தனக்கு எதிரான தயாரிப்பாளர் சங்கத்தின் சுற்றறிக்கைக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும்” என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு நிர்வாகிகள் கையொப்பமிடாத சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.
அதில் “கடந்த 2017- 2019 ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்தது.
2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி (Special Officer), சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ஒரு ஸ்பெஷல் ஆடிட்டரை நியமித்தார்.
அந்த ஸ்பெஷல் ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து அளித்த அறிக்கையில், அப்போது சங்கத்தில் இருந்த நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதில், சங்கத்தின் வங்கி கணக்கில் ஏற்கனவே வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மற்றும் 2017 – 2019 ஆண்டுகளில் வரவு – செலவு 5-கோடி ரூபாய் சேர்த்து சுமார் 12 கோடி ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சங்கத்திலிருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகையை சங்கத்துக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்று விஷாலுக்கு பலமுறை தெரியப்படுத்தியும், அவர் இதுநாள் வரை எந்தவிதமான பதிலும் தராமல் உள்ளார்.
ஆகவே, மேற்படி விஷயத்தினை சரிசெய்யும் பொருட்டு, ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரை அடிப்படையில் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த, மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி உள்ளிட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?
திரையுலகில் நிறைய வேலை உள்ளது. அதில் முறையான கவனத்தை செலுத்துங்கள். இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும். விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். இதற்கு முன் திரைப்படங்களை தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே… முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள். ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்” என தெரிவித்துள்ளார்.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : திமுக ஆர்ப்பாட்டம் முதல் மேட்டூர் அணை நிலவரம் வரை!
கிச்சன் கீர்த்தனா: காஷ்மீரி சாகு!
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா? நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை… சிக்கப் போகும் அரசியல் புள்ளி!