சமூக ஊடகங்களில் அதிகம் தோன்றுவதால் திரையில் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என நடிகை கஜோல் கூறியுள்ளார்.
நடிகை கஜோல் பாலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். தமிழிலும் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து உள்ளார். அவர் திரை பயணத்தில் 30 ஆண்டுகளை கடந்துள்ளார்
நடிகை கஜோல் தற்போது சமூக ஊடகங்களில் நேரம் செலவிடுவதை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது,
”பிரபலங்கள் அதிகளவில் சமூக ஊடகங்களில் தோன்றுவதன் மூலம் அவர்கள் தங்களது நட்சத்திரக் தன்மையை இழக்கிறார்கள். பாதி நேரம் திரையிலும் பாதி நேரம் சமூக ஊடகங்களிலும் நேரம் செலவிடுவது நல்ல காரியம் தான். அதனை நான் குறை கூறவில்லை. அவர்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறார்கள் என்பதை நான் பாராட்டுகிறேன். நானும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் எனது புகைப்படங்களை பதிவிடுவேன். இருப்பினும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் நம்மை பார்ப்பதனால் திரையில் பார்ப்பதற்கு அதிகம் விரும்ப மாட்டார்கள். இதனால் நடிகர்களது நட்சத்திரத் தன்மை குறைந்துவிடுகிறது.
மேலும் பிரபலங்களாக இருந்தவர்கள் மட்டும் தான் திரையில் தெரிந்தனர். ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் மக்கள் வருகையால் யார் வேண்டுமானலும் பிரபலம் ஆகலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது நீங்கள் பல விஷயங்களில் பிரபலமாகலாம். உங்கள் தலைமுடி, நகங்கள் ஆகியவற்றை வித்தியாசமாக காட்டுவதன் மூலமாகவும், வித்தியாசமான செயல்களை செய்வதன் மூலமாகவும் நீங்கள் பிரபலமாகலாம்.
இறுதியாக அவர் உங்கள் யாரையாவது சமூக ஊடகங்களில் பார்க்க முடியும் என்றால் ஏன் திரையில் பார்க்க வேண்டும்?” என்று கேட்டுள்ளார் கஜோல்.
–மோனிஷா