அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ருத்ரமாதேவி’ படத்தைத் தொடர்ந்து, குணசேகர் இயக்கியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’.
காளிதாசன் எழுதிய புராணக் கதையான சகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘சாகுந்தலம்’ படம்
தயாரிக்கப்பட்டுள்ளது. சகுந்தலை வேடத்தில் சமந்தாவும், மன்னன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட காதல் கதையைத் தான் பீரியட் படமாக எடுத்துள்ளனர்.
இந்தப் படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் பலமுறை வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது.
இயக்குநர் குணசேகர், தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடஸ்வரா கிரியேஷன்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் சினிமா வாழ்க்கையில் அவர் மட்டும் அல்ல அவரது ரசிகர்களும், மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் சகுந்தலம். இந்த படம், திரையரங்குகளில் மோசமான வசூலை எதிர்கொண்டுள்ளது.
65 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வெளியான சாகுந்தலம் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி ரூபாய் அளவில் மொத்த வசூல் செய்துள்ளது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 35 % க்கும் குறைவான இருக்கைக்கான டிக்கெட்டுகளே முதல் வாரம் விற்பனையானது என்கிறது தியேட்டர் வட்டாரம்.
இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு, “சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. கதாநாயகி அந்தஸ்தை இழந்து விட்டார்.
சகுந்தலை கதாபாத்திரத்துக்கு பொருத்தமில்லாத அவரை எப்படி தேர்வு செய்தார்கள். படத்தை ஓடவைக்க சமந்தா தனது உடல்நிலையை காரணம் காட்டி மலிவான விளம்பரங்கள் செய்தார்” என்று விமர்சித்து இருந்தார்.
தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கு காது மடல்களில் அதிகமாக முடி வளர்ந்து இருக்கும். அதை வைத்து தற்போது சமந்தா அவரை விமர்சித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“காது மடலில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடினேன். அதற்கு அதிகமான ஹார்மோன் சுரப்பதுதான் காரணம் என்று வந்தது. இது யார் என்பது உங்களுக்கு தெரியும்” என்று குறிப்பிட்டு சிட்டிபாபுவை விமர்சித்து உள்ளார்.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் சமந்தாவின் இந்த பதிவு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இராமானுஜம்
சித்ரா பவுர்ணமி: கண்ணகி கோயில் கொடியேற்றம்!
கேதர்நாத்தில் கடும் பனிப்பொழிவு: பக்தர்கள் செல்ல தடை?
IPL 2023: அரைசதங்கள் அடித்து அதிரடி… கொல்கத்தாவை வீழ்த்திய சிஎஸ்கே!