சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர்கான், விஷ்ணு விஷால்… படகில் சென்று மீட்பு!

Published On:

| By Manjula

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோரை படகில் சென்று மீட்பு படையினர் காப்பாற்றி இருக்கின்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. குறிப்பாக வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, ஓ.எம்.ஆர், காரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு இருக்கின்றன.

மற்ற பகுதிகளை விட இந்த இடங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருப்பதால் அரசு அதிகாரிகள், மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று (டிசம்பர் 5) காலை நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீடு மற்றும் சுற்றுப்புறங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், உதவி வேண்டும் என தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு சென்று நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை படகுகளில் மீட்டனர்.

இதை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஷ்ணு விஷால்,” எங்களை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு நன்றி. இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசு சிறப்பாக பணிபுரிந்து வருகிறது. அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி,” என தெரிவித்து உள்ளார்.

விஷ்ணு விஷாலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானும் அந்த படகில் இருந்ததை  பார்த்து, ”என்னப்பா மனுஷன் சத்தமே இல்லாம நிக்குறாரு” என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். தன்னுடைய அம்மா ஜீனத் ஹூசைனின்(89) மருத்துவ சிகிச்சைக்காக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான் சமீபகாலமாக சென்னையில் தங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷாலின் இந்த பதிவை பார்த்த திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா, ” தமிழ்நாடு அரசின் செயலை பாராட்டியதற்கு நன்றி விஷ்ணு விஷால். உங்கள் அருகே இருக்கும் சிறந்த மனிதருக்கும் நன்றி. மீட்பு உதவிகள் பெறுவதற்கு அவர் எந்த வகையிலும் தன்னுடைய புகழை அவர் பயன்படுத்தவில்லை.

தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தேவையான விஷயங்களை சாதிப்பவர்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த பாடமாக இருக்கிறார். புயலின் தீவிரத்தை உணர்ந்து உதவிகள் கிடைக்கும் வரை காத்திருக்கும் நடிகர் அமீர் கான் போன்றவர்களுக்கு நன்றி. மீட்பு பணிகள் திட்டமிட்டபடி தொடரும்,” என தெரிவித்து உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… ஆனால் மீண்டும் உள்ளே வர முடியுமா?