பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து நடிகை அமலாபாலின் முன்னாள் காதலனை விழுப்புரம் போலீஸ் கைது செய்திருக்கிறது.
விக்ரமுடன் தெய்வத்திருமகள், விஜய்யுடன் தலைவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால்.
இயக்குநர் ஏ.எல்.விஜயை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு 2017ஆம் ஆண்டே விவாகரத்துப் பெற்றார்.
அதற்கு பின் பிரபல பாடகரும், தயாரிப்பாளருமான பவிந்தர் சிங் என்பவருடன் அமலாபால் காதலில் இருந்து வருவதாக பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், பவிந்தர் சிங்கும் அமலாபாலுடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.
ஆனால் தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று அமலாபால் மறுப்பு தெரிவித்தார். அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை அமலாபால் இன்று(ஆகஸ்ட் 30) விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் திரைப்பட தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கியதாகவும்,
பின்னர் 2018ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பெரியமுதலியார் சாவடியில் தங்கியிருந்த போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இருவரும் நெருக்கமாக பழகிய போது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டுவதாகவும்,
கொலை மிரட்டல் விடுத்து தனது பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்துவிட்டதாகவும் ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது நடிகை அமலாபால் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடந்தி வந்தனர்.
இந்நிலையில் பெரியமுதலியார்சாவடியில் தங்கி இருந்த நடிகை அமலாபாலின் ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத்தை விழுப்புரம் போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பவ்நிந்தர் சிங் தத்தை ரகசிய இடத்தில் வைத்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கலை.ரா
கிளாமர் இல்லாததால் படத்தை யாரும் வாங்கல : அமலா பால்