ராஜராஜனை இந்துவாக்க முயற்சி செய்கிறார்கள் என்று பேசிய இயக்குனர் வெற்றிமாறனுக்கு, நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1 ஆம் தேதி நடந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மணிவிழாவில் பேசிய வெற்றிமாறன், “தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள்” என பேசியிருந்தார். வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு ஒரு சேர ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.
இந்த நிலையில், வெற்றி மாறனின் இந்தப் பேச்சுக்கு நடிகை குஷ்பூ பதிலளித்துள்ளார். சென்னையில் நேற்று காலை நடைபெற்ற “ஒன் வே” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது, “இயக்குநர் வெற்றி மாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதைத்தான் பார்க்க வேண்டும். அனைத்திலும் தப்பு கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தன்னுடைய நோக்கத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்றும் அவர் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வரலாறு பற்றி ஆய்வு இல்லாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்க மாட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தமிழ் படம் தெலுங்கு படம் என்று இல்லை. இது ஒரு பான் இந்தியா படம். தமிழர்களின் வரலாறை கூறியிருக்கும் படம். முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை” என்றார் குஷ்பு.
–இராமானுஜம்
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை!
சிறப்புக் கட்டுரை: ராஜ ராஜ சோழன் இந்துவா?