தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகள் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால், அதில் நடிகை ராதிகாவின் பெயர் நிச்சயம் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெறும்.
அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை, வேறுபட்ட பாத்திரத் தேர்வு, தொடர்ந்து பணியாற்றவல்ல மனவெழுச்சி மட்டுமல்லாமல் விமர்சனங்களை எதிர்கொண்டு தோல்விகளை வெற்றிகளாக மாற்றிய தீரமும் அதற்குக் காரணமாக அமையும்.
புதிதாய் நடிப்புலகில் கால் பதிப்பவர்கள் கூட, தொடர்ந்து நீடிப்பதற்கான ரகசியங்களை அறிய ராதிகாவைப் போன்றவர்களின் வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டறிந்தால் போதும். அப்படிப்பட்ட ராதிகா, இன்று 60 ஆண்டுகளைத் தாண்டி 61ஆம் வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
குழந்தைத்தனமான முகம்!
எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளம், ராதிகா சினிமாவுலகில் நுழையப் போதுமானதாக இருந்தது. ஆனால், விமர்சகர்களின் பேனாவில் இருந்து வெளிப்பட்ட நெருப்பைச் சமாளிக்கும் அளவுக்கு அப்போது அவரது நடிப்பு அமையவில்லை.
பதின்ம வயது வரை அவர் எதிர்கொண்ட வாழ்க்கைமுறைக்கும், அவர் நடித்த படங்களின் கதைக்களங்களுக்கும் இருந்த பெரும் வித்தியாசம் கூட அதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் குறிப்பிடும் அளவுக்கு அவர் வளர்ச்சியை அடையவில்லை. அதனால், எப்பாடுபட்டாவது தனது நடிப்புத்திறனை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தைத் தொடக்கக் காலத்தில் சந்தித்தார் ராதிகா.
கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள், பாமா ருக்மிணி போன்ற படங்களைப் பார்த்தால், ‘இதெல்லாம் ராதிகா நடிச்சதுதானா’ என்று நம்மை ஆச்சர்யம் தொற்றும்.
குழந்தைத்தனம் மிக்க முகத்தோடு பேண்ட் சர்ட் அணிந்து வந்த ஒரு பெண்ணை, திடீரென்று பாவாடை தாவணியில் கிராமத்து தெருக்களில் வலம் வரச் சொன்னால் என்னவாகும்? அதுவரை அனுபவித்திராத உணர்வுகளைத் திரையில் பிரதிபலிக்கச் சொன்னால் எப்படி அதனை உள்வாங்க முடியும்?.
அவையனைத்தையும் ராதிகா கடந்து வருவதற்குள், சில ஆண்டுகள் முடிந்திருந்தன; பல படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியிருந்தன. ஆனால், அந்த படங்களில் எல்லாம் நகைச்சுவையிலும் ரௌத்திரத்திலும் விளையாடியிருந்தார் ராதிகா. அதுவே, யதார்த்தமான நடிப்பைப் பிரதிபலிப்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தைச் சன்னமாக உணர்த்தியது.
இன்று போய் நாளை வா, ஈரவிழி காவியங்கள், மூன்று முகம், மெட்டி என்று மெல்ல ராதிகாவின் நடிப்பில் உருவான மாறுபாடு, பாக்யராஜ் உடன் இணைந்த ‘தாவணிக்கனவுகள்’ படத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
ஒரே நேரத்தில் தெனாவெட்டாகவும் அப்பாவித்தனமாகவும் அவரால் நடிக்க முடியும் என்பதை உணர்த்தியது. அதாவது, இரு வேறு துருவங்களில் நிற்கும் பாத்திரங்களில் அவரால் வெகு சுலபமாக ஜொலிக்க முடியும். கே.விஸ்வநாத்தின் ‘சிப்பிக்குள் முத்து’ போன்ற படங்கள் வெளியானபோதுதான், அந்த உண்மையைத் திரையுலகைச் சேர்ந்த பலர் புரிந்துகொண்டனர்.
பக்குவமான நடிப்பு!
எண்பதுகளின் இறுதி வரை மரத்தைச் சுற்றி டூயட் பாடுவதிலும், ரவுடிகளுடன் காமெடியாக சண்டை போடுவதிலும் ஈடுபட்டு வந்த ராதிகா, தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே தனது பாதையை மாற்றிக்கொண்டார்.
கேளடி கண்மணி, நினைவுச்சின்னம் போன்ற படங்கள் வெளியானபோது, இளமையான நாயகியில் இருந்து முதிர்ச்சி நிறைந்த பாத்திரங்களை அவர் ஏற்பார் என்ற நிலைமை உருவானது. அதனை கெட்டியாக ரசிகர்களுக்கு உணர்த்தியது
பாரதிராஜாவின் ‘கிழக்குச் சீமையிலே’. ’வயதான தோற்றமோ, அம்மா வேடமோ தனக்கு முக்கியமல்ல; தான் ஏற்கும் பாத்திரத்திற்குத் திரையில் முக்கியத்துவம் இருந்தால் போதும்’ என்று தான் தேர்ந்தெடுக்கும் படங்களின் வழியே அக்கருத்தை ராதிகா உணர்த்திய காலம் அது.
அந்த காலகட்டத்தில், இயக்குனர் வி.சேகரின் படங்கள் நடுத்தர வர்க்க குடும்பத்தினரை எளிதாகச் சென்றடைந்தன. ராதிகா நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தணா’வும் அவற்றில் ஒன்று.
தொடர்ந்து நம்ம அண்ணாச்சி, பவித்ரா போன்ற படங்களில் நடித்த ராதிகா, சத்யராஜ் இயக்கிய ‘வில்லாதி வில்லன்’ படம் முதலே முழுக்க அம்மா வேடத்திற்கு மாறினார். அதன்பிறகு சூர்யவம்சம், ஜீன்ஸ், பூமகள் ஊர்வலம், அமர்க்களம் என்று பல படங்களில் அவரது நடிப்பு பல்வேறு பரிமாணங்களில் அமைந்திருந்ததை நம்மால் காண முடிந்தது.
நடிக்கத் தொடங்கிய காலம் முதலே, தமிழிலும் தெலுங்கிலும் அதிகப் படங்களில் நடித்தார் ராதிகா. அதேநேரத்தில் மலையாளம், கன்னடம், இந்திப் படங்களில் குறைவாகவே தோன்றினார். 2000ஆவது ஆண்டுக்குப் பின்னர் நிலைமை மாறியது. அந்த காலகட்டத்தில், அவரது கவனம் முழுக்க சின்னத்திரை நோக்கித் திரும்பியது.
தொண்ணூறுகளில் வெளியான பெண், விடுதலை தொடர்களில் நடித்தபோதும், முழுக்க சீரியல்களில் நடிப்பது எனும் முடிவை நோக்கி நகர சி.ஜே.பாஸ்கரின் ‘சித்தி’ காரணமாக அமைந்தது. அத்தொடருக்குக் கிடைத்த வரவேற்பு பட்டிதொட்டியெங்கும் ராதிகாவுக்கு மீண்டும் புகழைத் தந்தது. தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, சித்தி2 என்று பல சீரியல்களில் நடித்தார்.
கிட்டத்தட்ட ‘சீரியல் ராணி’ என்று சொல்லும் அளவுக்குத் தனது நடிப்பால் சின்னத்திரை ரசிகர்களை அவர் மகிழ்வித்தார். நடிப்பு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, கதையாக்கம் என்று பல பிரிவுகளில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வருபவர் ராதிகா. இந்த பன்முகச் செயல்பாட்டுக்கு, அவரது நீண்டகாலத் திரை அனுபவமே பக்கபலம் என்று தாரளமாகச் சொல்லலாம்.
தீர்மானமிக்க செயல்பாடு!
தொடக்க காலத்தில் தனது நடிப்பு மீது எதிர்மறை விமர்சனங்கள் குவிந்தபோது, அதனை மெல்ல பாராட்டுகளாக மாற்றியவர் ராதிகா. ஆனால், அன்று முதல் இன்று வரை நடை உடை பாவனை என்று தோற்றம் சார்ந்த மாறுபாடுகளுக்கும் அவர் முக்கியத்துவம் தந்து வருகிறார்.
எந்த வேலையைச் செய்தாலும், அதில் சிரத்தையை வெளிப்படுத்தியாக வேண்டும் என்பதைத் தொடர்ந்து வருகிறார். மிக முக்கியமாக, பணி சார்ந்தும் தனிப்பட்ட வாழ்விலும் தனக்கென்று தனித்துவமான நியதிகளைப் பின்பற்றி வருகிறார். அவரது பேட்டிகளை, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, பொது நிகழ்வுகளைக் கண்டாலே அதனை உணர முடியும்.
சாதாரண மனிதர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதை ராதிகாவின் பொதுவெளிச் செயல்பாடுகளில் இருந்து உணர முடியும். அதையும் மீறி, வாழ்க்கை என்பது கொண்டாட்டங்களுக்கானது என்ற அவரது மனவோட்டத்தையும் அவற்றில் கண்டெடுக்க முடியும். அந்த மனப்பாங்கே இன்றுவரை பல்வேறு கற்களையும் முட்களையும் தாண்டி அவரது திரையுலகப் பயணத்தை இன்றும் தொடர வைத்துக் கொண்டிருக்கிறது.
இத்தனை ஆண்டுகால வாழ்வில், பக்குவத்தையும் முதிர்ச்சியையும் தாண்டி தனது பார்வையில் ராதிகா கொண்டிருக்கும் தீர்க்கமும் தெளிவும் ஆச்சர்யத்தை ஊட்டவல்லது. அந்த இடம் நோக்கி நகர்வதே, இந்த கணத்தில் திரையுலகில் சாதிக்கத் துடிப்பவர்களின் கனவாக இருக்கும்.
அந்த வகையில், ராதிகாவின் திரைப்பயணம் சீர்மை மிகுந்த ஏறுமுகமாய் இருந்து வருகிறது என்று தாராளமாகச் சொல்லலாம். எதிர்காலத்திலும் அவர் தனது திரைப்பயணத்தில் பல மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். தொடர்ந்து தனது நடிப்பால் ரசிகர்களை என்றென்றும் மகிழ்வித்துக் கொண்டிருக்க வேண்டும்!
உதய் பாடகலிங்கம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா!
”புரட்சி தொண்டன் நாளிதழ்… நீங்களும் பங்காளிகள் தான்”- ஓபிஎஸ்
கிழக்கே போகும் ரயிலில் கலகலவென்று சிரித்த அந்த அப்பாவிப் பெண்ணா, இன்று இந்த அளவில். இருந்தாலும் அந்தப் படத்திலும் வில்லன் தன்னிடம் எக்குத்தப்பாக் நெருங்கும்போது பார்க்கும் அந்த கோபப் பார்வை அவரது நடிப்புக்கு ஆரம்ப சான்று. “பொன்மானைத் தேடி நானும்..”- இந்த பாட்டில் அவரது குழந்தை முகம் சோகத்தைப் பிழிந்ததும் மறக்க முடியாதது…