என்.டி.ராமாராவை அறிமுகப்படுத்தியதே பெண் இயக்குநர்தான்… யார் இந்த சிட்டஜல்லு கிருஷ்ணவேணி?

Published On:

| By Kumaresan M

என்.டி.ராமாராவை திரையுலகில் அறிமுகப்படுத்திய நடிகையும் இயக்குநருமான சிட்டஜல்லு கிருஷ்ணவேணி மரணமடைந்தார். அவருக்கு வயது 102.

தெலுங்கு சினிமாவில் அந்த காலத்தில் பல ஹிட் படங்களில் நடித்தவர் சிட்டஜல்லு கிருஷ்ணவேணி. இவரது தந்தை கிருஷ்ணராவ் டாக்டர் ஆவார். கோதாவரி மாவட்டம் பங்கிடி என்ற இடத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே அனுஷயா என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

1939 ஆம் ஆண்டு வெளியான மல்லி பெல்லி, 1942 வெளியான பக்த பிரகலாதா, 1944 ஆம் ஆண்டு வந்த பீஷ்மா 1947ஆம் ஆண்டு வெளியான கொல்லபாமா போன்றவை கிருஷ்ணவேணி நடித்த ஹிட் படங்கள் ஆகும். சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

நீண்ட காலமாக சென்னையில் வசித்த இவர் மிர்ஷாபூரம் ராஜாவை மணந்தார். இவரது கணவரும் சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்தான். சென்னை தேனாம்பேட்டையில்தான் இவர்களது ஸ்டுடியோ இருந்தது.

திருமணத்துக்கு பிறகு, கிருஷ்ணவேணி தனது மகள் மேகா ராஜலட்சுமி அனுராதாவின் பெயரில் எம்.ஆர்.ஏ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவரின் தயாரிப்பு நிறுவனம் பெங்காலி நாவல் விப்ரதாசை தழுவி மனா தேசம் என்ற தெலுங்கு படத்தை தயாரித்தது. இந்த படத்தில்தான் தெலுங்கு சூப்பர்ஸ்டார் என்.டி. ராமாராவ் முதன் முதலில் அறிமுகமானார்.

தெலுங்கு சினிமாவில் பல முக்கிய நடிகர்கள், பாடகர்கள், இயக்குநர்களை கிருஷ்ணவேணி அறிமுகப்படுத்தியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மகள் அனுராதா இப்போதும் படத் தயாரிப்பில் ஈடுபடுகிறார்.

தற்போது, 102 வயதான சிட்டஜல்லு கிருஷ்ணவேணி வயது மூப்பு காரணமாக ஹைதரபாத்திலுள்ள அவரின் வீட்டில் பிப்ரவரி 16 ஆம் தேதி மரணமடைந்தார். ஏராளமான சினிமா கலைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share