ஹேமா கமிஷன் அறிக்கை : உடைத்து பேசிய ஊர்வசி

சினிமா

இந்திய சினிமா என்று வருகிற போது திரைக்கலைஞர்கள், திரைப்படங்கள் மீது தனித்துவமான மரியாதை, கெளரவத்துடன் அணுகப்பட்டு வந்த மலையாள சினிமா ஹேமா கமிஷன் அறிக்கையினால் அவமானப்பட்டு நிற்கிறது.

உண்மை எது பொய் எது என்கிற முடிவுக்கு வர முடியாத சூழலில் ஊடகங்களிடம் துணை நடிகைகள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சம்பவங்களை பேசி வருகின்றனர்.

இதுவரை மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் யாரும் இது பற்றி எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. நடிகர் சங்க நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டதால் மலையாள திரையுலகில் அதிகாரம் மிக்க அமைப்பாக கருதப்படும் மோகன்லால் தலைவராக இருக்கும் மலையாள நடிகர்கள் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதன் மூலம் ஹேமா கமிஷன் அறிக்கை சம்பந்தமாக மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கருத்து என்ன என்று ஊடகங்கள் கேள்வி கேட்டு வந்ததற்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஹேமா கமிஷன் அறிக்கையினால் மலையாள சினிமா ஸ்தம்பித்து, முடங்கி போய்விட்டதாக கூறப்படுவதை பற்றி மலையாள திரைப்பட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் சம்பந்தபட்டவர்களிடம் கேட்டபோது, “அப்படி எதுவும் இங்கு நடக்கவில்லை. பொது வெளியில் பிரபலமானவர்களாக இருந்தவர்கள் பற்றி எதிர்மறையான குற்றசாட்டு, புகார் வருகிற போது தனிப்பட்ட முறையில் அவர்களை சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.

குடும்ப உறவுகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் தொழில் ரீதியாக மலையாள சினிமா தொய்வடையவில்லை. புதியபட தயாரிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தங்கள் மீதான குற்றசாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள சம்பந்தபட்டவர்கள் தயாராகி வருகின்றனர்.

மலையாள சினிமாவில் மட்டுமே பாலியல் பிரச்சினைகள் இருப்பதாக சித்தரிக்கப்பட்டு வருவது தவறானது. சினிமாவில் இது போன்ற சிக்கல்கள் எல்லா மொழிகளிலும் உள்ளது” என்றனர்.

இப்பிரச்சினை சம்பந்தமாக வெளிப்படையாக பொது வெளியில் கருத்து சொல்ல, விமர்ச்சிக்க திரைக்கலைஞர்கள் தயங்கி வரும் சூழலில் தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகையாக இப்போதும் நடித்துக் கொண்டிருக்கும் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஊர்வசி ஊடகங்களிடம்  பேசியுள்ளார்.

ஹேமா கமிஷன் அறிக்கை, மலையாள சினிமாவில் நடப்பது என்ன, இதற்கு தீர்வு என்ன என்பது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்..

“ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதில் இருந்து மலையாள சினிமாவில் மட்டும் அட்ஜஸ்மென்ட் பிரச்சினை நடப்பதாக சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது நிச்சயமான உண்மை கிடையாது. இது எல்லா துறைகளிலும் நடக்கிறது. வட மாநிலங்களிலும் கூட நடக்கிறது.

மருத்துவமனை, கல்லூரி, ஆண், பெண் என எல்லோருக்குமே இந்த மாதிரி தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கேரளாவில் இருக்கும் பெண்கள் தான் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நடந்த அநியாயங்கள் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு பெண் நடிகை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் வெளியே வந்து சொல்ல தொடங்கியதும் மற்ற நடிகைகளும் நாங்களும் இதுபோல பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

கேரள அரசும் உண்மை நிலை அறிய கமிட்டியை அமைத்தது. மலையாளத் திரை உலகில் இருக்கும் பெண்கள் தைரியமான பெண்களாக இருந்ததால்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதனால் மலையாள சினிமாவில் மட்டுமே இப்படி நடந்து இருக்கிறது என்று சொல்ல முடியாது.

மற்ற மொழி சினிமாக்களில் யாரும் சொல்ல முன்வரவில்லை என்பதுதான் உண்மை, அதே நேரத்தில் ஹேமா அறிக்கை முழுமையாக எல்லோருக்கும் தெரியாது. அந்த அறிக்கையில் சில நடிகைகள் மட்டும் பேசி இருக்கிறார்கள். அதில் அவர்கள் அடிப்படை வசதி இல்லை, சம்பளம் சரியாக தருவதில்லை, சில நேரங்களில் இரவில் அறைக்கதவை தட்டுகிறார்கள் என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.

ஒரு சில பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் சொல்லிவிட்டார் என்பதற்காக ஒரு ஆணை குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. அந்த புகாரை தீர விசாரித்து தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது ஹேமா அறிக்கை வெளியானதை தொடர்ந்துதான் ஒரு பரபரப்பு இருக்கிறது. ஆனால் இன்னும் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனாலும் நான் சினிமாவில் இத்தனை வருடங்கள் இருக்கிறேன். எனக்கு இது போன்று எந்த ஒரு அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகளும் வந்தது கிடையாது.

எந்த இடத்திலும் நாம் நம்முடைய முடிவிலும் தைரியமாக இருக்க வேண்டும். பொதுவாக நடிகைகள் கதை கேட்பதற்காக ஒரு இயக்குனரை தனியாக சந்திக்க வேண்டும் என்றால் அவர்களின் தனிப்பட்ட அறைக்கோ, ஹோட்டலுக்கோ சொல்லக்கூடாது. பொது இடத்தில் சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள்.

இல்லை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொன்னால் துணைக்கு யாராவது ஒருவரை கூட்டிக்கொண்டு செல்லலாம். இது நடிகைகளுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் பொருந்தும்.

ஒரு ஆண் நான்கு பேர் இருக்கும் இடத்தில் நம்மிடம் பழகும் விதம் வேறு மாதிரி இருக்கும். அதே நேரத்தில் தனியாக இருக்கும்போது அவருடைய மனம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.

அதனால் பெண்ணால் ஒரு இடத்தில் தைரியமாக போராட முடியாது என்றால் அங்கு இன்னொருவரை துணைக்கு கூட்டிட்டு போவது தப்பு கிடையாது.

அதற்காக நான் பெண்கள் பழைய நிலையில் தான் இருக்க வேண்டும் இன்னும் ஒருவரை நம்பி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்முடைய பாதுகாப்புமுதலில் முக்கியம் அதை நாம கவனிக்க வேண்டும் என்று பேசியுள்ளது மலையாள திரையுலகில் முக்கியத்துவமிக்கதாக பேசப்பட்டு வருகிறது.

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

10 மாநிலங்களில் 12 தொழில் நகரங்கள் : உபிக்கு இரண்டு – தமிழகத்தில்?

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதா ?- மெட்ரோ ஸ்ரீதரன் சொல்வது என்ன?

சென்னை போலீசாருக்கு ரேட்டிங் : இரண்டுக்கு குறைந்தால் ட்ரான்ஸ்பர்?

70,403 பொறியியல் இடங்கள் காலி : துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

கர்ப்பிணியாக இருந்த போது , வயிற்றில் எட்டி உதைத்தார்- நடிகர் முகேஷின் கொடுமைகள் – நடிகை சரிதா கண்ணீர்!

Actress Urvashi Open Talk

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *