ரூ.4 கோடி கையில் வைத்துக்கொண்டு சினிமா தயாரிக்க யாரும் வர வேண்டாம் என்று நடிகர் விஷால் பேசியிருந்த நிலையில் சிறிய பட்ஜெட் திரைப்படங்களை தடுப்பது பாசிச மனப்பான்மை என்று இயக்குனர் போஸ் வெங்கட் பதிலளித்துள்ளார்.
விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம், `மார்க் ஆண்டனி’. மினி ஸ்டூடியோ சார்பில் வினோத் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.
விஷால் நடிப்பில் வெளியான முந்தைய படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் மார்க் ஆண்டனி பெரும் வரவேற்பையும், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றிபெற்றது.
இதையடுத்து இதன் வெற்றிவிழா செப்டம்பர் 21 அன்று சென்னையில் நடைபெற்றது. விஷால், எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், நிழல்கள் ரவி உட்பட படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறிய விஷால் பட்ஜெட் படங்கள் சம்பந்தமான கேள்விக்கு பதில் கூறுகிறபோது,
“ஒரு கோடியில் இருந்து ரூ.4 கோடி வரை கையில் வைத்துக்கொண்டு தயவு செய்து சினிமா தயாரிக்க வராதீர்கள். அதில் உங்களுக்குச் சல்லிக்காசு கூட திரும்பக் கிடைக்காது.
இதுதான் உண்மை. அந்தப் பணத்தில் நிலத்தை வாங்கிப் போடுங்கள். ஏற்கெனவே 120 திரைப்படங்கள் வெளியிட முடியாமல் காத்துக் கிடக்கின்றன. அதனால் தயவு செய்து இன்னும் 2 வருடங்கள் வந்துவிடாதீர்கள்” என்று கூறியிருந்தார்.
விஷாலின் இந்தப் பதில் சிறுபட தயாரிப்பாளர்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விஷால் பதிலுக்கு நேரடியாக பதில் கூறாமல் மறைமுகமாக கன்னிமாடம் படத்தின் இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட் தன் முகநூல் பக்கத்தில் கடுமையாக பதிவை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதனை தற்போது சிறுபட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். போஸ் வெங்கட் தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது
“எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை,, இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இறைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை…
மக்களுக்கு பிரயோஜனமான தேவையான அவசியமான திரைப்படங்களை தராமல் தன் கஜானாக்களை மட்டும் நிரப்பும் திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்காமல்,
பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வரும் தயாரிப்பாளர்களை தடுத்து நிறுத்துவது, இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு, சாதியக் கொடுமை,
மன ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றை சினிமாக்களாக அறிவுரைகளாக அக்கறையுடன் சொல்லும் அருமையான சிறு திரைப்படங்களை தடுப்பது என்பது ஒரு விதமான பாசிச மனப்பான்மை.
தமிழகத்தில் தடுக்கப்பட வேண்டிய சினிமா என்பது, எடுக்க கூடாத சினிமா என்பது, யாருக்கும் உபயோகமில்லாமல், எந்தவித பயனையும் எந்த மக்களுக்கும் அளிக்காமல், வெறும் பாக்கெட்டை நிரப்பும் சினிமாக்கள், மொத்தம் 4 பேர் பணத்தை எடுத்துக் கொண்டு பிரித்துச் செல்லும் அந்த புத்திசாலிகள்,,,,.
அவர்களைத் தான் தடுத்து நிறுத்த வேண்டும் மாறாக சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது என்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கு சமம்…
இந்த பாசிச எண்ணம் யாரிடம் இருந்தாலும் அது தவறு” எனக்குறிப்பிட்டுள்ளார் போஸ் வெங்கட்.
இராமானுஜம்