நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்றும், நடிகர் மோகன் பாபு தான் கொலை செய்து விபத்தாக சித்தரித்தார் என்றும் சமூக ஆர்வலர் ஒருவர் தற்போது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. actress soundarya killed by mohanbabu : chittimallu
தென்னிந்திய சினிமாவில் 1992 முதல் 2004 வரை பிரபல நடிகையாக வலம் வந்தவர் செளந்தர்யா. கர்நாடகாவில் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து கொடிகட்டி பறந்தவர்.

தமிழில் ரஜினிகாந்துடன் அருணாச்சலம், படையப்பா, கமல்ஹாசனுடன் காதலா காதலா, விஜயகாந்துடன் சொக்கத்தங்கம், தவசி ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருந்தார். இதே போன்று தெலுங்கில் சிரஞ்சீவி, நாகர்ஜூனா, வெங்கடேஷ், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் அமிதாப் பச்சன் ஆகியோருடன் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.
இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பெங்களூரு சென்றபோது சௌந்தர்யாவின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அவர் உடல் கருகி காலமானார். அப்போது அவருக்கு 31 வயது. மேலும் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் செளந்தர்யா இறந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மரணத்தில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
மோகன்பாபு தான் கொலை செய்தார்! actress soundarya killed by mohanbabu : chittimallu
இதுதொடர்பாக தெலங்கானாவை சேர்ந்த சமூக ஆர்வலர் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் கம்மம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகாரில், “ஹைதராபாத் ஜல்லேபள்ளியில் நடிகை சௌந்தர்யாவுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை மோகன்பாபு கேட்டார். அதற்கு சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் அதற்கு மறுத்ததால், இருவரையும் கொலை செய்து ஹெலிகாப்டர் விபத்து போல் சித்தரித்துவிட்டார்.
சௌந்தர்யா இறந்த பின், அவரது நிலத்தை ஆக்கிரமித்து விருந்தினர் மாளிகை கட்டிவிட்டார் மோகன்பாபு. அதனை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும்” என தனது புகாரில் சிட்டிமல்லு தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறி, போலீசார் பாதுகாப்பையும் கோரியுள்ளார் சிட்டிமல்லு.
சமீபத்தில் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக கேட்க சென்ற மஞ்சுவை செய்தியாளர்கள் முன்னிலையிலேயே அடித்து விரட்டிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.