நடிகை மீனா தனது திருமண நாளில் தன் கணவர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் 2009இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது பத்து வயதில் நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகா நடிகர் விஜய்யின் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இந்த வருட ஆரம்பத்தில் நடிகை மீனா, அவரது கணவர், குழந்தை என குடும்பத்தில் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தனர். ஆனால், மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா குணமானாலும் நுரையீரல் பாதிப்பு இருந்தது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் மாற்று நுரையீரலுக்கு காத்திருந்தார்கள். இந்த நிலையில்தான் தொற்று தீவிரமாகி, சிகிச்சை பலனின்றி இந்த மாத தொடக்கத்தில் வித்யாசாகர் இறந்தார்.
அவர் இறப்பு குறித்து எந்த ஒரு தவறான செய்தியும் பரப்ப வேண்டாம் எனவும் மீனா வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் நேற்று அவர்களது 13ஆவது திருமண தினம். கணவர் இறப்புக்குப் பிறகு வந்த திருமண நாள் என்பதால் அவரை நினைவுகூர்ந்து அவரது புகைப்படத்தை பகிர்ந்து மீனா உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நீங்கள் எங்களுடைய அழகான ஆசீர்வாதம். ஆனால், எங்களை விட்டு சீக்கிரமே சென்று விட்டீர்கள். எப்பொழுதும் எங்கள் இதயத்தில் நீங்கள் இருப்பீர்கள். இது போன்ற சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாய் இருந்து ஆறுதலும், அன்பும், பிரார்த்தனைகளையும் கொடுத்த மில்லியன் கணக்கான நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய குடும்பமும் நானும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். நீங்கள் நிச்சயம் எங்களுக்கு தேவை.
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என எங்கள் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பை நாங்கள் உணர்கிறோம்’ என அந்தப் பதிவில் உருக்கமாக கூறியுள்ளார் மீனா.
-ஆதிரான்