை சந்தித்தாலும் மறு புறம் வசூல் சாதனை செய்து வருவதாக படக்குழு அறிவித்து வருகிறது.
அந்த வகையில், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு இன்று(ஜூன் 22)வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் 6 நாட்களில் 410 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், இரண்டாவது நாள் 100 கோடி ரூபாயும் வசூலித்திருந்தது.
எனினும், ஆர்.ஆர்.ஆர் மற்றும் பாகுபலி 2 , கே.ஜி.எஃப் படங்களின் முதல் நாள் வசூலை ‘ஆதிபுருஷ்’ படம் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வெளியானது விஜய்யின்’நா ரெடி’பாடல் லிரிக் வீடியோ!
பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைக்கும்: அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்