உங்களுடைய நண்பர்களோ அல்லது தோழிகளோ யாரேனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தால், அவர்களை மீட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கல்லூரி மாணவர்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பெருநகர காவல் துறையின் மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை’ எனும் பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 23) மாலை நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கு உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை திறந்து வைத்தார். அனைவரோடும் சேர்ந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

காவல்துறை அதிகாரிகள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் போதை பொருளுக்கு எதிரான ‘எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’ எனும் விழிப்புணர்வு வாசகத்தை கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து முழங்கி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
போதை பொருளுக்கு எதிராக பாடல்கள், மைம் எனப்படும் கலை வடிவம், சிறு நாடகம் போன்றவற்றின் மூலமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “இங்கு கூடியிருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் சந்தோஷமாக செலவழித்து வருகிறீர்கள் என நம்புகிறேன்.
ஆனால் இந்த சமூகத்தில் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறார்கள்.
உங்களுடைய நண்பர்களோ அல்லது தோழிகளோ யாரேனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தால், அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்து அவர்களை இதிலிருந்து மீட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவர்களை போதை பொருளுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.” என்றார்

மேலும் அவர், “போதை பொருளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம்.
இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகத்தை அனைவரும் ஒன்றிணைந்து கூறுவோம் ‘எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’ என்று,
போதை பொருளை பயன்படுத்தாமல், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வில் முழுமையாக ஈடுபட்டு சமூக நலனை காப்போம்” என்றார்.
இராமானுஜம்
”கணவரின் சொத்துகளில் மனைவிக்கும் சம உரிமை உண்டு”: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!