சே… இவர்கள் எவ்வளவு கோழைகள்! மோகன்லால் பற்றி நடிகை பார்வதி

Published On:

| By Kumaresan M

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் நடித்து இயக்கிய ப்ரோ டாடி என்ற படம் வெளி வந்தது. இந்த படத்தில் நடித்த துணை நடிகை ஒருவரை அந்த படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய மன்சூர் ரசீத் என்பவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்த போது, ஹோட்டல் அறையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மயக்கமடைய செய்து இந்த கொடூரத்தை மன்சூர் ரசீத் அரங்கேற்றியுள்ளார். அதோடு, அந்த நடிகையின் நிர்வாண போட்டோவை அனுப்பி மிரட்டி அடிக்கடி பணம் பறித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட துணை நடிகை ஹைதராபாத் கச்சிபவுலி போலீசாரிடத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அரசியல்வாதிகள் உதவியுடன் மன்சூர் ரசீத் அப்போது தப்பி விட்டார். கொல்லத்திலுள்ள அவரின் வீட்டுக்கு போலீசார் சென்ற போது அங்கும் மன்சூர் ரசீத் இல்லை. எனினும், வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும் பல படங்களில் போலீசாருக்கு தெரியாமல் அவர் வேலை பார்த்து வந்தார்.

இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் இருவராலும் குற்றவாளியை கைது செய்ய முயலவில்லை என்று பாதிக்கப்பட்ட நடிகை குற்றம் சாட்டியிருந்தார். இன்று வரை மன்சூர் ரசீத் கைது செய்யப்படவில்லை.

அதே போல 2019 ஆம் ஆண்டு இயக்குநர் சுதீஷ் சங்கர் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் அளித்தார். ஆனால், நேற்றுதான் அந்த நடிகையிடம் போலீசார் வாக்குமூலமே பெற்றுள்ளனர்.

இதே போன்று ஏராளமான நடிகைகள் போலீசில் புகார் அளித்தாலும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாததால், கேரள சினிமா சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீண்ட காலமாக போராடி வந்த நடிகை பார்வதி, மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு பதவி விலகியது கோழைத்தனமானது என்றும் பொறுப்பை தட்டிக்கழிப்பவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ரூ.75 லட்சம் வரை வீட்டு கடன்… ‘கூட்டுறவு’ செயலி அறிமுகம்!

தமிழ் சினிமாவிலும் பாலியல் வன்கொடுமை : விரைவில் குழு – விஷால் அறிவிப்பு!