‘ஆதி புருஷ்’ படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பால் இந்தி திரையுலகு பரபரப்பு அடைந்துள்ளது.
‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பின் அகில இந்திய நடிகரான பிரபாஸ் நடிக்கும் படங்கள், பன்மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா படங்களாகவே தயாரிக்கப்பட்டு வெளியாகிறது.
அந்த வரிசையில் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஆதி புருஷ்’. அக்டோபர் 3 அன்று அயோத்தியில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியிட்டப்பட்டது.
டிரெய்லரை பார்த்த சினிமா ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நடிகர்கள் அனைவரும் பொம்மையாக காட்சிப்படு்த்தப்பட்டிருப்பது போலவும்,
சோயாபீம் தொடரில் வரும் கதாபாத்திரங்கள்போல இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தி திரையுலகில் சமீபகாலமாக வெளியாகும் படங்களில் நடித்துள்ள நடிகர்கள், கடந்த காலங்களில் அரசியல், சமூக ரீதியாக சொல்லிய கருத்துக்களை முன்னிலைப்படுத்தி,
அவர்கள் நடிப்பில் படம் வெளியாகும் நேரத்தில் படங்களுக்கு எதிராக கருத்து சொல்வதும் படத்தை பாய்காட் செய்யுமாறு சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

அதுபோன்ற நிலைமை ’ஆதி புருஷ்’ படத்திற்கும் வருமோ என்கிற அச்சம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சர்ச்சையோடு புதிய சிக்கலையும் ’ஆதி புருஷ்’ சந்தித்துள்ளது. இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக காட்சியமைப்புகள் உள்ளதாக மத்திய பிரதேச உள்துறை மந்திரியான நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.
‘ஆதிபுருஷ்’ டிரெய்லர் பற்றி அவர் கருத்து தெரிவிக்கும்போது, “படத்தின் டிரெய்லரை நான் பார்த்தேன். அதில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளன.
டிரெய்லரில் அனுமன் தோலால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருக்கிறார். டிரெய்லரில் காணப்பட்ட இந்து தெய்வங்களின் உடைகள் மற்றும் தோற்றம் ஏற்றுக்கொள்ளகூடியதாக இல்லை.
மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இவை.
இதுபோன்ற காட்சிகளை படத்தில் இருந்து நீக்குமாறு ஓம் ராவத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்து மத அடையாளங்களை தவறான முறையில் காட்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமாயணத்தை தழுவி உருவாகி உள்ள இந்த படத்தில், ராமராக பிரபாஸ், சீதாவாக கிர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் நடித்துள்ளனர்.
ஓம் ராவத் இயக்கி உள்ளார். இதன் டீசர் அக்டோபர் 3 அன்று வெளியான பின்பு ஐந்து மொழிகளிலும் 100 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.
திரைப்படங்களில் காட்சி அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தோல் ஆடைகள், கலர் கலரான ரெக்சின் வகையிலான ஆடைகள், மசாலா சினிமாக்கள் மட்டும் இன்றி புராணம் சம்பந்தமான படங்களில், எல்லா மொழி சினிமாக்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை அது சம்பந்தமாக எந்த மொழி சினிமாவிலும் எதிர்ப்புகள் வந்ததில்லை. முதன்முறையாக இந்தி சினிமாவில் எழுப்பப்பட்டுள்ளது.
இராமானுஜம்
ஆஸ்கர் விருதுக்கு போட்டிபோடும் ஆர்.ஆர்.ஆர்: ராஜமௌலியின் புதிய திட்டம்!